மாரத்தான் குண்டு வெடிப்பில் காயமடைந்ததாக மோசடி செய்த பெண்
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கனக்கான மக்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 குண்டுகள் வெடித்தன.
இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 260க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இவர்களின் பலர் உடல் உறுப்புகள் சிதைந்து எதிர்கால வாழ்க்கை கேள்விக் குறியான நிலையில் உயிர் பிழைத்தனர்.
இந்த தாக்குதலில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ‘ஒன் ஃபண்ட் பாஸ்டன்’ என்ற தொண்டு நிறுவனம் நிதி வசூலித்தது.
கடந்த ஜூன் மாதம் வரை இந்த நிதிக்கு 6 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக நிதி குவிந்தது.
இந்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாஸ்டன் குண்டு வெடிப்பில் சிக்கி, மூளை காயமடைந்த தனக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும் என நியூ யார்க் நகரில் வசிக்கும் ஆண்ட்ரியா கவுஸ் (26), என்ற பெண்ணும் நிதிக்காக மனு செய்திருந்தார்.
இதனையடுத்து, அவரது மருத்துவ சான்றிதழ்களை ஆய்வு செய்த தொண்டு நிறுவனம் 4 லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 3 கோடி) அவருக்கு வழங்கியது.
இந்நிலையில், எப்போதோ ஏற்பட்ட பாதிப்பை பாஸ்டன் குண்டு வெடிப்பின் போது ஏற்பட்டதாக கூறி ஆண்ட்ரியா கவுஸ், போலி மருத்துவ சான்றிதழ்களின் மூலம் மோசடி செய்துள்ளதாக தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மாசச்சூசெட்ஸ் போலீசில் அந்த பெண்ணின் மீது தொண்டு நிவனத்தார் புகார் அளித்தனர். போலீசார் விரைந்துச் செயலாற்றி அந்த பெண்ணை கைது செய்தனர்.
அவர் பாஸ்டன் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர் தானா ? என அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இழப்பீட்டு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போல் குண்டு வெடித்த பின்னர் பாஸ்டன் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து, ஆண்ட்ரியா கவுஸ் மீது மாசச்சூசெட்ஸ் கோர்ட்டில் போலீசார் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரணை முடியும் வரை ஜாமினில் வெளிவர முடியாதபடி அவரை சிறையில் அடைத்து வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தொண்டு நிறுவனத்திடம் இருந்து உதவித்தொகை பெற்ற அனைவரின் மருத்துவ சான்றிதழ்களையும் மறுஆய்வு செய்யுமாறு அதிகாரிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர்

Post a Comment