பழைய பள்ளிவாசலில் தொழுகை - புதிய பள்ளிவாசல் தொடர்ந்து மூடல்
கொழும்பு - கிரண்பாஸில் நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்ட பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் அதேவேளை பழைய பள்ளிவாசலில் தற்போது தொழுகைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
கிரண்ட்பாஸ் சுவர்ணசைக்கி மாவத்தையில் பல வருடங்களாக பள்ளிவாசல் ஒன்று இயங்கிவந்தது. இப்பள்ளிவாசலுக்கருகில் அரச மரம் இருப்பதால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அப்பள்ளிவாசல் தொழுகைகள் இடைநிறுத்தப்பட்டு, பள்ளிவாசல் மூடப்பட்டு, அதற்கு பதிலாக அதன் அருகாமையில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.
எனினும் அந்த புதிய பள்ளிவாசல் திறந்ததற்கு பௌத்த பிக்குகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அந்த புதிய பள்ளிவாசலும் மூடப்பட்டது. இதுதொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதில் புதிய பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டுமெனவும், அதற்கு பதிலாக முன்னர் மூடப்பட்ட பள்ளிவாசலிலேயே தொழுகை நடத்துவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அந்தப் பள்ளிவாசலில் தொழுகையும் நடைபெற்றுள்ளது. தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கும்படி பொலிஸ் உயர் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கள் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை முஸ்லிம் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொண்டு பழைய பள்ளிவாசலிலேயே இன்று தொழுகையும் நடைபெற்றுள்ளது.

Post a Comment