Header Ads



சமூகத்துக்காக சுதந்திரமாக குரல் கொடுக்க முடியாது என்பது உணரப்பட்டுள்ளது

(எஸ்.அஷ்ரப்கான்)

தேசிய சூறா சபைக்காக முயற்சி செய்தவர்கள் திடீரென தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் குதித்துள்ளமை மூலம் தேசிய சூறா சபைக்கான முயற்சி என்பது வெறுமனே முஸ்லிம் மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை என எமது கட்சி கூறியது இன்று உண்மையாகியுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சியின் பிரதி தலைவர் மௌலவி அஸ்வர் பாக்கவி கூறினார். கொழும்பு தாருள் குர்ஆனில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக  அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை முஸ்லிம்கள் தங்களது சுய நல அரசியல்வாதிகளினால் மிக மோசமாக ஏமாற்றப்பட்ட சூழ்நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கையாலாகாதவர்கள் என்று தெரிந்து கொண்டே இத்தகைய ஏமாற்று அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு ஏமாந்து வாக்களித்து விட்டு ஏமாந்து விட்டோமே என கூறுவதை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது.

கடந்த காலத்தில் இனவாதிகளால் ஏற்பட்ட ஹலால், அபாயா, பள்ளிவாயல் உடைப்பு விடயங்களில் முஸ்லிம் அதிகார அரசியல்வாதிகளின் சாயம் வெளுத்து விட்டது. பதவிகளுக்கு அடிமையாகியுள்ள அரசியல்வாதிகளால் சமூகத்துக்காக சுதந்திரமாக குரல் கொடுக்க முடியாது என்பது உணரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசியல் சார்பற்ற தேசிய ஆலோசனை (சூறா) சபை ஒன்றை அமைப்பதன் மூலம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தேசிய மட்டத்தில் ஆலோசித்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமென சிலர் கூட்டங்களை நடத்தினர். உலமா சபையுடன் இணைந்ததாக இது செயற்படும் என்று அறிக்கைக்கு மேல் அறிக்கைகளை விட்டனர்.

இவ்வாறு ஆலோசனை சபை அமைப்பதில் தீவிரமாக இருந்தவர்கள் திடுதிப்பென தமிழ் கூட்டமைப்பை சந்தித்து அவர்களுடன் தேர்தல் கூட்டு செய்து கொண்டதன் மூலம் இவர்களது தேசிய சூறா சபை என்ற சிந்தனையின் கபடத்தனம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தங்களது சொந்த அரசியல் நலன்களுக்காகவே இவர்கள் தேசிய சூறா சபை என மக்களை பிழையாக வழிநடத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

எம்மை பொறுத்த வரை உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி மூலம் மட்டுமே இந்த நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளை வெல்ல முடியும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளவர்கள். அந்தக் கருத்தை வெறுமனே ஒரு கருத்தாக வைத்துக்கொண்டிராமல் செயலிலும் காட்டி வருபவர்கள். அதனை விடுத்து இத்தகைய சூறா சபைகள் என்பதெல்லாம் தெரிந்து கொண்டே செய்யும் ஏமாற்று வேலைகள் என்பதை எமது கட்சித் தலைவர் முபாறக் மௌலவி அவர்கள் இது சம்பந்தமாக இவர்களால் நடத்தப்பட்ட கூட்டங்களில் பகிரங்கமாக, துணிச்சலுடன் தெரிவித்து வந்துள்ளார். அவரது கருத்து இன்று உண்மையாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார். 

5 comments:

  1. பதவிகளுக்கு அடிமையாகி உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் மட்டுமல்ல,உலமா கட்சியின் தலைவர் கூட சில காலங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ஆலோசகராக இருந்து சாயம் போனவர், என்பதை அறிந்து தான் தேசிய சூராவுக்கு முனைந்தவர்கள், எவ்வளவு தான் இடர் வந்தாலும் கொள்கை பற்றுறுதி கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தேர்தல் ஒப்பந்தம் செய்துள்ளனர் என்றும் கருத முடியும் அல்லவா?

    ReplyDelete
  2. உலமா கட்சியின் தலைவர் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதிக்கு ஆதரவான ஒரு கட்சியின் தலைவராகவே ஜனாதிபதிக்கு அருகில் இருந்தார். அவர் ஜனாதிபதியிடம் எந்த சம்பளமோ சலுகையோ பெறவில்லை. அவர் சுதந்திரமதன முஸ்லிம் உரிமைப்போராளி என்பதால் தான் தம்புள்ள பள்ளி தாக்குதலை தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து உலமா கட்சியை வாபஸ் வாங்கிக்கொண்டார். இந்த தற்றுணிவு எந்தவொரு கட்சித் தலைமைக்கும் இது வரை வரவில்லை. இந்த உண்மை கூட தெரியாமல் கொமான்ட் பண்ணுபவர் எப்படித்தான் முஸ்லிமாக இருக்க முடியும்?

    ReplyDelete
  3. ஜனாதிபதிக்கு ஆதரவான கட்சியின் தலைவர் எனும்போது....அவர் ஜனாதிபதியிடம் இருந்து சலுகையோ சம்பளமோ பெறவில்லை என்றாலும்...எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் ஒட்டு மொத்த எதிர்ப்பை ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல அரசுக்கு சாமரம் வீசும் அணைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் எதிராக கன கச்சிதமாகவே செய்கிறார்...அந்த வகையில் பாராட்டுக்கு உரியவர் தான் ஆனால் அரசியல் பதவி ஏதும் இருந்தால் இவ்வாறன அறிக்கைகள் வருமா என்பதும்.... சிந்தைக்குரியதே, கொமெண்ட் பண்ணுவதற்கும் உண்மை முஸ்லிமுக்கும் உள்ள தொடர்பும் கேள்விக்குரியதாகும் ???

    ReplyDelete
  4. Ulamaa party can do only kattham paathyas, what they did so far for muslims?

    ReplyDelete
  5. அரசியல் பதவி மூலம் அரசுக்கு அடிமையாக இருத்தல் என்பது அரசின் மூலம் ஏதாவது பதவியில் அமர்த்தப்பட்டால் மட்டும்தான் என்றில்லை. அரசுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் அவர் சுய நலன் உள்ளவராக இருந்தால் சுதந்திரமாக குரல் எழுப்ப மாட்டார். ஆகக்குறைந்தது அரசுக்கு ஆதரவான அமைச்சர் அல்லாத சாதாரண எம் பியின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தால் அவர்கூட அந்த எம்பிக்கு எதிராக குரல் எழுப்ப மாட்டார். காரணம் ஏதும் பிச்சை கிடைக்காமல் போய் விடுமே என்ற அச்சம். இதை பொதுமக்களிடம் கூட பரவலாக காணலாம்.
    இந்த வகையில் உலமா கட்சித்தலைவர் ஜனாதிபதியிடம் பதவி பெறா விட்டாலும் ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக இருந்தவர் என்பது உலகறிந்த விடயம். வெறு எதையும் எதிர் பார்க்காமல் அந்த நெருக்கம் என்ற அந்தஸ்த்தை மட்டும் வைத்துக்கொண்டே அவரால் பல அமைச்சர்களிடம் சென்று பல கொந்தராத்துக்களை பெற்று வாழ முடியும். அத்துடன் அந்த நெருக்கத்தை வைத்து சமூகத்துக்காக அவர் பல சாதித்துள்ளார் என்பது ஊடகங்களுடன் தொடர்புள்ளவர்களுக்கு தெரியும். இருந்தும் அதையெல்லாம் தம்புள்ள பள்ளியை தொடர்ந்து வீசி விட்டதை புரிய வேண்டும். உண்மை எதுவென அறியாமல் ஒருவரை குற்றம் சொல்பவர் உண்மையான முஸ்லிமாக மாட்டார். அறியாவிட்டால் பதில் சொல்தல் என்ற வகையில் இல்லாது கேள்வி கேட்டல் என்ற முறையில் பதிவிடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.