ஓர் ஆட்சிமொழியின் ஆதிக்க வரலாறு
இனியவன் இஸார்தீன் -
அந்தக் காட்டில்
அந்த மரம்தான்
ஆண்டில் மூத்தது
புயல் மழை வெள்ளம்
பூகம்பம் அனைத்தையும்
அது தாங்கி நிற்கிறது
பல்லாயிரம் பறவைக்கு
அதுதான் தாயகம்
ஒரு நாள் காலை
ஒரே குழப்பம்...
பறவைகளுக்குள்
பிரிவினை வாதம்
'எங்கள் பூர்வீகம்
எமக்கே சொந்தம்'
என்றொரு கிளையில்
பாடின சில பட்சிகள்
போதிமரம் ஒருபோதும்
பாதிமரம் ஆகாது'
என ஆதிக்கம்
செய்தன கழுகுகள்
இப்படி எதிர்ப்புக்கள்
மறுப்புகள் வந்ததால்
கிளையெல்லாம் அதிர
இலையெல்லாம் உதிர்ந்தன
'காக்கைகளுக்கென்ன
கதறத்தானே தெரியும்
ககனஅமைதியை
காக்கவா தெரியும்?'
என்று கேட்டன
அலறும் ஆந்தைகள்
மாற்றத்தைக் கொணர
ஆந்தைகள் மறுத்ததால்
'இரவுக்கூத்துகள்
பகலுக்காகா' என்ற
மறுப்பும் எழுப்பப்பட்டது
'கானம் பாடும்
வானம்பாடிகள்'
தகுதி இல்லாதவை
என்றொரு வாதம்
நாரைகள் நடத்தையில்
நளினமே இல்லை
கொக்குமொழியோ
பக்குவம் பெறாதது
இப்படி மறுப்புகள்
இயம்பப்பட்டன
'கிளிமொழி சரியே'
எனும் குரல் எழுந்ததும்
வழிமொழியைச் சில
வாய்கள் திறந்தன
'மரங்கொத்தி போலதான்
மீன்கொத்திப் பறவைகள்'
கொத்திப் பிழைப்பதும்
கொள்கை மறுப்பதும்
வேண்டாம்' என்று
கதறின பறவைகள்
'கிழக்கும் வடக்கும்
கூட்டுத் தாயகம்' என்ற
கூச்சல் கேட்டதும்
'கோட்டான்கள் வேண்டாம்'
என விலக்கப்பட்டது
'மைனா எப்படி?' என்றவுடனே
'மைனாரிட்டிகள்
மொழி கூடாது'
என்ற இரைச்சல்
கீச்சான்கள் கட்சி
கூறுவதென்ன? என
ஆந்தை கேட்டதும்
அடுத்த நொடியே
'காட்டிக்கொடுத்தவையே
கூட்டிக்கொடுத்தன' என்று
உடனே மறுக்கப்பட்டது
வாதங்களை இப்படி
வரிசையாய் மறுத்தவை
தெற்குக் கிளையில்
வசிக்கிற கழுகுகள்
கிழக்கே செல்லும் ஒரு
பழங்கிளையில்
குயில்கள் இந்தக்
குழப்பத்தில் சேராமல்
கூவிக் கூவி
மகிழ்ந்துகொண்டிருந்தன
குருவிகளைப் பார்த்துக்
கழுகுகள் கேட்டன
'கடைசியாய்க் கேட்கிறோம்
'உம் முடிவென்ன?
'வெளிஉலகிற்கும் தூதுவராக
விளங்கிக்கொண்டிருப்பது
வெண்புறா என்பதால்;
வெண்புறா மொழியிலேயே
சமரசம் பேசுவோம்'
குருவிகள் இவ்வாறு
கூறத் தொடங்கியதும்
கழுகுகள் கோபத்தில்
கதறத் தொடங்கின
மொழிபேதம் அங்கே
இனவாதமானதால்
பறவைகள் வெறுப்பால்
எதிர்க்கத் தொடங்கின
பகலில் மாத்திரம்
சமாதானப் பேச்சு என்று
(சு)தந்திரமாக
பருந்துகள் பேசின
கழுகுகளோடு மாத்திரம்
சைவம் எனினும்
இருட்டினில் அதிகம்
அசைவம் உண்டன
கால்நூற்றாண்டு
கடந்த போதினும்
ஆதிக்கத்தாலேயே
அவலம் நிலைத்தது
பறவைகள் தாயகம்
போர்க்களம் போலாயினும்
துவேசத்தால் மட்டுமே
தன்னிறைவானது
இனவாதம் ஒன்றினால்
தேசியமானது
பருந்துகளும் கழுகுகளும்
பிணம் தின்னத் தின்ன
பறவைகள் எண்ணிக்கை
குறையத் தொடங்கின
கடைசியில் -
'பருந்துகள் பயங்கரம்
ஓழிந்தது' என்று
குருவிகள் மீதே
அராஜகம் செய்தன
.jpg)
Post a Comment