அயோத்தில் ராமர் கோயில் கட்டியே தீருவோம், இதற்கென இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பா.ஜ., உறுதியாக இருப்பதாகவும், இதற்கென இறைவனிடம் பிரார்த்தித்து வருவதாகவும் மோடியின் நெருங்கிய உதவியாளரான அமீத்ஷா இன்று நிருபர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சியினர் தங்களின் பிரசார பயணத்தை துவக்கியுள்ளனர். தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மோடி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் சென்று பிரசார பயணத்தை துவக்கியுள்ளார். காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்பட்டால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்கிறார் மோடி. இன்று அல்லது நாளை மோடி டில்லி செல்கிறார். தொடர்ந்து அயோத்தி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் உத்திரபிரதேச மாநில தேர்தல் குழு பொறுப்பாளராக மோடியின் நெருக்கமானவரான அமீத்ஷா நியமிக்பபட்டுள்ளார். இவர் மோடியின் அரசில் அமைச்சராக இருந்தவர். இவருக்கென கட்சியின் தனிச்செல்வாக்கும் உண்டு . இன்று அவர் அயோத்தி சென்றார். அங்குள்ள பா.ஜ., தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் ;
ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் ;
நான் ராமரை சென்று வழிபட்டேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பா.ஜ.,வின் முக்கிய நோக்கம். நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம் இந்தியாவில் நல்ல அரசாங்கம் , காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்று . அயோத்தியில் விரைவில் சிறப்பான ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறோம். இந்நேரத்தில் அவர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷமும் எழுப்பினார்.
இடதுசாரிகள் எதிர்ப்பு :
அமித்ஷாவின் பேச்சுக்கு இந்திய கம்யூ., கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜ்யசபா எம்.பி.,யான டி .ராஜா கூறுகையில்: இவரது பேச்சு இந்துத்துவா கொள்கையை வெளிப்படையாக பா.ஜ., பிரதிபலிக்கிறது. அதுவும் மோடி தேர்தல் பிரசார குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் இது போன்று பேசப்படுகிறது. இவ்வாறு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது போன்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கூறுகையில்; மோடி அரசியல் உ .பி.,யில் எடுபடாது. அவர் இங்கு வெற்றி பெற முடியாது. இது போன்று ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராம்சுக்லா கூறுகையில் தேர்தல் வரும்போதெல்லாம் ராமர் கோ்யில் விவகாரத்தை பா.ஜ., கையிலெடுக்கும் என்றார். சில காங்., தலைவர்கள் அமீத்ஷாவை உ.பி., மாநிலத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என காங்., தலைவர்களில் ஒருவரான பிரமோத் திவாரி கூறியுள்ளார்.
அமைச்சர் சல்மான் குர்ஷித் கண்டனம்; அமித்ஷா பேச்சிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இப்போது மட்டுமல்ல எப்போதும் அயோத்தி பிரச்னையை கிளப்புவதையே பா.ஜ., வாடிக்கையாகக் கொண்டுள்ளது; மக்களை முட்டாளாக்க பா.ஜ., முயற்சிக்கிறது; இதன் மூலம் அக்கட்சியின் தந்திர வேலை வெட்ட வெளிச்சமாகிறது; அயோத்தி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பது அனைவரும் அறிந்தது; வழக்கு நிலுவையில் உள்ள போது அது தொடர்பாக சர்ச்சைக்குரிய முறையில் கருத்து வெளியிடுவது சட்டத்திற்கு எதிரானது. இவ்வாறு குர்ஷித் தெரிவித்துள்ளார்.

Post a Comment