Header Ads



நமது வைத்தியசாலைகள் ஏன் தொடர்ச்சியாக குறைகூறப்படுகின்றன..?

(உடையான்)

(இக்கட்டுரையின் நோக்கம் :அண்மைக்காலமாக  நமது நாட்டின் வைத்தியசாலைகள், வைத்திய சேவையைப்பற்றியும்,தாதிய சேவையைப் பற்றியும் பல்வேறு பட்ட எதிர்மறையான  செய்திகள்  வெளிவந்து கொண்டிருக்கின்றன.அதிலும் கிழக்குமாகாண  வைத்தியசாலைகளைப்பற்றி  மிகவும் காராசாரமான செய்திகள் கடந்த ஒருவருடத்தினுள் பலமுறை வெளிவந்திருக்கின்றன. இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாவண்ணம்  இருக்க நாம் என்ன செய்யலாம் என்பதனை  சிந்திக்க வைப்பதற்கேயாகும்)

வைத்தியசாலைகளது நோக்கம் என்ன,இந்நிறுவனங்களிடம் இருந்து சமூகம் எவ்வாறான பலனையும்,சேவைகளையும்  எதிர்பார்க்கின்றது?என்பதையிட்டு நம்மில் மிகக்குறைவான எண்ணிக்கையுள்ளவர்களே சிந்திகின்றோம்.ஆனால் அநேகமானவர்கள்  அளவுக்கதிகமாக  குற்றம் சாட்டுகின்றோம்.

குற்றம் சாட்டப்படுகின்ற குறித்த விடயங்களில் உள்ள உண்மை, நம்பகத்தன்மை  என்பன பற்றி  யாரும் கவலைப்படுவதேயில்லை. அவர் சொன்னார்,இவர் சொன்னார் என்று பேசிக்கொள்கின்றோமே தவிர சம்பவத்தை பொறுப்பானவர்களுக்கு  ஒருபோதும் எத்தி  வைப்பதில்லை!

வைத்தியசாலைகளில் நோயாளர்களை பார்வையிட  காலை 6 மணி முதல் காலை 7 மணிவரை,   மதியம்  12 மணி முதல் பிற்பகல்    1 மணிவரை
மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை. இது தவிர ஞாயிறு தினங்களிலும் பொ து விடுமுறை தினங்களிலும் மதியம் 11:30இலிருந்து பிற்பகல் 1 மணிவரை.
                    பிரத்தியேக  நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது  நாம் அதை மதிப்பதில்லை விரும்பிய நேரமெல்லாம் நாம் உட்செல்ல வேண்டும். அவ்வாறு நேரந்தவறி செல்ல முற்படும்போது நுழைவாயிலில்  அனுமதிக்க மறுக்கும் காவலாளியை மிரட்டுவது,அவரை தூற்றிப்பேசி அவமானப்படுத்துவது,இல்லாவிடின் நான் யாரென்று தெரியுமா என்று யார்யாருக்கோ  கைபேசியில் அழைப்பு எடுத்து  காவலாளியுடன் பேசச்சொல்வது போன்ற நாகரீகமற்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றோம்,,

பார்வையாளர்கள் விடுதிகளின் ஒழுங்கு விதிகளை பின்பற்றுவதில்லை,கட்டில்களில் ஏறியமர்ந்து நோய்க்கிருமிகளைக்காவிக்கொண்டு வீட்டிலுள்ள சுகதேகிகளை நோயாளிகளாக்குகின்றோம்.

உரிய வேளைக்கு உணவு உண்டு மருந்து ஊசி போன்ற சிகிச்சைகளை நேரந்தவறாது ஓய்வுடன் பெற்றுக்கொள்ளவே  நோயாளர்கள் விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.ஆனால் நமது பிரதேசங்களில்  நோயாளிகள்  நேரத்துக்கு சாப்பிட மாட்டார்கள்,இதனால் மருந்துகளை வேளைக்கு  வழங்குவதில் தாதிகள்  சிரமப்படுகின்றனர்,அதிலும் சர்க்கரை வியாதியுள்ளவர்களது நிலை மிகவும் கஷ்டமாகிவிடும்.

இதுபோல  வைத்தியசாலை ஊழியர்களும்,வைத்தியர்க்களும்,தாதிமாரும் நோயாளர்களை மதிப்பதில்லை,அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை நோவில் முனகுகின்ற ஒருவரை  சத்தம்போடாமல் உறங்கு என்று சொல்வது எங்கனம் நியாயம்?உளவியல் கற்றவர்கள்  நோயாளி அடையும் வலியை தாங்கள் உள்ளத்தால் உணரவேண்டியவர்கள்  இவ்வாறு சொல்லலாமா?

நமது வைத்தியசாலைகளில்  வெளிநாட்டவர்கள் யாரும் கடமை புரிகின்றார்களா?இல்லையே நமது நாட்டைச்சேர்ந்த ,அதுவும் நமது பிரதேசங்களைச்சேர்ந்த  சகோதர சகோதரிகளே டாக்டர்களாகவும்,தாதியர்களாகவும் ,மருத்துவ மாதுகளாகவும் ,சிற்றூளியர்களாகவும் ,மற்றும் ஏனைய  துறைகளிலும்  பணி  புரிகின்றனர்  ஒன்றிரண்டு வெளி மாவட்டத்தினரைத்தவிர.இதுபோல இங்கு சிகிச்சை பெறுவோரும் இலங்கைப்பிரசைகளேஅதுவும் நம்மவர்க ள் ,நமது மதத்தினர்,நமது மொழி பேசுவோர்,நாம் அவர்களுக்காவே நியமிக்கப்பட்டிருக்கின்றோம்,அவர்கள் நமக்காக அல்லர்,அவர்களால் உங்களது  உங்களது  காலடிக்கு  இறங்கிவர முடியாது என்னில் அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உளமும் நலிவடைந்த நோயாளர்கள் நீங்களே  அவர்களது  கட்டில்களுக்கு செல்லவேண்டும் ! சேவை பெறவருவோர் மீது சேவை வழங்குனர்கள் தகாத வார்த்தைகளை ஏன் பிரயோகிக்க வேண்டும்.அது தமது சேவையின் தரத்தை குறைத்துவிடும் என்று ஏன் இவர்கள் சிந்திப்பதில்லை? இங்கே இவர்கள் நிருவாகத்தினாலும்,மேலதிகாரிகளாலும்  ஒழுங்காக  கண்காணிக்கப்படுவதில்லை என்று எண்ணத்தோன்றுகின்றதல்லவா?

வைத்தியசாலைகள் ஒரு தனி நிறுவனமாகவே இன்னும் மக்களால்  கருதப்படுகின்றது. சமூகத்திற்கும் வைத்தியசாலைக்கும் இடையிலுள்ள உண்மையான உறவுநிலை இங்கு பேணப்படுவது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது! வைத்தியசாலைக்கு வருவது தேவை முடிந்தால் வெளியேறுவது தவிர இங்கு என்ன நடைபெறுகின்றது?இங்குள்ள வளங்கள் என்ன ?என்ன குறைபாடுகள் உள்ளன ?இருக்கின்ற வளங்களில் என்ன வளங்கள் பயன்படுத்தப்படுவதில்லை ? என்ற இன்றியமையாத விடயங்கள் பற்றி நம்மில் யாருமே  கவலைப்படாமல் இருந்து விட்டு ,தவறுகள் நடந்தவுடன் சிலிர்த்துக்கொண்டு  எழும்பி வாய்க்கு வந்தவற்றைஎல்லாம் பேச வேண்டியது?

ஒவ்வொரு ஊரிலும் பிரதான பள்ளி வாசல்கள் இருக்கின்றன அதற்கு நம்பிக்கையாளர் சபையும் இருக்கின்றது. எப்போதாவது  இந்த நிறுவனம் தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேச வைத்தியசாலைகளைப்பற்றி  சிந்தித்ததுண்டா? அல்லது பாதிக்கப்பட எவராவது இது விடயமாக 

பள்ளிவாசலுடன்  பேசியிருக்கின்றார்களா?அல்லது குறிப்பிட்ட வைத்தியசாலை நிருவாகத்துடன்தான்  பேசியிருக்கின்றார்களா? இல்லை அப்படி இருந்தாலும் அது முறையாக நடைபெற்றிருக்காது.வீதியில் நின்று சத்தம்போட்டு தகாத வார்த்தைகளால் வைத்தியசாலை ஊழியர்களுக்கு ஏசியிருப்போம்,அல்லது ஊழியர்களது வீடுகளுக்கு கல்லெறிந்திருப்போம் இல்லாவிட்டால் .துண்டுப்பிரசுரம் அடித்து பகிர்ந்திருப்போம்,அதுவுமில்லாவிடின் சுவர்களில் நோட்டீஸ்கள் ஓட்டியிருப்போம்.

 நமது   முக்கியமான வளங்களுள் ஒன்றான  வைத்தியசாலை  பற்றிய பிரச்சனைகளை தீர்க்க நம்மிடம் என்ன திட்டம் இருக்கின்றது.?

பேசித்தீர்க்க முடியாதது உலகில் எதுவுமே இல்லை.இன்று நடப்பதைப்போன்று தவறுகள் நாளை நடை பெறாமல் தவிர்க்க வேண்டுமாயின் இது விடயமாக நாம் சிறந்ததொரு நீண்ட நாள் நிலைத்து நிற்கக்கூடிய திட்டங்களை வகுக்க வேண்டும். அதில் வைத்தியசாலை நிருவாகத்துடன்,வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக்கள்,நம்பிக்கையாளர் சபையினர்,பிரதேச அரசியல் பிரமுகர்கள் ,ஊடகவியலாளர்கள்,பிராந்திய சுகாதார சேவைகளின் உயர் அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.இங்கே நிகழ்வுகள்  பற்றி பக்கச்சார்பின்றி ஆராயப்பட  வேண்டும்,நிகழ்வுகளிற்கான பின்னணிகள்,உடனடிக்காரணிகள்,மறைமுகக்காரணிகள் பற்றி வாதிட வேண்டும்,ஈற்றிலே இனம்காணப்பட்ட காரணிகளை நிரந்தரமாக இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மட்டுமன்றி எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறாதிருக்கும் வண்ணம்  விழிப்புணர்வுடனும் இருக்க திட்டமிட வேண்டும்.

வைத்தியசாலை நிருவாகிகள் தமது நிறுவனத்தை பாதுகாப்பதற்காகவும் நிறுவன சக ஊழியர்களை பாதுகாப்பதற்காகவும்,உண்மைகளை திரித்துக்கூறி  சம்பத்தப்பட்டவர்களது கவனத்தை திசை திருப்ப நடவடிக்கை எடுக்கக்கூடாது.

வைத்தியசாலையில் சேவையாற்றுபவர்களுக்கு Stress  என்று அழைக்கப்படும்  மன அழுத்த  நிலை பல்வேறுபட்ட காரணிகளால் ஏற்படலாம் ,அவ்வாறான காரணிகளுள் ,மேலதிகமான வேலைப்பழு (Work  overload),ஆள்பற்றாக்குறை (Short  of  Staff), சந்தோசமற்ற வேலைசெய்யுமிடம் (Unpleasant working environment), போதிய உபகரணங்களின்மை (lack of  equipment & instrument) போன்றவை மிகவும் முக்கியமானவை.எனவே ஊழியர்களின் மன உளைச்சலை குறைக்கக்கூடிய  சூழலை நிருவாகிகள் ஊழியர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்,தேவையான ஆளணி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மீண்டும் இங்கு நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால் வைத்தியசாலைக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள உறவு நன்கு விருத்தியடையவேண்டும் அத்துடன் இது எங்கள் வைத்தியசாலை,இதனை பாதுகாக்க வேண்டியது எமது கடமை என்பதை ஒவ்வொரு பிரதேச வாசியும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதற்காக வைத்தியசாலைச் சட்டங்களை  மீறவோ, கண்டபடி உள்நுழைந்து பணிபுரிவோரைக் கேள்வி கேட்டு அவமானப்படுத்தவோ முனையக்கூடாது. அத்துடன் வைத்தியர்கள் உட்பட அனைத்து  வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களும்,நேரந்தவறாது  கடமைக்கு செல்ல வேண்டும். நோயாளிகள் வைத்தியசாலைக்கு வரும் அடிமைகள் அல்ல  விருந்தாளிகள் என எண்ண வேண்டும்.நோயாளரது உரிமைகளை மனதிற்கொண்டு அவற்றை பாதுகாக்கக்கூடிய  வகையில்,மனித நேயத்தை முன்னிலைப்படுத்தி இரக்க சிந்தையுடன் நோயாளருக்கான  சேவையை செய்யவேண்டும்.

பொதுமக்கள் பிரச்சனைகளை /நிகழ்வுகளை உரிய அதிகாரிகளுக்கு சிறந்த , ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் அறியத்தந்து பரிகாரம் காண முற்பட வேண்டும்.. இவ்வாறான செயல்பாடுகள்  ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் அவப்பேரையும் கணிசமானளவு குறைக்க வழிவகுக்கும்! 

2 comments:

  1. Oru thiruththam,, kilakku maahana oru sila hospitals ena inku searkkavum. because Kalmunai Asraf hospital, Kalmunai north base hospital enpavattril unmaiyil nalla sevaiyai makkal peruhintranar,

    ReplyDelete
  2. Such things may happen in very few cases, but most of the hospitals are doing well. Such problems should be solved there itself.

    ReplyDelete

Powered by Blogger.