சண்டே லீடர் உதவி ஆசிரியர் மந்தனா இஸ்மாயிலை படுகொலை செய்வதற்கு முயற்சியா?
சண்டே லீடர் பத்திரிகையின் உதவி ஆசிரியரும், இலங்கை ஜனரஞ்சக ஊடகவியாளர்களின் தொழிற்சங்கத்தின் தலைவருமான மந்தனா ஸ்மாயிலின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத ஆயுதம் தாங்கிய குழு ஒன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பம்பலபிட்டி – கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் வீதியில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த குழுவுக்கும், காவற்துறையினருக்கும் இடையில் இன்று அதிகாலை துப்பாக்கி மோதல் ஒன்று இடம்பெற்றது.
இதில் குறித்த ஆயுதம் தாங்கிய குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
அந்த குழுவின் மேலும் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன், காவற்துறை அதிகாரிகள் ஐந்து பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு காவற்துறை அதிகாரி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மந்தனா ஸ்மாயில், இன்று அதிகாலை 2.30 அளவில் தமது வீட்டுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழு, தமது வீட்டில் ஆவனங்கள் சிலவற்றை தேடியதாக தெரிவித்தார்.
தாம் காலை 2.30 அளவில் உறக்கத்தில் இருந்து விழித்த போது, சிலர் தமது வீட்டினுள் நுழைந்திருப்பதை உணர்ந்ததாகவும், எனினும் இது குறித்து அறிவிக்க முடியாதவாறு தமது தொலைபேசிகளை அவர்கள் துண்டித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முடியாத நிலையில் அச்சமடைந்த தமது கணவர் காவற்துறையினருக்கு அறிவித்ததைத் தொடர்ந்தே, சம்பவ இடத்துக்கு காவற்துறையினர் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தகவல் கிடைக்கவில்லைஎன்று தெரிவித்த காவற்துறை ஊடகப்பேச்சாளர், தொடர்ந்து விசாரணை இடம்பெறுவதாக தெரிவித்தார்.

Post a Comment