வடமாகாண தேர்தலில் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாமை மாபெரும் சவால்
(ஏ.எல்.ஜுனைதீன்)
2012 ஆம் ஆண்டின் முழுமைப்படுத்தப்பட்ட வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் சுமார் 1 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத நிலைமையே காணப்படுகின்றது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கூடுதலான எண்ணிக்கையானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத நிலைமை உள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைதீவு ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் சுமார் 1 இலட்சம் பேர் உள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.
ஒரு இலட்சம் என்னும் இந்த எண்ணிக்கை ஒரு வேளை சரியான தொகையாக இல்லாமல் இருக்கலாம், காரணம் தேசிய அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யாமல் சிலர் விட்டிருக்கலாம். எவ்வாறெனினும் இந்த தொகையை அன்மித்த வகையில் அடையாள அட்டை இல்லாதோர் இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7 இலட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் நெருங்குகின்றமையினல் அனுமதியளிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதவிடத்து தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பதன் காரணத்தால் தேசிய அடையாள அட்டை இல்லாதோர் விரைவாக மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
.jpg)
Post a Comment