Header Ads



கடத்தல்காரன் வயிற்றில் இருந்து போதை பொருளை திருடிய டாக்டர்

ரஷ்யாவில் கடத்தல்காரன் வயிற்றில் இருந்து ஆபரேஷன் செய்து எடுத்த போதை பொருளை திருடிய டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள சிறிய நகரம் போகோடோல். இங்கு அடிக்கடி தஜிகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடத்தல்காரர்கள் ஊடுருவி போதை பொருட்களை ரஷ்யாவுக்குள் கடத்துவது வழக்கம். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போலீசார் ரயில் உள்ளிட்ட பொது வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி இது போன்ற கடத்தல்காரர்களை கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த கடத்தல்காரர்கள் சில நேரம் தாங்கள் கடத்தி வரும் போதைப் பொருட்களை உடல் உறுப்புகளில் மறைத்து எடுத்து வருகின்றனர். இதனால் அவற்றை அறுவை சிகிச்சை மூலம் எடுப்பதற்காக சைபீரியாவின் கிராஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் போதை மருந்து கடத்தல் தடுப்பு பிரிவில் டாக்டர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்பு அவ்வாறு பிடிபட்ட ஆசாமி ஒருவனின் வயிற்றில் 5 கிராம் போதைப் பொருள் இருந்தது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. அதனை அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் ஆபரேஷன் மூலம் அகற்றினார். ஆனால் பின்னர் விசாரணையின் போது கடத்தல்காரனின் வயிற்றில் இருந்து அகற்றிய அந்த போதைப் பொருள் மாயமானது தெரியவந்தது.

ஆபரேஷனின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும், டாக்டரையும் சோதனை செய்த போது டாக்டர் அந்த போதைப் பொருளை தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து டாக்டரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கடத்தல் கும்பலுக்கும், டாக்டருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரிக்கின்றனர். டாக்டரின் பெயரை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்த செய்தி ரஷ்யநாளேடுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.