Header Ads



நீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை!

(குர்ஆன் மலர்)

திருக்குர்ஆன் வசனங்களில் சில நோய் நிவாரண சக்தி கொண்டவை.

நபித்தோழர் அபூ ஸஈத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்;

நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் அங்கு அருகாமையில் தங்கி இருந்த வேளையில் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது.

அவனுக்காக அவர்கள் எல்லா சிகிச்சை முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!" என்று கூறினர்.

அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!" என்றார்.

 அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.." என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார்.

வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்!" என்று ஒருவர் கேட்டபோது, 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!" என்று ஓதிப் பார்த்தவர் கூறினார்.

நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள். (நூல்: புகாரி)

மேற்படி சம்பவத்தில் இருந்து திருக்குர்ஆனின் தோற்றுவாய்  எனப்படும் முதல் அத்தியாயம் நோய் நிவாரணியாக உள்ளது என்பதை உணரலாம். நாம் படைத்த இறைவன் மீது முறைப்படி நம்பிக்கை கொண்டு இதைப் பொருளுணர்ந்து நோயாளியின் மீது ஓதி ஊதினால் இறைவன் நாட்டமுமிருந்தால் அது நிவாரணம் அளிக்கும்.  அந்த அத்தியாயத்தின் அரபி வசனங்களின் தமிழ் ஒலிவடிவமும் பொருளும் கீழே தரப்படுகின்றன.

திருக்குர்ஆன் முதல் அத்தியாயம் :

.    1. (B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

.    2. அல்ஹம்து லில்லாஹி ர(B)ப்பில் ஆலமீன்.

.    3. அர்ரஹ்மானிர் ரஹீம்.

.    4. மாலிகி யவ்மித் தீன்

.    5. இய்யாக்க நஉ(B)புது வஇய்யாக்க நஸ்தஈன்.

.    6. இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம்

.    7. ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹீம் அய்ரில் மக்லூ(B)பி அலைஹீம் வலழ்ழால்லீன் – ஆமீன்

பொருள்:

.    (1. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)

.    2. அனைத்துப் புகழும் அனைத்து உலகையும் படைத்து பரிபாலித்து வரும்  அல்லாஹ்வுக்கே உரியது.

.    3. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

.    4. இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி.

.    5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

.    6. எங்களை நேரான வழியில் நடத்துவாயாக

.    7. நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் நடத்துவாயாக,. அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியும் அல்ல.

.    ஆமீன்- எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக)

முக்கிய குறிப்பு: 

இந்த அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் இறைவனே நமக்கு கற்றுத்தரும் பிரார்த்தனைகள். இங்கு நான்காவது வசனத்தை மிக ஆத்மார்த்தமாக கூற வேண்டும் "இறைவா படைத்தவனாகிய உன்னை மட்டுமே வணங்குவோம். உன்னையல்லாது வேறு யாரையும் தெய்வமாக பாவிக்க மாட்டோம்.அவைகளிடம் பிரார்த்திக்கவோ உதவி கோரவோ மாட்டோம்" என்ற உறுதி மொழியை இதன் மூலம் நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம் என்பதை உணர்க! நம் பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இது ஒரு நிபந்தனை என்பதை அறிக!

4 comments:

  1. thayawu seithu hadees ilakkangalaiyum podungal

    ReplyDelete
  2. i am waiting for, hathees no. is it saheeh?

    ReplyDelete
  3. இந்த ஹதீத் மூலம் குரானை கொண்டு ஓதிப்பார்கலாம். ஹதீத் இலக்கத்தை தயவு செய்து இடுங்கள் .

    ReplyDelete
  4. In the last para, the subject should be '5th sentence' and not 4th, please correct it.

    Worthy medicament, please try to bring more. Jasaak Allaah hairan

    ReplyDelete

Powered by Blogger.