Header Ads



அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை

 (ஏ.எல்.ஜுனைதீன்)

  இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் அனைத்து சமயங்களினதும்  மத அனுஷ்டான விழுமியங்களை அரசியல் யாப்பின் பிரகாரம் உறுதிப்படுத்தவேண்டியது அவசியமாகும். இதன் பிரகாரம் நாட்டிலுள்ள பல்வேறு பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் மஸ்ஜித்கள் அண்மைக்காலமாக தாக்கப்படுவது முஸ்லிம்களின் மத உரிமையை மீறுவதோடு கட்டுப்படுத்த முடியாத ஒரு வகை மதப்பயங்கரவாதம் நாட்டில் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன்  தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி), செயலாளர் அஷ்ஷெய்க் எச்.எம்.ஏ.அன்ஸார் மெளலானா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

  இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

  மத வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாது தப்பித்துக் கொள்கின்றமையானது பொலிஸ் மற்றும் சட்டத்தை அமுலாக்கம் செய்கின்றவர்கள் கண்டு கொள்ளாத நிலையையே வெளிக்காட்டுகின்றது. அரசங்கம் மத ரீதியாகப் பக்க சார்பற்றது என்ற நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது என கலாநிதி ஜெஹான் பெரேரா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  மூன்று தசாப்த கால அடக்குமுறை ஒடுக்கப்பட்டு இன்று சமாதான சூழல் ஏற்பட்டுள்ள இன்றைய கால கட்டத்தில்  முஸ்லிம் சிறுபான்மையினரை அடக்கி ஆள முயல்வது நாட்டில் வன்முறைக் கலாசாரம் தொடர்ந்தாலே பெரும்பான்மையினர் வாழ முடியும் என்ற எதிர் மறையான போக்கை வளர்த்து வருகின்றது.

  நாட்டில் தேசாபிமானிகளுக்கும் சர்வதேசத்தில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் நற்பெயரைக் காப்பாற்ற பாடுபட்ட விசுவாசமான சமூகத்திற்கு செய்யும் நன்றிக் கடன் இதுதானா? என்ற வினாவைக் கேட்கத் தோன்றுகின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.