'சமூகம் ஆபத்தான கட்டத்திலிருக்கும் வேளையில் அரசுக்கு வால் பிடிப்பதை நிறுத்துங்கள்'
சமூகம் ஆபத்தான கட்டத்திலிருக்கும் வேளையில் அரசுக்கு வால் பிடிப்பதை விடுத்து அவரது சொந்த ஊரான புல்மோட்டை நில அபகரிப்பை தடுத்து நிறுத்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
'முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாகப் பேசுவதற்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் தகுதியற்றவர்' என்ற தலைப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் விடுத்துள்ள ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும்போதே இம்ரான் மஹ்ரூப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
புனித ரமழான் மாத காலத்தில் முஸ்லிம்களைப் புறக்கணித்து திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனைக்கண்டித்து நான் அறிக்கை விட்டேன். இது சமூகப் பிரச்சினை மாகாணசபை உறுப்பினர் அன்வருக்கு உண்மையான சமூகப் பற்று இருந்தால் இந்த விடயத்தில் என்னோடு இணைந்து அவர் செயற்பட்டிருப்பார். அதனை விடுத்து தனிப்பட்ட முறையில் என்னை தாக்கி அறிக்கை விட்டதன் மூலம் முஸ்லிம்களைப் புறக்கணித்து ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடத்தப்பட்டமையை அவர் நியாயப்படுத்துகிறாரா? ஏன்ற சந்தேகம் எழுகின்றது.
இன்று புல்மோட்டை முஸ்லிம்கள் குடியிருந்த காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. மையவாடியைக் கூட ஆக்கிரமிக்க முற்படுகின்றனர். பாதுமக்கள ஒன்று திரண்டு சென்று அதனைக் காப்பாற்ற வேண்டிய நிலை அங்கு உள்ளது. புல்மோட்டையை சுற்றியுள்ள அரிசிமலை, பொன்மலைக்குடா, ஓடாமலை, கண்ணீராறு, மண்கிண்டிமலை, 14ஆம் கட்டை போன்ற பகுதிகளில் இருந்த முஸ்லிம்களின் காணிகள் கண்முன்னால் அபகரிக்கப்படுகின்றன. அங்கு குடியிருக்கின்ற மக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் புல்மோட்டையைச் சுற்றிலும் காணிப்பிரச்சினை உண்டு. இந்த மக்கள் மாகாணசபை உறுப்பினர் அன்வருக்கு வாக்களித்தவர்கள். இந்தக் காணிப்பிரச்சினையை தீர்த்து வைக்க மாகாணசபை உறுப்பினர் அன்வரால் முடியவில்லை. குறைந்த பட்சம் அரசாங்கத்தினால் செய்யப்படும் இந்த அநீதிகளுக்கெதிராக அவர் பகிரங்க அறிக்கை ஒன்றைக் கூட விட முடியாத நிலையிலிருக்கிறார்.
நிலைமை இப்படியிருக்கும் போது அவர் மற்றவர்களைக் குற்றம் காண முயற்சிப்பதிலிருந்து சிறுபிள்ளைத்தனமான அரசியல் செய்பவர் யாரென்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வார்கள்.
இந்த நாட்டிலே முஸ்லிம்கள் தொடர்ந்து கௌரவமாக வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் அண்மைக்காலமாக முஸ்லிம்களைப் புறந்தள்ளி அவர்களுடைய சமய, கலாசார நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்துகின்ற செயற்பாடுகள் நடந்தேறி வருகின்றன என்பதை சிந்திக்கின்ற எவரும் மறுதலிக்க மாட்டர்கள்.
இதன் ஒரு அங்கமே முஸ்லிம்களைப் புறந்தள்ளி நடத்தப்பட்ட திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமாகும். கூட்டம் தொடர்ந்து நடக்கும் முஸ்லிம்கள் இப்தார் செய்ய வேண்டுமானால் இடையில் எழும்பிச் செல்லலாம் என்ற தோரணையிலேயே இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும்.
இது குறித்து இந்தக் கூட்டத்திலே கலந்து கொண்ட முஸ்லிம்கள் மாத்திரமன்றி சகோதர இனங்களைச் சேர்ந்த அன்பர்கள் சிலரும் மிகவும் கவலையோடு என்னோடு கருத்துப் பறிமாறினார்கள். எனவே, இது குறித்து முஸ்லிம் சமூகத்துக்கு தெரியப்படுத்தி ஜனரஞ்சகப் படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் இந்த அசாங்கத்தின் பங்காளிக்கட்சி. அந்தக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் அன்வர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் இருந்துள்ளனர். எனினும் இது குறித்து அவர்கள் ஆட்சேபனை எதுவும் அங்கு தெரிவிக்கவில்லை. குறைந்த பட்சம் இப்தாருக்கு முன்னர் கூட்டத்தை முடிக்கச் செய்யும் நடவடிக்கையைக் கூட அவர்கள் செய்ய வில்லை.
நிலைமை இப்படியிருக்கும் போது தங்களால் பேச முடியாவிட்டால் பேசுபவர்களையாவது தடுக்காமல் இருக்க வேண்டும். இதுதான் உண்மையான நிலை. தானும் பேசுவதில்லை. மற்றவர்களையும் பேச விடுவதில்லை என்பதற்கு நல்ல உதாரணம் இருக்கின்றது. அதனை அனைவரும் அறிவர்.
நான் மாகாணசபையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் ஏன்பதை ஹன்சாட் உறுதிப்படுத்தும். எனக்கு வாக்களித்து என்னை உறுப்பினராக தெரிவு செய்துள்ள மக்கள் அதனை நன்கு அவதானித்து வருகிறார்கள்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் முஸ்லிம்களின் உணர்வுகளை மதியாது ஒழுங்கு செய்யப்பட்டது என்பதை மாகாணசபை உறுப்பினர் அன்வர் மறுக்கிறாரா? இந்த அரசு காலத்தில் சகல முஸ்லிம்களும் எவ்வித பிரச்சினையும் இன்றி தமது சமய கலாசார நடவடிக்கைகயை முன் எடுக்கிறார்கள் என்று அவரால் துணிந்து கூறமுடியுமா?
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment