மத்தியஸ்த சபை உறுப்பினர்களின் ஆடைகள் குறித்து அறிவுறுத்து..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
நாட்டிலுள்ள அனைத்து மத்தியஸ்த சபை உறுப்பினர்களும் மத்தியஸ்த நடவடிக்கைகளை நீதிமன்ற நடவடிக்கையாகக் கருதி அப் பதவியின் கெளரவத்தைப் பாதுகாக்கும் விதத்தில் பொருத்தமான ஆடை அணிந்து மத்தியஸ்த நடவடிக்கைகளில் பங்குபற்றுதல் வேண்டும் என மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு சுற்றுநிருபம் மூலம் மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மத்தியஸ்த அலுவல்களை விதிமுறைப்படுத்தல் எனும் தலைப்பில் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் (பதில்) திருமதி வாசனா பி. குணரத்ன இதற்கான உள்ளக சுற்றறிக்கையை (03/2013) அனைத்து மத்தியஸ்த குழுக்களின் தவிசாளர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.
இச் சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
100 ரூபாவாக இருக்கும் மத்தியஸ்த நாளாந்தக் (அமர்வு) கொடுப்பனவு கடந்த 2013.01.01 ஆம் திகதி தொடக்கம் 500 ரூபா வரை அதிகரிப்புச் செய்து, மாதாந்தக் கொடுப்பனவு ஆகக்கூடியது 2000 ரூபா வரையிலும் வழங்குவதற்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்தியஸ்த கடமைகளுக்காக தமது சேவையை உயரிய அளவில் பெற்றுக் கொடுப்பது சகல உறுப்பினர்களினதும் பொறுப்பாகும்.
ஐந்து வார இறுதிகள் உள்ள மாதங்களில் ஐந்து கூட்ட அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் அவற்றில் சகல மத்தியஸ்த சபை உறுப்பினர்களும் கலந்து கொள்வதும் கட்டாயமாகும்.
மத்தியஸ்த குழாம் கூட்டங்கள் கூடிய வரை முற்பகலில் நடத்துவதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், ஏதேனும் ஒரு காரணத்தால் மத்தியஸ்தர்கள் குழாம் கூட்டங்கள் பிற்பகலில் நடத்துவதாயின் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பிக்கப்படுதல் வேண்டும்.
மத்தியஸ்தர்கள் குழாத்தின் அமர்வுகளுக்கு உறுப்பினர்களின் வருகை மற்றும் வெளிச் செல்லல் என்பன வெவ்வேறு இடாப்புக்களில் பதியப்படுவதுடன் அதன் பிரதிகள் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவிற்கும் மற்றும் அந்தந்த பிரதேச செயலகங்களுக்கும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
இதுபோன்று, கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் வவுச்சர்கள் மாதாந்தம் அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
மத்தியஸ்த சபையின் உறுப்பினர் ஒருவர் மத்தியஸ்த சபையின் அமர்வுகளில் ஒன்றைவிடக் கூடுதலாக விடுமுறை பெற்றுக் கொள்வதாயின் ஒரு வாரத்திற்கு முன்னர் மத்தியஸ்த சபைகள் ஆணக்குழுவிற்கு விடுமுறை விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்து அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து மத்தியஸ்த சபை உறுப்பினர்களும் மத்தியஸ்த சபைகள் சட்டத்திற்கு இணங்கவும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும் செயற்படுதல் வேண்டும்.

Post a Comment