கடைக்கு சென்று முகத்தை காட்டுங்கள் - தேவையான சாமான் கிடைக்கும்..!
கடைக்கு செல்பவர்கள் இனி, தங்களது, "கிரெடிட், டெபிட்' அட்டைகளை தங்களுடன் கொண்டு செல்ல வேண்டியதில்லை; மாறாக, முகத்தை காட்டினாலே, கடைக்காரர்கள், பொருட்களை கொடுத்து விடுவர். ஆம், ஆஸ்திரேலியாவில், இதுபோன்ற புதுமையான தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரிய, "ஷாப்பிங் மால்' போன்ற இடங்களுக்கு செல்லும்போது, நம் முகம் கேரமாவில் பதிவு செய்யப்பட்டு, அது, நம் வங்கி கணக்குடன் இணைக்கப்படும். பின், நாம் "ஓகே' என, கிளிக் செய்தால், நமக்கு தேவைப்படும் பொருட்களை அள்ளிக் கொண்டு வரலாம். இதன் மூலம், கடன் அட்டைகள் பயன்படுத்துவது பெருமளவில் குறையும்.
இது குறித்து, இத்தொழில் நுட்பத்தை வடிவமைத்த, ருஸ்லன் இசரென்கோ கூறியதாவது,
இப்புதிய தொழில் நுட்பத்தில் வாடிக்கையாளர்களின் முகம்தான் ரகசிய குறியீட்டு எண் (பின்). இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் யார் என்பது தெளிவாக தெரிந்துவிடும். சில நேரங்களில், இந்த வசதியை பயன்படுத்த முடியாதபோது, தங்கள் அட்டையின் குறியீட்டு எண்ணை சொன்னால் போதும். நம் முகமே அடையாளமாக உள்ளதால், இதில், டெபிட், கிரெடிட் அட்டையோ, மொபைல்போனோ அல்லது பணப்பையோ நாம் கொண்டு செல்ல தேவையில்லை. வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது எல்லாம், தங்களது வங்கி விவரங்களை பூர்த்தி செய்து தர வேண்டியது ஒன்று மட்டும்தான். நம்முடைய விவரங்கள், ஒருமுறை ஸ்கேன் செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டு விடும்.
நம் முகத்தை, கேமரா முன் கொண்டு செல்லும்போது, ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்களுடன் ஒத்துபோகும் பட்சத்தில், நம் விவரங்கள் கம்ப்யூட்டர் திரையில் தெரியும். அப்போது, நாம், "ஓகே' என, "கிளிக்' செய்தால் போதும்; நாம் எங்கு வேண்டுமானாலும் சென்று, நமக்கு தேவையான பொருட்களை வாங்கி வரலாம். இத்திட்டம், அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment