Header Ads



“நாம் ஹலாலை விற்றோம், ஆனால் விற்கவில்லை..”

(கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்)

இந்த தலைப்பை பார்த்தவுடன் வாசகர்கள் ஒரு குழப்பத்திற்கு உள்ளாகலாம். ஆனால் எனது நோக்கம் உங்களை குழப்பத்திற்கு உள்ளாக்குவது அல்ல. உண்மையில் இந்த கருத்துக்கு சொந்தக்காரன் நான் அல்ல. ஒரு சில மாதங்களுக்கு முன்பு கொழும்பில் நடைபெற்ற ஒரு முக்கியமான முஸ்லிம்களின் ஒன்று கூடலின் போது நம் நாட்டின் மிக முக்கியமான ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞரினால் முன்வைக்கப்பட்ட கருத்தே இதுவாகும். மரியாதையின் நிமித்தமும் வேறு சில காரணங்களுக்காகவும் அந்த மார்க்க மேதையின் நாமத்தை இங்கு நான் தவிர்த்துக்கொள்ள விரும்புகின்றேன்.

 மேலோட்டமாக பார்க்கும்போது இந்த தலைப்பு ஒரு அர்த்தபுஷ்டியான சொல்லாடலாக தெரியாத போதிலும் ஆழமாக சிந்தித்தால் அதன் யதார்த்தத்தை நாம் இலகுவில் புரிந்து கொள்ளலாம். அதாவது “முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் ஹலாலான உணவினை உண்பதற்காக பல்வேறு உணவு பதார்த்தங்களை தயாரித்து விற்பனை செய்யும் பல நிறுவனங்களுக்கு ஹலால் சாண்றிதழ்களை வழங்கி அவற்றை ஹலாலாக தயாரித்து விற்பனை செய்ய உதவி செய்தோம் (ஹலாலை விற்றோம்). (ஆனால்) இஸ்லாத்தின் அடிப்படையில் ஹலால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? என்ற விடயங்களை எம்மை விட பல மடங்கு இந்நாட்டில் வாழும் முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளுக்கு விளங்கப்படுத்துவதில் அல்லது தெளிவுபடுத்துவதில் நாம் எல்லோருமே தவறிவிட்டோம்  (ஹலாலை விற்கவில்லை)” என்பது தான் இதன் மறைபொருளாகும். இதன் விளைவாக எழுந்த பிரச்சினைகளின் போது எம்மைச் சார்ந்த பலரே (முஸ்லிம்கள்) எமக்கு எதிராக பேசியும் எழுதியும் வந்ததை நாம் எமது அனுபவத்தின் மூலம் கண்டுகொண்டோம்.

இந்த கருத்தை முன்வைத்த அந்த மார்க்க அறிஞர் தன்னையும் உள்ளடக்கியே இந்த குற்றவாளிகளை அடையாளப்படுத்தியமையானது உண்மையில் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும். இதைக்கேட்ட உடனேயே எனக்குள் இனம்புரியாத உற்சாகம் ஒன்று பிறந்ததை நான் உணர்ந்தேன். காரணம் கடந்த சில மாதங்களாக எனது மனதை உறுத்திகொண்டிருந்த ஒரு விடயத்திற்கு எனக்கு விடை கிடைத்தமையேயாகும். பல மாதங்களாக இந்த நாட்டிலே சில சிங்கள பௌத்த கடும்போக்காளர்களாலும் அவர்களது அமைப்புகளாலும் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களுக்கு அடிப்படை காரணியாக முஸ்லிம்களாகிய எங்கள் தரப்பில் விடப்பட்ட சில மேலோட்டமான தவறுகளும் காரணமாய் அமைந்தன என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் மார்க்கத்தோடு தொடர்புபட்ட ஒரு பிரச்சினை என்றபடியால் அதனை பகிரங்கமாக எழுதும் அல்லது பேசும் துணிச்சல் எனக்கு இருக்கவில்லை.

 எனினும் அதனை பேசவேண்டும் அல்லது எழுதவேண்டும் என்ற ஆவல் எனக்குள் தொடர்ச்சியாக இருந்துகொண்டே வந்தது. சிலவேளை நான் அவ்வாறு செய்யாது விட்டால் எனது சமூக கடமையில் இருந்தும் தவறி விடுவேனோ என்ற அச்சமும் ஆதங்கமும் கூடவே எனக்குள் இருந்து வந்தது. அது மாத்திரமின்றி, இதற்கு முன்னர் நான் இணையதளங்களில் எழுதிய கட்டுரையொன்றில் முஸ்லிம்கள் தரப்பிலும் சில மேலோட்டமான தவறுகள் விடப்பட்டுள்ளன என எழுதியபோது ஒரு வாசகர் அவற்றை பற்றியும் கொஞ்சம் எழுத முடியுமா என தனது கருத்துப்பகிர்வில் கேட்டிருந்தார். ஆனால் என்னால் அதை செய்ய முடியவில்லை. சிலவேளை அவற்றை இவ்வாறு ஊடகங்களில் எழுதுவதால் எமது சமூகம் காட்டிக் கொடுக்கப்பட்டு விடும் என எண்ணும் சிலர் நம் மத்தியிலே இருப்பது தான் காரணமாகும். அதுமட்டுமல்லாமல் மிகவும் மார்க்கத்தின் மீது அக்கறை கொண்டுள்ளோம் என்ற பெயரிலும் அதனை பாதுகாக்கின்றோம் என்ற எண்ணத்திலும் இலகுவாகவே உணர்ச்சிவசப்பட்டு அவசரமாகவும் அநாகரீகமாகவும் கருத்துக்களை அள்ளி வீசிவிடுகின்ற சில இஸ்லாமிய சகோதரர்களும் எம்மத்தியிலே இன்று உருவாகியுள்ளார்கள். இஸ்லாம் என்பது பகுத்தறிவு ரீதியாக சிந்திக்காத அறிவீனர்களை கொண்ட ஒரு மார்க்கம் அல்ல. மிகவும் உயர்ந்த மட்டத்தில் பகுத்தறிவுரீதியான கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்ட ஒரு நடைமுறைச் சாத்தியமான அழகிய வாழ்க்கைமுறையே இஸ்லாமாகும். 

எது எவ்வாறாயினும் முதன் முதலாக ஒரு பிரபலமான மார்க்க அறிஞர் ஒரு பகிரங்க சொற்பொழிவிலே இந்த கருத்தை முன்வைத்தமையானது எனக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது எனலாம். ஆம், உண்மை கசப்பானதாக இருந்தாலும் நாம் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதுதான் ஒரு சிறந்த மானிட பண்பாகும். அது மட்டுமல்ல அதுதான் ஒரு இஸ்லாமியப் பண்பாகவும் இருக்க முடியும். எமது குற்றத்தை மறைத்து விட்டு மற்றவரில் மாத்திரம் குற்றம் குறை காணும் பண்பு எமக்குரியதாக இருக்க முடியாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். எம்மை நாமே ஒரு சுயவிமர்சனத்திற்கு உள்ளாக்கவேண்டிய, அதன் அடிப்படையிலான சமூக சீர்திருத்தங்களுக்கு முன்வரவேண்டிய ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை இன்று இந்நாட்டில் உருவாகியுள்ளதாகவே நான் நினைக்கின்றேன். 

இப்போது விடயத்திற்கு வருகின்றேன். இன்றைய இந்த பிரச்சினைகள் தொடர்பாக அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் நின்றுகொண்டு அதனை விளக்குகின்ற அளவிற்கு இந்த புனிதமான மார்க்கம் தொடர்பாக ஆழமான அறிவும் அனுபவமும் என்னிடம் இல்லை என்பதை முதலில் மனமார எற்றுக்கொண்டவனாகவும், அதேநேரம் சாதாரண இஸ்லாமிய அறிவுகொண்ட ஒரு சராசரி மனிதனாகவும், என்சமூகத்தின் மீது கொண்டுள்ள ஆழமான அக்கறை காரணமாகவுமே எனது சில கருத்துக்களை மேலோட்டமாக எமது இஸ்லாமிய சகோதரர்களுடன் உரிமையுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். இந்த கருத்துப்பகிர்வானது எந்தவொரு தனிநபரினதோ அல்லது சமூக இயக்கத்தினதோ மனதை புண்படுத்தவோ அல்லது எனது தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை தணித்துக்கொள்ளவோ எடுக்கின்ற ஒரு முயற்சி அல்ல என்பதையும் தெரிவித்துக் கொண்டவனாகவும் சிலவேளை சமூக அக்கறையுடன் கூடிய எனது அவ்வாறான கருத்துக்கள் யாருடையதாவது மனதை புண்படுத்துமாக இருந்தால் அதற்காக முதலிலேயே அப்பேற்பட்டவர்களிடம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். தொடரும்..!

4 comments:

  1. PLEASE ...........CONTINUE SIR....... AND HOW CAN WE CONTACT YOU SIR??

    ReplyDelete
  2. Yes,excellence article . U should continiue sir, i also heard that speech of the ulama and i got the same feelings as u got .there should be a person like u to our socity. Go ahead ,Allah will help u in many ways. Don't fear about others.Allah will never giveup u. Please use ur knowledge in necessery way to the benifit of the socity. Allah will give u more &more benifit in both worlds.

    ReplyDelete
  3. Sir
    You are an intellectual in this island.This is your duty.So please continue....

    ReplyDelete

Powered by Blogger.