இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை காக்கும் மொழி எது..?
இலங்கை முஸ்லிம்களின் தாய் மொழி தமிழ் மொழியாக இருந்த போதும், முற்காலத்தில் இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே தங்களின் தனித்துவ அடையாளத்தை காண்பிப்பதற்காய் தமிழை அறபு எழுத்துருவில் எழுதி வந்ததை நாம் காண்கிறோம். அதனை அறபுத்தமிழ் என அழைப்பர்.
அறபுத் தமிழ் என்றால் தமிழ் மொழியை அறபு அச்சரத்தில் எழுதுகின்ற முறையாகும். அறபு எழுத்து அச்சரங்களை வாசிக்கத் தெரிந்தவர்கள் இதனை ஓரளவு வாசித்து விளங்கக் கூடிய வகையில் இருந்தது. பெரும்பாலான பொதுமக்களால் அறபுத் தமிழை வாசிக்க முடியாவிட்டாலும் உலமாக்கள், லெப்பைகள் போன்றோர் இம்மொழியில் எழுதுவதை வழக்கத்தில் கொண்டிருந்தனர்.
அறபுத்தமிழ் எனும் போது தமிழில் உள்ள சில எழுத்துக்களுக்கு அறபு அச்சரம் இல்லாத காரணத்தால் சில அச்சரங்கள் புதிதாக கண்டு பிடிக்கப்பட்டதையும் காணலாம். அவை அறபு எழுத்தில் இல்லாவிடினும் அதன் வடிவில் இருந்தது. உதாரணமாக பள்ளி என்பதில் வரும் பானாவுக்கு அறபு அச்சரம் இல்லாத காரணத்தால் 'ப' (டீ) என்ற அறபு எழுத்தின் கீழ் மூன்று புள்ளிகளை இடுவதன் மூலம் 'ப'(P) வாக கொள்ளப்பட்டது.
சாதாரணமாக குர்ஆனை வாசிக்கத் தெரிந்த அனைவராலும் அறபுத் தமிழை பூரணமாக வாசிக்கக் கூடிய ஆற்றலை பெற முடியாது. மாறாக அறபுத் தமிழில் உள்ள புதிய அச்சரங்களை அறிந்திருக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாகவே அறபுத் தமிழை குறிப்பிட்ட ஒரு சிலரால் மட்டுமே கையாள முடிந்தது.
அறபுத் தமிழ் தோன்றக் காரணம்.
தமிழ்நாடு, மற்றும் இலங்கை முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும் தமது தனித்துவத்தை காண்பிப்பதற்கு என்ன வழி என ஆராய்ந்ததன் எதிரொலியாக அறபு அச்சரம் கொண்டு தமிழை எழுதும் அறபுத் தமிழ் உருவாகியது. அத்துடன் முஸ்லிம் உலகின் பிரபல்யமான புலவர்கள் மற்றும் உலமாக்கள் தமிழ் மொழியை நன்கு அறிந்திருந்தாலும் அவர்கள் தமிழ் மொழியின் இலக்கண மரபுகள் பற்றிய அறியாமை அல்லது அறிய விரும்பாமை காரணமக தமிழை, தமிழில் எழுத விரும்பாததால் அறபுத் தமிழில் எழுதுவதில் மனத் திருப்தி கண்டார்கள். தமிழை தமிழ் அச்சில் எழுதுவது ஹராம் போன்ற நிலையம் இருந்தது.
அறபுத் தமிழில் காணப்படும் பல நூல்களை ஆராய்ந்தால் பழங்கால தமிழ் நடையும், கொச்சைத் தமிழையும் காணக் கிடைப்பதன் மூலம் அறபுத் தமிழை கையாண்டவர்களில் நிறையப் பேர் தமிழ் இலக்கண அறிவற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் பொதுமக்களின் புழக்கத்தில் இம்மொழி பரவலாக்கப்படாததால் அறபுத் தமிழ் பாரிய தோல்வியடையக் காரணமாக இருந்தது. காலப் போக்கில் மக்கள் மத்தியில் பரவலாக வாசிக்கப்படும் தமிழ் அச்சரங்களிலேயே தமிழை எழுதும் நிலைக்கு அறிஞர்கள் தள்ளப்பட்டனர்.
அறபுத் தமிழை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டுமா?
அறபுத் தமிழை மீண்டும் முஸ்லிம்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சிலர் கூறுவதை கடந்த சில வருடங்களாக நாம் காண்கிறோம். இதன் மூலம் நமது தனித்துவத்துவ மொழி அடையாளத்தை பெறலாம் என்பது அவர்களின் வாதம். இவ்வாறு வாதம் புரிவோரிடம் அறபுத்தடிழை கொடுத்து சரளமாக வாசியுங்கள் என்றால் இவர்களே முழிப்பார்கள். இந்த நிலையில் அறபுத் தமிழை மீண்டும் அறிமுகப்படுத்துவதால் சமூகத்துக்கு ஏற்படும் நன்மை என்ன? இதன் மூலம் மொழியில் நமக்கான தனித்துவத்தை நிலை நாட்டமுடியுமா? அறபுத்தமிழ் மூலம் சர்வதேச உறவை வளர்க்க முடியுமா? என்பது பற்றி சிந்திப்பது அவசியமாகும்.
அறபுத் தமிழை மீண்டும் முஸ்லிம்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் எந்த நன்மையும் கிடைக்கப்ப போவதில்லை என்பதே எனது உறுதியான கருத்தாகும். காரணம் இன்றைய கனணி யுகத்தில் தமிழ் மொழி கூட 'தங்கிஷ்' எனப்படும் தமிழை ஆங்கில அச்சரங்களில் எழுதும் நடைமுறை புழக்கத்தில் உள்ளதால் அறபு அச்சரத்தில் தமிழை எழுதும் முயற்சி வெற்றி பெறுவதற்கும் அப்பால் அது எந்த நன்மையையும் தரக் போவதாக இல்லை. தமிழ் மொழியை தங்கிஷ்ஷில் எழுதுவதன் மூலம் எத்தகைய தனித்துவத்தையும் பெற முடியாது.
ஒருகாலத்தில் இஸ்லாம் மார்க்கம் புரோகிதர்களின் கைகளில் இருந்ததால் அறபுத் தமிழில் சில மௌலீதுகளையும், ராசி பலன் கிதாபுகளையும் எழுதி அவற்றை பொதுமக்கள் விளங்கிக் கொள்ளாத வகையில்; அவற்றை விரித்து ஏதோ வேத நூல்கள் போல் காண்பித்ததால் அத்தகைய அறபுத் தமிழ் நூல்களுக்கு மக்களிடமும், மார்க்க அறிஞர்களிடமும் மதிப்பாயிருந்தது. தற்போது சமூகத்தில் சமய விழிப்புணர்வும் இஸ்லாம் பற்றிய தெளிவான அறிவும் அதிகம் உள்ளதால் அறபுத்தமிழில் எழுதி மக்களை மயக்கும்; தேவை அற்றுப் போய்விட்டது. அதனால் அறபுத் தமிழை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை நிலைநாட்டவோ முடியாது. இதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் வெறும் விழலுக்கிறைத்த நீராகவே முடியும்.
முஸ்லிம்களின் தனித்துவ மொழியை இனங்காண்பது எப்படி?
இலங்கை முஸ்லிம்கள் தனியான இனமாக இருந்த போதும் அவர்கள் தனித்துவமிக்க, தனியான தேசியம் என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளாமைக்கு மொழி மட்டுமே ஒரேயொரு தடையாக இருக்கிறது. முஸ்லிம்களும் தமிழ் பேசுபவர்களாக இருப்பதனால் முஸ்லிம் தேசியம் வலுவிழந்து நிற்கிறது. அதேபோல் முஸ்லிம்கள் சிங்களத்தை அல்லது ஆங்கிலத்தை பேசினாலும் கூட அவர்களால் தேசியத்தை நிலைநிறுத்த முடியாது.
அதே பால் இன்ற இலங்கையில் இனவாதம் முற்றியுள்ள நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் தமது சர்வnதுச முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பாடலை வேண்டி நிற்கும் தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை முஸ்லிம்களின் தேசியத்தைக் காட்டக் கூடிய வகையில் எந்த மொழியை தேர்ந்தெடுப்பது, அறிமுகப்படுத்துவது எனும் கேள்வி எழுகிறது. சிலர் அறபுத்தமிழை கற்ற வேண்டும் என்கிறார்கள். இது தமிழ்; பேசும் உலகை தவிர ஏனைய முஸ்லிம்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். அறபுத் தமிழ் மூலம் நாம் எத்தகைய தனித்துவத்தையோ, சர்வதேச முஸ்லிம்களுடனான தொடர்பாடலையோ ஏற்படுத்த முடியாது.
அறபு மொழியை முஸ்லிம்கள் மத்தியில் அறிமுகம் செய்ய முடியுமா?
நமது நாட்டின் அரசாங்க பாடசாலைகளில் அறபு மொழி முஸ்லிம்களின் கட்டாய பாடமாக ஒரு காலத்தில் இருந்த போதும் அறபு மொழி பொதுமக்கள் மத்தியில் எடுபடவே இல்லை. இது எந்த அளவுக்கு என்றால் அறபு மத்ரசாக்களில் படித்து வெளியேறுவோர் கூட அறபை இலக்கண சட்டப்படி எழுத தெரிந்திருந்த போதும் அவர்களது பேச்சு வழக்கில் அறபு மொழி செல்வாக்கு செலுத்த முடியவில்லை. இன்றும்கூட மௌலவிமார் தமக்குள் தமிழிலேயே பெரும்பாலும் உரையாடுவதையும் உலமா சபையின் எந்தவொரு கூட்டமும் அறபு மொழியில் நடத்தப்படுவதில்லை என்பதையும் வைத்துப் பார்க்கும் போது அறபு மொழியை இலங்கையின் பாமர முஸ்லிம்களிடையே அறிமுகப்படுத்துவது முடியாத காரியம் என்பது தெளிவாகிறது.
அத்துடன் அறபு நாடுகளில் கூட சுத்தமான அறபு மொழி பாமர மக்களால் பேசப்படுவதில்லை. எழுத்தில் மட்டுமே சுத்தமான இலக்கண அறபு மொழியை காணலாம். பேச்சு மொழி என்பது நாட்டுக்கு நாடு பாரிய வித்தியாசத்தில் உள்ளதைக் காண்கிறோம். அறபிகளால் கூட இவை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வேற்று மொழிகளும் கலந்து சிதைந்து போயுள்ளதையும் காண்கிறோம். உதாரணமாக சஊதி அரேபிய பேச்சு மொழியை தெரிந்த ஒருவரால் இலகுவில் குவைத் பேச்சு மொழியை புரிந்த கொள்ள முடியாது. அதிலும் லிபியா, மொரோக்கோ நாட்டு பேச்சு அறபு மொழியை அறவே புரிய முடியாது.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது அறபு மொழியை நமது நாட்டு பாமர மக்களிடையே பரப்ப ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாலும் அதனையும் நமது நாட்டு முஸ்லிம்களின் வழக்கத்தில் கொண்டு வருவது என்பது முடியாத காரியம் என்பது தெளிவாகிறது.
எந்த மொழி இலங்கை முஸ்லிம்களுக்கு இலகுவானது?
ஒரு காலத்தில் இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கென தனியான மொழியொன்று தேவை என்பதை உணரப்பட்டதன் காரணமாக உர்து என்ற மொழி உருவாக்கப்பட்டது. அம்மொழி அறபு அச்சரங்களைக் கொண்டு எழுதப்பட்டாலும் ஹிந்தி, அறபு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் கலக்கப்பட்டு பேச்சிலும் வித்தியாசத்தைக் காட்டும் தனித்துவ மொழியாக அறிமுகம் செய்யப்பட்டது.
இம்மொழியின் விசேட தன்மை என்னவெனில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் மற்றவர்களுக்கு தெளிவாக கேட்கக் கூடியதாகவும் கவிதை நயம் கொண்டதாகவும் அமைந்திருப்பதாகும். அத்துடன் பொதுமக்களின் வழக்கத்திலும் அம்மொழி சிதைந்து விடாமல் எழுதுவது போன்றே பெரும்பாலும் பேசப்படுவதையும் நாம் காணலாம். எந்த நாட்டை சேர்ந்த உர்து மொழி பேசுபவராக இரந்தாலும் அவர் சுத்த உர்துவை பேசக்கூடியவராக இருப்பார்.
இந்த மொழி இந்திய உபகண்டத்தில் முஸ்லிம் அல்லாத ஹிந்தி மொழி பேசுவோர் மத்தியிலும் செல்வாக்குப்பெறும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. ஹிந்தி மொழியின் அச்சரத்தில் உர்து மொழியை எழுதும் அளவுக்கு அம்மொழி ஆதிக்கம் செலுத்துவதை காண்கிறோம். இதன் காரணமாக ஹிந்தி மொழி திரைப்படங்கள் உண்மையில் உர்து மொழி திரைப்படங்களாகவே உள்ளதைக் காணலாம்.
பொதுவாக உர்து மொழிக்கும் ஹிந்தி மொழிக்கும் இடையில் உள்ள மிகப் பெரிய வித்தியாசங்களில் ஒன்றுதான் உர்து மொழியில் அறபு வசனங்கள் அதிகம் ஆக்கிரமிப்பதையும், ஹிந்தி மொழியில் சமஸ்கிருத மொழி ஆக்கிரமிப்பதையும் காணலாம். ஆனாலும் எழுத்தில் தவிர பேச்சில் பெரும் வித்தியாசத்தை காண முடியாது. அத்துடன் உர்து மொழி அதன் இனிமை காரணமாக ஹிந்தி மொழிக்காரர்களிடையேயும் ஆதிக்கம் செலுத்தி அதனையும் விஞ்சிவிட்ட மொழியாகவும் காணப்படுகிறது.
அத்துடன் உர்து மொழி என்பது வட இந்திய முஸ்லிம்கள் ஏனைய இந்திய மாநில முஸ்லிம்களின் படித்தவர்கள் மத்தியில், மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரின் மொழியாகவும், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஓரளவு புரியப்படும் மொழியாகவும் உள்ளதை காண்கிறோம்.
தற்போது இலங்கையிலும் இம்மொழியின் இனிமை உணரப்படுவதையும் நாம் பரவலாக காணலாம். அறபு நாடுகளுக்க வேலைக்காக சென்ற பலர் நன்றாக உர்து பேசுவதை காணலாம். இந்த நிலையில் இலங்கை முஸ்லிம் மக்களின் மொழியாக உர்து மொழியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்தல் மிகப் பெரிய நன்மைகளை அடைய முடியும் என்பது எனது நம்பிக்கை.

Post a Comment