Header Ads



'இராணுவத்தினர் எகிப்தில் நரகத்தை கட்டவிழத்து விடுகிறார்கள்' - இஸ்லாமிய அறிஞர்

(Tn) மொஹமட் முர்சி எகிப்து ஜனாதிபதி பதவியிலிருந்து இராணுவத்தால் அகற்றப்பட்டதன் கொண்டாட்டம் கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தையொட்டி இடம்பெற்ற அதேவேளை அங்கு ஒருசில கிலோ மீற்றருக்கு அப்பால் அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு இடையில் குழப்பமும் கவலையும் தொற்றியுள்ளது.

கெய்ரோவின் நஸ்ர் நகர பள்ளிவாசலையொட்டி கடந்த ஒருவாரமாக ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கா னோர் தரித்து நின்றனர். ஓர் ஆண்டுக்கு முன் ஜனநாயக முறையில் தேர்வான முர்சி இவ்வாறு மோசமான முறையில் வெளியேற்றப்படுவதற்கு அங்கு முகாமிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கவலையடைந்துள்ளனர்.

எனினும் இராணுவப் புரட்சிக்கு முன்னரே முர்சி ஆதரவாளர்கள் இருக்கும் பகுதியை இராணுவம் முற்றுகை இட்டிருந்தது. ஆதரவாளர்கள் இருக்கும் பகுதியின் பிரதான வீதிகளை இராணுவம் இடைமறித்து ஆயுதம் தரித்த வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளது. குறித்த பகுதியை சுற்றி இராணுவ ஹெலிகொப்டர் ரோந்து சென்ற வண்ணம் உள்ளது. இந்நிலையில் இவர்கள் குறித்த பகுதியில் இருந்து கலைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக நேற்று வதந்திகள் பரவி இருந்தன. இங்கு இருக்கும் ஒரு ஆதரவாளர் 1954 இல் அப்போதைய ஜனாதிபதி காமால் அப்தல் நாசர் தலைவர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்களை எவ்வாறு ஒடுக்கினார் என்பதை நினைவுக்கு கொண்டுவந்தார்.

“இராணுவத்தினர் எகிப்தில் நரகத்தை கட்டவிழத்து விடுகிறார்கள்” என்று கூறிய வயது முதிர்ந்த இஸ்லாமிய அறிஞரான மஹ்தி அஸ்வர் ‘இஸ்லாமியவாதிகளால் பின்வாங்க முடியாது” என்றும் தெரிவித்தார்.

முர்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக் காரர்களில் பலர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் வீதியில் காத்திருக்கின்றனர். முர்சிக்கு ஆதரவான அரசியல் குழுக்கள் ஒன்றுதிரண்டு ஜனாதிபதியின் சட்டபூர்வ உரிமைக்காக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பாரிய அளவான சனத்திரள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது. இதன் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான முர்சிக்கு எதிரான அர்ப்பாட்டத்திலிருந்து முர்சியால் தப்ப முடியும் என நம்பப்பட்டது. கடந்த புதன்கிழமை இராணுவம் விதித்திருந்த 48 மணிநேர கெடு முடிவடையும் தருவாயிலும் முர்சி ஆதரவான முகாம் தாம் ஒரு உறுதியான நிலைப்பாட்டிலேயே இருந்தது. எனினும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் அதன் கூட்டணிகள் ஊடாக மாநாடுகளை நடத்தி இராணுவம் பின்வாங்க வேண்டும் என வலியுறுத்தின. “எம்மிடம் அரசியலமைப்பு உள்ளது, நாம் சுதந்திரமானவர்கள், நாம் இறையாண்மை கொண்டவர்கள், நாம் புரட்சியாளர்கள்” என்று வலியுறுத்தினார் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவான நீதிக்கும், சுதந்திரத்திற்குமான கட்சியின் துணைத் தலைவர் இஸ்லாம் அல் எரியான்.

எனினும் வியாழக்கிழமை (நேற்று) காலையாகும் போது முர்சி ஆதரவு முகாமில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. எனினும் நேற்றைய தினமும் முர்சி ஆதரவு செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்தனர். ஜனாதிபதி அகற்றப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு ஆதரவானவர்கள் மீது குற்றம் சாட்டினர். எனினும் பெரும்பாலான ஊடகங்கள் முர்சி வெளியேற்றப்பட்டதன் மகிழ்ச்சி கொண்டாட்டங்களை மாத்திரமே ஒளிபரப்பி வருகிறது.

No comments

Powered by Blogger.