எகிப்திய பொருளாதாரம் ஓர் வரலாற்று குறிப்பு (முஹம்மத் அலி காலம் முதல் ஹுஸ்னி முபாரக் காலம் வரை)
(அஹ்மத் ஜம்ஷாத். அல் அஸ்ஹரி -கெய்ரோ,எகிப்து)
கலாநிதி ஜலால் அமீன் அவர்கள் எழுதிய இந்நூல் தற்போது உலக பொருளாதார துறை வாசகர்களை கவனஈர்ப்பு செய்துள்ளது. கலாநிதி ஜலால் அமீன் அவர்கள் அரசியல் பொருளாதார துறையில் தேர்ச்சி பெற்ற எழுத்தாளரும் கெய்ரோ பல்கலைகழக பேராசிரியரும் ஆவார்.
நூற்று அறுபத்தேழு பக்கங்கள் கொண்ட இந்த நூலை வரலாற்று ரீதியாக பதின்மூன்று பகுதிகளாக பிரித்துள்ள இவர் எகிப்திய பொருளாதரத்தின் தனித்துவமான போக்கையும் அது அடையும் வழிமுறை பற்றிய தெளிவையும் கூறியுள்ளார்,
ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கு ஏற்ப பொருளாதார வடிவங்கள் மாற்றம் கண்டன.ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை அல்லது வாழ்க்கையோ பணையம் வைத்தே வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்கொண்டதாகவும் அல்லது அவ்வழுத்தங்களுக்குள் தம்மை இசைவாக்கி கொண்டனர் என்றும் கூறியுள்ளார்.
முஹம்மத் அலி யின் ஆட்சிக்காலம் எகிப்தின் பொருளாதாரம் கடன் இல்லாது சிறந்து காணப்பட்டதாகவும் சுய உற்பத்தி வருவாயில் அதிக கவணம் செலுத்தியதாகவும் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியில்லாத சுயாதீனமான பொருளாதார முறை இதுவென்றும் ஆனாலும் வெளிநாட்டு பொருளாதார முறையின் சாயலில் இருந்து தூரமாகாத முறை என்றும் முஹம்மத் அலியின் பொருளாதரத்தை நூலாசிரியர் சுட்டி காட்டுகிறார்.
ஜமால் அப்துல் நாசிர் காலம் எகிப்திய பொருளாதரத்தில் அந்நிய நாடுகளின் தலையீடு ஆரம்பித்ததாகவும் ஒரு பில்லியன் டொலர் கடன் படும் அளவுக்கு எகிப்து உள்ளாகியதாகவும் ஐரோப்பிய அமெரிக்க தொடர்பு அதிகரித்ததாகவும் இக்காலம் பற்றி கூறப்படுகிறது.
1967 இஸ்ரேளுடனான யுத்த தோல்வியின் பின் மேற்கத்தய தொடர்பு துண்டிக்கப்பட்டதன் விளைவாக அரேபிய நாடுகளின் கூட்டமைப்பு பொருளாதார திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டதாகவும் அப்துல் நாசிரின் காலம் பற்றி கூறப்படுகிறது.
அன்வர் சாதாத்தின் காலப்பகுதி வெளிநாட்டு பொருளாதாரத்துக்கு களம் அமைத்துகொடுக்க முயன்ற ஒரு காலப்பகுதியாகவும் அன்வர் சாதாத் வெளிநாட்டு கடன் உதவியில் அதிகம் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.இவரின் காலப்பகுதியில் எகிப்தின் கடன் 14 பில்லியன் டொலர்களை எட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஹுஸ்னி முபாரக்கின் காலத்தில் ஈராக்குக்கான அமெரிக்க யுத்தத்தில் எகிப்து அமெரிக்க சார்பு நிலையில் இருந்தமைக்காக எகிப்தின் ஐம்பது வீதமான கடன் விலக்களிக்கப்பட்டமையும் குறிப்பாக ராணுவ ரீதியான கடன் விளக்களிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இதன் விளைவாக எகிப்தின் மொத்த கடன் 27 பில்லியன் டொலருடன் சுருங்கியது என்றும் கூறியுள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டுக்கு அதிகம் களம் அமைத்துகொடுத்த காலப்பகுதியாகவும் அதிகமான அரச நிறுவனங்கள் தனியார் நிருவனங்களாக மாற்றப்பட்ட காலப்பகுதியாகவும் ஹுஸ்னி முபாரக்கின் காலப்பகுதி திகழ்கிறது.
மொத்தத்தில் முஹம்மத் அலி காலம் முதல் ஹுஸ்னி முபாரக் காலம் வரை ஜமால் அப்துல் நாஸிர் காலப்பகுதியை தவிர வெளிநாட்டு தலையீட்டின் மூலமோ அதன் பொருளாதார தொடர்பு மூலமோ எகிப்து எந்த வித நன்மையையும் அடையவில்லை என்பதுவே உண்மையாகும் என கலாநிதி ஜலால் அமீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment