ஹொஸ்னி முபாரக் அடைக்கப்பட்டுள்ள சிறையில் இஹ்வான்கள்..!
எகிப்தில் பதவி இழந்த முர்சி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள கலவரத்தால் பதட்டம் நீடிக்கிறது.
எகிப்தின் அதிபராக இருந்த முகமது முர்சிக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அதில் வன்முறை வெடித்து துயரமாக மாறியது. 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு புரட்சி மூலம் ராணுவம் ஆட்சியை பிடித்தது. அதிபர் முகமது முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார் அரசியல் சட்டம் ரத்து செய்யப்பட்டது. புதிய இடைக்கால அதிபராக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அடில் மன்சூர் நியமிக்கப்பட்டு அவர் பதவி ஏற்று கொன்றார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது. முர்சியின் எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவரை பதவி நீக்கம் செய்தது தவறு என்று கூறினர்.
கெய்ரோ, அலெக்சாண்டிரியா, மார்கா, உள்ளிட்ட நகரங்களில் அவரது சகோதரத்துவ கட்சியினர் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். இதனால் ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே பதவி பறிக்கப்பட்ட முர்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
மேலும் சகோதரத்துவ கட்சியின் சுப்ரீம் தலைவர் முகமது பதி மத்திய தரைக்கடல் நகரமான மெர்சா மாட்ரூவில் கைது செய்யப்பட்டார். மேலும், அக்கட்சி தலைவர் காத் எல்கதாதி துணை தலைவர் ரசாத் அல்-பயோமி ஆகியோர் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் சிறை வைக்கப்பட்டுள்ள கெய்ரோ புறநகரில் உள்ள தொராஹ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ராணுவ புரட்சி மூலம் ஏற்படுத்தப்பட்ட புதிய ஆட்சியை ஏற்கமாட்டோம். அந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம். கைது செய்யப்பட்ட முர்சியையும் மற்ற தலைவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என சகோதரத்துவ கட்சியின் செய்தி தொடர்பாளர் கெகத் எல்-ஹதாத் தெரிவித்துள்ளார்.
மேலும், முர்சிக்கு ஆதவாக மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என கூறியுள்ளார். ராணுவம் ‘பேஷ்புக்’ இணைய தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முர்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்து விட்டார். எனவே, தான் அதில் ராணுவம் தலையிட்டு அவரை பதவி நீங்கம் செய்தது.
இது ஒரு தரப்பினருக்கு எதிராகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல. உரிமைக்காக போராடும் மக்களின் கோரிக்கைக்காக ஏற்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு எகிப்தியருக்கும் உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முர்சியின் ஆதரவாவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினரும் போராடுகின்றனர். இதனால் ஏற்படும் மோதல்களால் எகிப்தில் கலவரம் தொடர்ந்து நீடிக்கிறது.

Post a Comment