Header Ads



நவீன அரசியலணிக்கும் நடுநிலை இஸ்லாமிய அணிக்குமத்தியில் உடன்பாட்டை ஏற்படுத்த முனைகின்றோம்

(நேர்காணல் : ஷெய்க் றாஷித் அல் கன்னூஷி

தமிழாக்கம் - A.W.M. பாஸீர்)



ஷெய்க் ராஷித் அல் கன்னூஷி தூனூஸிய நஹ்ழா இயக்கத்தின் தலைவர். உலகறிந்த இஸ்லாமிய அரசியல் சிந்தனையாளர். தூனூஸியப் புரட்சியின் பின்னர் அவரது அந்-நஹ்ழா ஆட்சிக்கு தலைமை தாங்குகிறது. ஷெய்க் ராஷித் அல்-கன்னூஷி அண்மையில் தூனூஸிய பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகளைஇங்கு தருகிறோம்..


* பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அரசியலில் ஈடுபடுமாறும் கோரி தூனூஸிய ஸலபி அமைப்புக்களை அழைத்திருந்தீர்கள்... இது குறித்து?

இயக்கத்தைப் பொறுத்தவரை உரையாடலைத் தவிர வேறு எந்த அரசியல் சாதனமும் எம்மிடமில்லை. நாம் அரசியல் குழுக்களை கலந்துரையாடலுக்காக அழைத்து வந்திருக்கிறோம். அரசியல், கலாச்சார ரீதியான இடைவெளிகள் திறந்திருக்கும்போது இரகசியமாக செயற்படுவதிலோ ஆயுதம் தூக்குவதிலோ எவ்வித நியாயமுமில்லை. 

இதன் காரணத்தினாலேயே நாம் முன்பும் அவர்களை உரையாடலுக்காக அழைத்திருந்தோம். முழுமையாக சமாதானத்தில் நுழையுமாறு தொடர்ந்தும் அழைக்கிறோம். உண்மையில் ஸலபி அணித் தலைமைகளுடன் முன்பும் பல சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன. 

சட்டத்திற்குட்பட்ட வகையில் இயங்கும் மூன்று ஸலபி கட்சிகள் உள்ளன. அன்ஸாருஷ்-ஷரீஆ மட்டும் தற்போது வரை சட்டத்தை ஏற்கவில்லை. அவர்கள் நாடு என்பது ஒரு வழிகெட்ட விடயம் எனக் கருதுகின்றனர். எனவே நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடந்து கொள்வதை நிராகரிக்கின்றனர். இதுதான் பிரச்சினைக்குரிய இடமாகும். என்றாலும் எல்லாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம். 
நீங்கள் ஸலபிக்களுக்களுடன் மென்மையாக நடந்து கொள்வதன் பின்னணியில் ஸலபிய ஜிஹாத் அணியை பலப்படுத்தும் நோக்கம் இருப்பதாக எதிரணிகள் கருதுகின்றனரே!..

உண்மையில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் இருப்பவர்கள் விடயத்தில் அரசாங்கம் ஒருபோதும் பொடுபோக்காக இல்லை. அது மிக விழிப்புடன்தான் உள்ளது. அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் அது எடுத்து வருகின்றது. லிபியாவிலிருந்து ஆயுதங்களை கடத்தும் குழுக்கள் குறித்து அது நடவடிக்கை எடுத்திருக்கிறது. 

அரசாங்கம் அல்லது நஹ்ழா இயக்கம் மென்மைப் போக்கை கடைப்பிடிக்கிறது என்ற குற்றச் சாட்டைப் பொறுத்தவரையில் அது பொருத்தமற்ற குற்றச்சாட்டாகும். 

நாம் எல்லா திசைகளிலிருந்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பலிக்கடாவாகியிருக்கிறோம். நாம் இஸ்லாமிய திட்டத்தை கைவிட்டுவிட்டதாக சிலர் எம்மைக் குற்றம் சுமத்துகின்றனர். நாட்டை இஸ்லாமியப்படுத்துவதாக வேறு சிலர் குற்றம் சுமத்துகின்றனர். 

கடந்தவாரம் ஷரீஆவின் நோக்கங்கள் எனும் தலைப்பிலான மாநாடொன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். இளைஞர்; ஒருவர் கடும்தொனியில் என்னிடம் கேட்டார் : நீங்கள் இஸ்லாத்திற்காக எதனைச் செய்துள்ளீர்கள். ஷரீஆவில் எதனை நடைமுறைப்படுத்தியுள்ளீர்கள்? 

நான் அவ்விளைஞனுக்கு சொன்னேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு இக்கேள்வியை உனக்கு கேட்க முடிந்திருக்குமா? கேட்டு விட்டு உனது வீட்டுக்கு பாதுகாப்பாய் திரும்பியிருப்பீரா? ஷரீஆவை தண்டனைகளின் சங்கிலியாக ஏன் பார்க்கிறீர்கள்!. ஏன் ஷரீஆவை; ஒரு நீதி சுதந்திரம் பாதுகாப்பு என்று பார்க்கிறீர்கள் இல்லை!. 

தண்டனைகளைத் தவிர மக்களுக்கு கொடுக்கக் கூடியவைகள் எதுவும் உங்களிடம் இல்லையா!? ஷரீஆ முழுவதும் நீதியும் அருளுமாகும். 

தூனூசிய மக்கள் அநுபவிக்கும் சுதந்திரம் ஷரீஆவின் நோக்கங்களில் ஒன்றில்லையா? எமது பத்திரிகைகள் சுதந்திரமாய் வெளிவருகின்றன! எமது பள்ளிகள் சுதந்திரமாய் இயங்குகின்றன!! எமது பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாய் செயற்படுகின்றன!!! இது ஷரீஆவின் ஒரு பகுதி இல்லையா? 
இவை நீண்ட காலமாக இஸ்லாத்தை ஓரங்கட்டுவதற்காக வேலைசெய்து வந்த மதச்சார்பற்ற தரப்பினரின் இஸ்லாம் பற்றிய பார்வையிலுள்ள குறைபாடுகளாகும். 

மறுபுறம் இஸ்லாத்தை தண்டனைக் கோவையாகப் பார்ப்பவர்கள் நஹ்ழா இஸ்லாத்தை விட்டு வழிபிறழ்ந்து செல்வதாக கருதுகின்றனர். ஏனென்றால் நஹ்ழா சுதந்திரம் பற்றி பேசுகிறது. அது சட்டசபையில் கொண்டிருக்கும் 89 அங்கத்தவர்களில் 43 பேர் பெண் அங்கத்தவர்களைக் கொண்டிருக்கிறது. 

* நஹ்ழாவின் தலைமைகளது நிலைப்பாடுகளில் அப்துல் பத்தாஹ் மோரோ ஒன்று சொல்கிறார். ஹபீப்; லோஸ் கடும்போக்கான அறிக்கைகளை விடுகிறார். இவ்விரு நிலைப்பாடுகளில் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? 

நஹ்ழா இயக்கத்தைப் பொறுத்தவரை வெறுமனே அது ஒரு பெரும் கூட்டம் அல்ல. ஒரே சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு இயங்கும் ஸ்டாலினிஸ கட்சியுமல்ல. 

அது நான்கு தசாப்தங்களாக இயங்கிவரும் ஒரு பெரும். இயக்கம். ஒரே வகையான சிந்தனையைப் போக்கை உருவாக்கும் இராணுவ பாசறையுமல்ல அது. அது போல் அது மேல்தட்டு வர்க்கத்தினரின் கட்சியுமல்ல. அதுவொரு வெகுஜன மக்கள் இயக்கமாகும். கருத்துக்கள் குறித்து பயப்படாத நெகிழ்வான கருத்தியலை அது கொண்டது. 

நாம் நடுநிலையான இஸ்லாம் குறித்து கருத்துப் பரிமாறல் செய்யவோ கருத்து முரண்படவோ இல்லை. இஸ்லாத்தை எவ்வாறு நடைமுறைக்கு கொண்டுவருவது குறித்தே நாம் கருத்துப் பரிமாறுகிறோம். 

நாம் ஜனநாயகம் குறித்து கருத்து வேறுபாடுபடுவதோ அதுபற்றி கலந்துரையாடுவதோ இல்லை. இவ்வணியில் ஆட்சி ஒழுங்கு குறித்து முரண்படுபவர்கள் காணப்படுவதில்லை. 
இயக்கத்தைச் சார்ந்திருப்பவர்கள் எல்லோரும் இப்பொதுவரையரைக்குள் நின்றுதான் கருத்துப் பரிமாற்றம் செய்கின்றனர்;. எமக்கிடையே வேறுபாடுகள் இருந்தாலும் அது கருத்து ரீதியான வேறுபாடுகளே.

* நஹ்ழா ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடமாகிறது. நஹ்ழா அதன் சமூக பொருளாதார அரசியல் வேலைத்திட்டத்தில் வெற்றிபெற்றிருக்கிறதா?

கடந்த வருடங்களில் நஹ்ழாதான் ஆட்சி செய்தது என்று சொல்ல முடியாது. கூட்டணியாட்சிதான் நிலவி வந்தது. இக்கூட்டணியாட்சியில் நஹ்ழா சிறந்து விளங்கியது. இதன் பங்காளிகள் உண்மையான பங்காளிகளாக இருந்தனர். கூட்டணி அரசாங்கம் குறித்து பேசும்போது நஹ்ழாவை மாத்திரம் பேசக் கூடாது. 

தனிப்பட்ட ரீதியில் இதுவரைக்குமான அடைவுகள் மிகச்சிறந்த அடைவைப் பெற்றுள்ளன என்று நான் கருதுகிறேன். புரட்சியை பாதுகாப்பதில் கூட்டணியரசாங்கம் வெற்றிபெற்றுள்ளது. சுதந்திரம், அரசியல், ஊடகப் பணி, இணைமுயற்சிகள் என்பவற்றை பாதுகாப்பதில் ஆரம்பித்து பல வெற்றிகளை அது பெற்றுள்ளது. 

பாதுகாப்பு மற்றும் ஐரோப்பிய நெருக்கடி நாட்டில் ஏற்படுத்திய பயங்கர தடைகளைகளுக்கு மத்தியில் கிடைத்த பொருளாதார முன்னேற்றம் என்பவற்றையும் குறிப்பிடலாம். அத்துடன் வேலையில்லாப் பிரச்சினை நூற்றுக்கு 16 என்றளவில் குறைந்துள்ளது. 
மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாக காணப்பட்ட யாப்பு இஸ்லாமியப் பெறுமானங்களும் நவீன பெறுமானங்களும் கலந்ததாக வரையப்பட்டிருக்கிறது. 

* அரசியலமைப்பு நகல் வரைவு எக்கட்டத்தை வந்தடைந்துள்ளது? பலர் அரசியலமைப்புக் குறித்து விமர்சித்திருந்தனர்.

ஒன்றரை வருட தொடர்ந்தேர்ச்சையான முயற்சியின் விளைவுதான் இந்த அரசியலமைப்பின் நகல் வடிவம். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 19 கட்சிகளின் பிரிதிநிதிகள் இதில் பங்குகொள்கின்றனர். இதில் சுயேட்சையாகவும் பலர் பங்குபற்றுகின்றனர். 

இந்த நகல் வரைவு நிபுணர்களின் அடைவல்ல. இது கட்சிகள், சிவில் சமூகத்தினர் என்று பலர் இணைந்து மேற்கொண்ட மக்களின் கூட்டு முயற்சியாகும். உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

நிபுணர்கள் என்று சொல்வதை விட மனிதர்களால் இவ்வரசியலமைப்பின் நகல் வரையப்பட்டுள்ளது. அவர்கள் தவறு விடுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களல்ல. அப்படியிருந்தும் பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய கட்சிகளுக்கிடையே பலமாதங்களாக தேசிய உரையாடல் நடைபெற்று வந்தது. 

அனைத்து மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் வரைவு இதுவல்ல. இவ்வரைவு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மத்தியில் உரையாடல் செய்வதற்கான அடிப்படையாக இருக்க முடியும். இவ்வகையிலே அரசியலமைப்பின் இறுதிவடிவத்தை நாம் பெறுவோம். 

* சில தரப்பினரை திருப்திப் படுத்துவதற்காக அரசிலமைப்பில் 'ஷரீஆ' என்ற பதத்தை தவிர்த்திருக்கிறீர்கள். இதுவொரு விட்டுக்கொடுப்பா? அல்லது அரசியல் தந்திரோபாயமா?

அரசியலமைப்பில் இஸ்லாம் அடிப்படையாக உள்ளது. இஸ்லாமியப் பெறுமானங்களையும் நவீன பெறுமானங்களையும் அரசியலமைப்பு சமஅளவில் கொண்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அம்சங்களையும் அது கொண்டுள்ளது. ஆனாலும் இஸ்லாமிய நோக்கங்கள் அதன் போதனைகளின் வரையரைக்குள்ளேயே இவை அடங்கியுள்ளளன. 

பழைய தூனூசியாவின் கனவை நனவாக்கும் முகமாக புதிய அரசியலமைப்பின் மூலவாக்கியம் இஸ்லாமிய மாறிலிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 
காலனித்துவ காலப்பகுதியில் அறிவியல், நவீனம், சூறா சட்டம் என்பவற்றை உள்ளடக்கியதாக ஸைத்தூனா உலமாக்கள் அரசிலமைப்பை வரைந்தனர். அங்கு ஷரீஆ அரசியலமைப்பிலிருந்து தூரமாக்கப்பட்டமையை நாம் விட்டுக் கொடுப்பு என்பதில்லை. அதனை மேலாதிக்கம் என்றழைக்கிறோம். 

நஹ்ழாவே தூனூஸியாவில் ஆட்சியை வழிநடாத்துகிறது. அனைத்து அரசியலுக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஆட்சியை வழிநடாத்தும் நஹ்ழாதான் பொறுப்பு. எனவேதான் தேசிய உடன்பாடொன்றை அடைவதற்காக நஹ்ழா விட்டுக்கொடுப்புக்களை செய்தது. 

நாம் ஷரீஆவை சேர்க்குமாறு வேண்டினோம். மதச்சார்பற்றவர்கள் அதற்கு உடன்படவில்லை. நாம் அதனை வாபஸ்பெறுவதில் தடையெதனையும் காணவில்லை. உடன்பாட்டினடிப்படையிலேயே அரசிலமைப்பு வரையப்பட்டுள்ளது. பெரும்பான்மையடிப்படையிலல்ல. 
நாம் பாராளுமன்ற ஒழுங்கு குறித்து இதுபோன்ற கோரிக்கை ஒன்றை விடுத்தோம். பின்பு விட்டுக் கொடுத்தோம். 

இஸ்லாம் மக்களின் மார்க்கம். பாராளுமன்றம் வீட்டோ இன்றி அறிவுறுத்தலின்றி செயற்படும் ஒரே நிறுவனமாகும். எனவேதான் எமது பங்காளிகளுடன் சர்ச்சைக்குரிய காரணிகளை தவிர்ந்து கொண்டு செயற்பட்டோம். முரண்பாட்டுக்குரிய எல்லாவற்றையும் தவிர்ந்து கொண்டோம். 

ஜனநாயகம் கூட ஒரு உடன்பாடுதான் என நாங்கள் கருதுகிறோம். இஸ்லாம் நம்பிக்கை சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளதை நாம் நம்புகிறோம். உடன்படாத புள்ளிகளைவிட்டு தூரமாகவே நாம் ஆசைப்பட்டோம்.

* ஆனால், ஜனாதிபதி மர்ஸூகி தற்போதைய வடிவில் அரசியலமைப்பு காணப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அறிவித்திருக்கிறாரே?

அரசியல் செயற்பாடு பேச்சுவார்த்தை அடிப்படையில் இடம்பெறும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாமும் ஜனாதிபதி மர்ஸூகியின் கட்சியும் ஆட்சியிலுள்ள கூட்டணிக்கட்சிகளாகும். இக் கூட்டணி எல்லா அரசியல் சூறாவளிகளையும் தாக்குப்பிடித்து நின்றது. எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டாலும் தூனூசியாவை ஆட்சி செய்வதற்கு அது இன்னும் தகுதியுடையதாய் இருக்கிறது. எல்லாம் பேச்சுவார்;த்தை மூலம் தீர்த்துக் கொள்ளப்படும்.

* இதன் மூலம் அரசியலமைப்பு இன்னொரு தடவை மீளாய்வுக்குட்படுத்தப்படுவதற்கு சாத்தியமுள்ளது எனக் கருதலாமா?

அரசியலமைப்பு இன்னொரு தடவை மீளாய்வுக்குட்படும் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு முன்னைய மீளாய்விற்கு பின் கிடைத்துள்ள தற்போதைய வடிவத்தின் அடிப்படைகளில் ஆட்சேபனைகள் கிடையாது. தற்போதைய நகல்தான் பாராமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் இறுதி வடிவமாக இருக்கும் என நினைக்கிறேன். 

* தேர்தல் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியுமா? அது ஜனாதிபதித் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் இணைந்ததாக இருக்குமா? 

தேர்தல் முழுமையாக இடம்பெரும். பாராளுமன்றத் தேர்தலை நவம்பர் 15 இற்கும் டிஸம்பர் 15 இற்கும் இடையில் நடாத்தும் படி நாம் கோரியிருக்கிறோம். தேர்தல் திணைக்களம்தான் அதற்கான திகதியை தீர்மானிக்கும். 

எப்படியோ, வழமையான அரசாங்கமும் வழமையான பாராளுமன்றமும் காணப்படும் நிலையில் 2014 ஆம் ஆண்டில் நாம் நுழையலாம்.. 

* நஹ்ழா வெகுஜன ஆதரவை இழந்துள்ளது என்ற கருத்துக் கணிப்புகளின் உண்மைத்தன்மை என்ன?

தூனூசியாவைப் பொறுத்தவரைக்கும் கருத்துக் கணிப்பீடுகள் புதிதாகும். இப்படியான கருத்துக் கணிப்பீடுகளில் எமக்கு நம்பிக்கையில்லை. பெரும்பாலான கருத்துக் கணிப்பீடுகள் நிதியை அடிப்படையாகக் கொண்டவை. 

நஹ்ழாவின் மக்களாதரவு 2011 ஒக்டோபர் தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துளளது அல்லது குறைந்துள்ளது. எமது மதிப்பீட்டைப் பொறுத்தவரை மக்கள் மிக இலகுவில் தமது நம்பிக்கையை வழங்கமாட்டார்கள். விரைவாக தமது நம்பிக்கையை விலக்கிக் கொள்ளவும் மாட்டார்கள். 

தூனூஸியாவில் நஹ்ழாவிற்கு மாற்றீடாக எந்த இயக்கமும் இல்லை. தூனூசிய களத்தின் முதுகெலும்பாக நஹ்ழா உள்ளது. அரசியல் பன்மைத்துவத்தால் அந்த முதுகெலும்பை உடைக்க முடியாது. 

நஹ்ழாவின் மூலோபாயத்தில் அது தனியாக ஆட்சி புரியவேண்டும் என்பது கிடையாது. நாம் நடுநிலையான நவீன அரசியல் அணியினருக்கும் நடுநிலையான இஸ்லாமிய அணிக்குமத்தியில் உடன்பாட்டை ஏற்படுத்த முனைகின்றோம். 

* சிரிய நெருக்கடியில் இராணுவத்தீர்வை ஆதரிக்கிறீர்களா? அல்லது அமைதித் தீர்வையா?

சிரிய நெருக்கடியில் நாம் நேரடித்தரப்பாக இல்லை. ஆளும் கொடுங்கோல் அரசாங்கத்திடமிருந்து விடுதலை பெற விரும்பும் சிரிய மக்களின் உரிமைக்கு நாம் உதவுகிறோம். சிரியப் பரட்சி சாத்வீகமாகத்தான் ஆரம்பித்தது. அதனை ஆயுதப் போராட்டமாக மாற்றியதன் முழுப்பொறுப்பும் சிரிய அரசாங்கத்தையே சாரும். அங்கு சிந்தப்படும் இரத்தங்களுக்கு முழுப்பொறுப்பும் அவர்களே.

No comments

Powered by Blogger.