ஏறாவூரில் இளைஞர் விவசாயக் கழகத்தினால் மாபெரும் விவசாயக் கண்காட்சி!
(அப்துல்லாஹ்)
மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் இளைஞர் விவசாயக் கழகத்தினால் மாபெரும் விவசாயக் கண்காட்சியொன்று இன்று சனிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏறாவூர் தாமரைக்கேணியில் இடம் பெறும் இந்த விவசாயக் கண்காட்சியில் பல்வேறுபட்ட காய்கனி, இலைக்கறி, மரக்கறி, மூலிகைகள், அழகுத் தாவரங்கள், மற்றும் நீண்ட காலப்பயன் தரும் கனிமரங்கள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
விவசாயக் கண்காட்சி ஒருங்கிணைப்பு ஏற்பாட்டாளர் எம்.எல். அப்துல்றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம். ஹுஸைன், பிரதேச விவசாயப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். ஹரிஸ், விவசாயப் போதனாசிரியர் எம். ஜமால்தீன் ஆகியோரும் இன்னம் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
வீட்டுத் தோட்ட உற்பத்தியை அபிவிருத்தி செய்து நாட்டின் விவசாயத் துறையினை மேம்படுத்துவதோடு மறைந்து கிடக்கும் விவசாய நடவடிக்கைகளை மக்கள் மயப்படுத்த வேண்டும், விவசாயத்திற்கூடாக நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் இளைஞர்களின் முயற்சி மேலோங்க வேண்டும் என்பதாலேயே தாம் இந்தக் கண்காட்சியை ஆரம்பித்ததாக மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம். ஹுஸைன் தெரிவித்தார்.


Post a Comment