Header Ads



'அரசாங்கத்தின் எதிராளிகள் என்று காண்பிப்பதன் மூலம் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுக்க முடியாது'

வடக்கில் இன ஒற்றுமையினையும்,தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலினையும் தக்க வைத்துக் கொள்ள வட மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சியினை ஆதரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியம்,முஸ்லிம்களை பிரித்து அடையாளப்படுத்தும் நிலையினை ஏற்படுத்தாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இது குறித்து வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவரும்,வவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி தெரிவிக்கையில்,

வடக்கில் காணப்பட்ட அச்ச சூழ்நிலை அகன்று தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ ஆரம்பித்துள்ளனர்.இதன் மூலம் பல வருடங்களாக எம்மில் இருந்து நீண்ட இடைவெளியினை ஏற்படுத்திய உறவு மீண்டும் நெருக்கமானதாக மாறிவருகின்றது.இந்த நிலையினை தொடர்ந்து வவுனியாவிலும்,வன்னி மாவட்டத்திலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலையுள்ளது.

குறிப்பாக வன்னி மாவட்டத்தை பொருத்த வரையில் தமிழ் பேசும் மக்கள் இழந்தது ஏராளம்.அவற்றை பெற்றெடுக்கின்ற முயற்சிகளில் தற்போது நாம் ஈடுபட்டுவருகின்றோம்.ஒரு போதும் எதிர்கட்சி அரசியல் செய்வதன் மூலமோ,தம்மை அரசாங்கத்தின் எதிராளிகள் என்று காண்பிப்பதன் மூலமோ,எதையும் எமது மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கடந்த கால தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தமது வேட்பாளர்களை நிறுத்தியமையால் நாம் எமது பல பிரதி நிதித்துவத்தை இழக்க நேரிட்டது.இழக்கப்பட்ட பிரதி நிதித்துவத்தினால் எம்மிலிருந்து பறி போனவைகள் ஏராளம்.

குறிப்பாக இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்த விசமத் தனமான பிரசாரங்களால் வவுனியா மாவட்ட முஸ்லிம்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டனர் இருந்த போதும், அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததின் காரணமாக அமைச்சர் றிசாத் அவர்களின் முயற்சியினால் இந்திய உயர் ஸ்தானிகரை நேரில் சந்தித்து உண்மை நிலையினை விளக்கினோம்,அதன் பிறகு சில நல்ல முடிவுகள் எமக்கு கிடைத்தன.நாமும் அதிகாரமில்லாத எதிர் கட்சி அரசியல் செய்திருந்தால் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு திட்டமும் எம்மிடமிருந்து பறிபோகியிருக்கும்.கடந்த 20 வருட காலத்துக்குள் முஸ்லிம்கள் இழந்தது ஏராளம்.அவற்றை சிறுக சிறுக பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சந்தரப்பம் ஏற்பட்டுள்ளது.அபிவிருத்தி திட்டங்களாக இருந்தால் என்ன ,நியமனங்களாக இருந்தால் என்ன மீள்குடியேற்றமாக இருந்தால் என்ன எல்லவற்றையும் பெற்றுக் கொள்ள முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தலைமைகள் இருக்க வேண்டும்.அதுவும் ஆளும் கட்சியில் இருக்க வேண்டும் என்பதை எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

இவ்வாறு 20 வருடங்களாக துன்பியல் வாழ்வை அனுபவித்துவரும் வன்னி மாவட்ட முஸ்லிம்களை இனிமேலும்,இன ரீதியாக பிளவுபடுத்தி, அவர்களை ஏனைய சமூகத்தின் விரோதிகளாக காண்பிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதில் எமது ஒன்றியம் மிகவும் அவதானமாக இருக்கின்றது. இந்த காரணங்கள் உட்பட எதிர்கால சமூகத்தின் நலன்கருதியும் வடக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதே  காலத்தின் பொருத்தமாகும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

3 comments:

  1. படு கேவலம் இதை விட சாகலாம்.

    ReplyDelete
  2. அரசாங்கத்தை எதிர்ப்பதுபோல் யாரும் காட்டிக்கொள்ளவேண்டாம், ஆனால் வாக்கிடும் நேரம் அரசாங்கத்திற்கு வாக்குகளை இடாமல் வீட்டுக்கு அனுப்புவதுதான் நமக்கும் பாதுகாப்பு ஏனெனில் அரசாங்கமும் நமது விடயத்தில் அப்படித்தான் இருமுகம் காட்டி சதிவேலை செய்து வருகின்றது அதற்குப்பகரமான கைமாறுதான் இது.

    ReplyDelete
  3. படத்தைப்பாத்தீங்களா? சும்மா வீதியிலே போய்க்கொண்டிருந்த ஒருவர் தேனீர்க்கடைக்குள்ளே வந்து சீனி சாயம் கூட்டி ஒரு டீ ஒடர் பண்ணும் வேளையில் அவரோட மூஞ்சி எப்பிடி இருக்குமோ அதுபோலதான் இருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.