Header Ads



தம்புள்ளை தொடக்கம் கிரேண்ட்பாஸ் வரை

(சத்தார் எம்.ஜாவித்)            

இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட சமுகம் இல்லையா என முஸ்லிம்கள் அரசாங்கத்திடம் கேட்கின்றனர். ஏனென்றால் அண்மைக்காலமாக முஸ்லிம்களை மட்டும் இலக்கு வைத்து இனவாத விஷமிகள் தாக்குதல்களை மேற் கொண்டு வருவதால் அரசாங்கம் அதனை கட்டப்படத்தாதிருப்பதானது இலங்கை முஸ்லிம்களுக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் யாப்பில் இலங்கை ஒரு பல்லின சமுகத்தைக் கொண்ட நாடாக இருப்பதால் இங்கு வாழும் சமகங்கள் அவர்கள் அவர்களின் சமய கலாச்சார விழுமியங்களை பின்பற்றவும் இலங்கையில் எப்பாகத்திலும் வாழுவதற்கான உரிமையும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டபோதிலும் அதனை தற்கால அரசு மறந்துவிட்டதா? அல்லது சிறுபான்மை முஸ்லிம்களைத்தாக்கி அரசியல் யாப்புச் சட்டங்களில் மாற்றங்கொண்டு வந்து முஸ்லிம்களை இந்த நாட்டில் இருந்து ஓரங்கட்டவா? முயற்சிகளும், முனைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்ற ஐயம் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் கவளையும் சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் மத உரிமையைப் மழுங்கடித்து சமயத் தளங்களை சின்னாபின்னமாக்கும் நடவடிக்கையின் ஆரப்பக்கட்டம் தம்புள்ளையில் தொடங்கி இன்று  கிரேண்ட்பாஸ் பள்ளிவரை சுமார் 24 பள்ளிவாசல்கள் ஒட்டுமொத்தமாக பகிரங்கமாக மட்டமல்ல சண்டித்தனத்துடன் தாக்கி மதஸ்தளம் என்ற மகிமையையே கொச்சைப்படுத்திய சம்பவங்கள் ஒவ்வொரு முஸ்லிமின் மூச்சிலும் நெருப்புச் சுவாலையாக எரிந்து கொண்டே இருக்கின்றது.

இவ்வாறு முஸ்லிம்களின் உடமைகள் உணர்வுகள் என முழு முஸ்லிம்களையுமே பகிரங்கமாக தாக்கும் ஒரு சில  இனவாதக் குழுக்களுக்கு பகிரங்கமாகவே சண்டித்தனத்தையும், அடாவடித் தனங்களையும் மட்டுமல்லாது பொலிஸாரும், இராணுவத்தினரும் செய்யும் கடமைகளையும் கையில் ஏந்தி செயற்படுவதுடன் ஏன் நீதி மன்றக் கௌரவங்களைக் கூட உதாசீனம் செய்து இனவாதத்தில் மூழ்கிக் கொண்டு செயற்படும் மேற்படிக் குழுக்களுக்கு யார் அதிகாரங்களை வழங்கியது?

உண்மையில் பகிரங்கமாகவும். துணிச்சலாகவும் இக்குழுக்கள் அப்பாவிகளின் இரத்தங்களை குடிக்கத்திரிகின்ற செயற்பாடுகளை மேற்கொள்வதென்றால் அதற்கான சகல ஒத்துழைப்புக்களும் நிச்சயமாக பாதுகாப்புத் தரப்பினரின் சகல ஆசீர்வாதங்களுடனும் செய்வதையே கோடிட்டுக்காட்டுகின்றது.

இனவாதிகள் ஒவ்வொரு பள்ளிவாசலாக தாக்குதல்களை மேற் கொள்ளும்போதும் இதுவரைகாலமும் அப்பட்டமாக மூடிமறைத்து ஒன்றுமே நடக்கவில்லை என்ற பிரச்சாரங்களே அரசாலும் அதனுடைய ஆசீர்வாதங்களுடன் செயற்படும் இனவாத குழுக்களாலும் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரங்களே  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை தாக்கப்பட்ட 24 பள்ளிவாசல்கள் தொடர்பாகவும் சகல வகையான ஆதாரங்களும் இருந்தும் ஏன் அவை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி இருந்தபோதிலும் ஒருவரைக் கூட கைது செய்தோ அல்லது குறைந்த பட்சம் முஸ்லிம்கள் சார்பாக எதுவித ஆறுதல் கூட கூறாத அரசில் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பர்.

சிறுபான்மைச் சமுகம் என்றால் அவர்களுக்கு எது நடந்தாலும்  கணக்கில் எடுக்கத்தேவையில்லை என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையும் இதேவேளை சிறபான்மையினர் ஒன்றைச் செய்துவிட்டால் அங்கு உடநடி நடவடிக்கைகளும், சட்டங்களும் நடைமுறைப்படுத்தும் துர்ப்பாக்கிய நாடாகவே  இலங்கை மிளிருகின்றது.

இவ்வாறு பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும், இன்னல்களுக்கும் முஸ்லிம் சமுகம் இந்த அரசாங்கத்தின் காலத்தில்தான் முகம்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறு இந்த நாட்டு மக்கள் என்றவகையில் அரசை இதுவரை காலமும் ஆதரித்த சமுகமாகவே முஸ்லிம் சமுகம் இலங்கையில் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்தே வந்துள்ளதை யாரும் மறுக்கவோ அல்லது மறந்துவிடவோ முடியாது.

இதன் அடிப்படையிலே பல முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசுடன் இணைந்து ஆட்சியின் பங்காளிகளாக பாராளுமன்றம் வரை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு முஸ்லிம் மக்களின் வாக்ககளைக் கொள்ளையடித்து தமது ஆதரவை தாரைவார்த்த வன்னமுள்ளனர்.

இந்த ஆதரவு எல்லாம் பெரும்பான்மைக்கு கருவேப்பிலைமாதிரி தேவைகள் நிறைவு பெற்ற பின்னர் உதறித் தள்ளும் சமுகமாக ஏன் வெங்கங்கெட்ட சமுகமாக இன்றும் காணப்பட்டு வருகின்றமையானது வேதனையிலும் வேதனை.

சிறுபான்மை என்பதற்காக அவர்களின் நலன்களிலம், ஏனைய விடயங்களிலும் பாதுகாப்பும், உத்தரவாதமும் உறுதிப் படுத்துவதற்காகவும், அரசுடன் இணைந்தால்தான் அனைத்தும் கிடைக்கும் என்று ஒட்டிக்டிகொண்டு இதுவரை காலமும் இருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும், அதன் பிரதி நிதிகளுக்கும் இதுவரை அவர்கள் சாதித்தது எவை? என மக்கள் கேட்கின்றனர்.

இவ்வாறு அரசில் தமது நம்பிக்கைகளை வைத்து அரசுக்கு ஜால்ரா போட்ட அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கா பெற்றுக் கொண்டவைதான் என்ன? ஒரு சமுகத்தின் பெறுமதியான வாக்குகளைக் கொள்ளையடித்து சுகபோகங்களுக்கும், ஏகபோகங்களுக்கும் உதவியதே தவிர அவர்களால் சாதித்தவை ஒன்றுமில்லை.

இதுவரை காலமும் அரசின் ஆட்சியை நிலைநிறுத்த ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்களினதம், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கருத்துக்கள் அல்லது கோரிக்கைகள் ஏதாவது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? ஆனால் இதுவரையும் அரசால் முஸ்லிம்களுக்கு என்று போலி வாக்குறுதிகளும், பொய்களுமே வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுகம் விஷணம் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் விசுவாசமுள்ள அரசாக இருந்தால் முஸ்லிம் சமுகமும் இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட சமுகமாக வாழும்போது அதனை கருத்தில் கொண்டு அதற்கான சகல விடயங்களையும் செய்து கொடுக்கவேண்டிய கடப்பாடும், கடமையும் அரசாங்கத்திற்கு இருந்தபோதிலும் அவை அனைத்தும் சிறுபான்மை என்ற ஒரு காரணத்தினால் புறந்தள்ளப்பட்டு முஸ்லிம்கள் மீது வன்முறைக் கலாச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டவேண்டிய விடயமாகும்.

இன்று அரசு இனவாதிகளுக்கு அடிமைப்பட்டு அவற்றிற்கு கட்டுப்படும் ஒரு அரசாகவே இன்றைய அரசை மக்கள் நோக்குகின்றனர். அரசின் அமைதியான நிலைமைகளை காணும்போது இலங்கை அரசுக்கான அதிகாரங்கள் அற்றுப்போன நிலைமைகளே தற்போது தோன்றியுள்ளது.

முஸ்லிம் சமுகம் தம்புள்ள பள்ளியில் விட்ட பிழைதான் இன்று 24 பள்ளிகளின் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்தன முஸ்லிம் சமுகம் ஒற்றுமைப்பட வந்தபோதிலும் அரசில் ஒட்டியிருந்த அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசை நம்பிக் கெட்டவர்கள் அவர்கள் கூறியதெல்லாம் அரசும் , ஜனாதிபதியும் முஸ்லிம்களை பாதுகாப்பார்கள் என்ற போலி நம்பிக்கைகள்தான் இன்று முஸ்லிம் சமுகத்தையே அதாளபதாளத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற மாதிரி ஏதோ கிரேண்ட்பாஸ் பள்ளி தாக்குதலின் பின்னராவது பெயர் குறிப்பிடக் கூறிய ஒரு சில அமைச்சர்கள் ஒன்றுபட்ட எதிர்ப்பையும், தமது அதிர்ப்தியையும் அரசுக்கும், ஜனாதிபதிக்கும் காரசாரமாக தெரிவித்தமை முஸ்லிம் சமுகத்திற்க சற்று ஆறுதல் தரும் விடயமாகவே நோக்கப்படுகின்றது.

இவ்வாறு தற்போது ஒன்றுபட்ட முஸ்லிம் தலைமைகள் தம்புள்ளையில் ஒன்றுபட்டிருந்தால் இன்று இடம்பெற்றிருக்கும் எத்தனையோ விடயங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் அல்லவா?

புனிய பூமி என்றகோதாவில் முஸ்லிம் பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் இருப்பிடங்களையும் அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் மதநிந்தனையே மேற் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தம்புள்ளையில் காவி உடைகள் தரித்த பிக்குகள்  இந்துக்களின் கோயில்களை சண்டித்தனமாக அகற்றியுள்ளனர்.

இவ்வாறு மற்றய சமுகத்தையும், சமயத் தளங்களையும் பெரும்பான்மை என்ற கர்வத்தால் அடாவடித்தனம் காட்டுவதை காணும்போது பௌத்த தர்மம் எங்கே போகின்றது என்பதில் பாரிய சந்தேகங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான மதத்தை வளர்க்க வேண்டும் என்ற அடாவடித்தனம் இருக்கம் வரை இலங்கையில் சமாதானம் என்பது காணல் நீர். இச்செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அமைதியையும் நிம்மதியையும் குழப்பிக் கொண்டிருப்பதால் அதனால் அவர்கள் இறுதியில் பாரிய தோல்வியை எதிர் கொள்ளவேண்டியதற்கான ஆரம்பமே எனலாம்.

பௌத்தர்கள் பௌத்த தர்மத்தை மற்றய சமகத்திற்கு எடுத்தக்காட்டவேண்டும.; ஏனென்றால் தற்போது சிறுபிள்ளைகள் பௌத்த தர்மம் சண்டித்தனம் கொண்ட மார்க்கமா என வினவுவதுடன் பிக்குகள் என்றால் பள்ளிவாசல்களையும், கோயில்களையும் உடைப்பவர்களா என்று கேட்கின்றனர்.

இதிலிருந்து பார்த்தால் சிறுபிள்ளைகளின் மனதில் புத்த சமயம் என்றால் அடிதடி என்ற என்னங்களே தற்போது ஒரு சில காடையர்களின் செயற்பாடுகள் அமைதியாக வளரும் சமுதாயத்தில் பிழையான செய்திகளை எடுத்துச் செல்கின்றனர்.

1 comment:

  1. முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மூளைக்காய்ச்சல் வரவே வராது ஏனென்றால் அவர்கள் யாருக்கும் மூளையில்லை அது இருந்தால் இன்று முஸ்லிம் மக்களினது ஆவாவை தலைவர் அஷ்ரப் வென்றது போல் இவர்கள் வென்றிருப்பர். அல்லாஹ் இவர்களுக்கு புத்தியை வழங்குவாயாக.

    ReplyDelete

Powered by Blogger.