Header Ads



'நாம் ஹலாலை விற்றோம், ஆனால் விற்கவில்லை..'' பகுதி - 2

(கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்)

நம் நாட்டில் இன்று உருவாகியிருக்கின்ற முஸ்லிம் விரோத செயல்களுக்கு பலரும் பலவிதமான காரணங்களை முன்வைக்கின்றனர். பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. முஸ்லிம்கள் மிகவும் சொற்பமாக (ஏறத்தாள 10 வீதம்) வாழும் இந்நாட்டில் எமக்கென்று சில சமூக கடமைகள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஒரு முஸ்லிம் நாடல்லாத நாடொன்றில் நாம் வாழுகின்றோம் என்பதையும் இந்த நாடானது ஒரு பல் இன, மொழி, மத, கலாச்சாரங்களை பின்பற்றும் மக்களைக் கொண்டுள்ள நாடென்பதையும் நாம் யாவரும் முதலில் ஆழமாக எமது மனங்களில் இருத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறானதொரு வாழ்வியல் சூழலில் எம்மைச்சுற்றியுள்ள ஏனைய சமூகங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியான சமூகமாக வாழவேண்டிய நாம் அவ்வாறு கடந்த காலங்களில் வாழ்ந்து வந்தோமா? என்பதுதான் இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயமாகும். இந்தக் கேள்வியை நான் உட்பட இந்த நாட்டில் வாழும் அத்தனை முஸ்லிம்களும் எமது நெஞ்சைத்தொட்டு கேட்கவேண்டும். தனிப்பட்ட குடும்ப வாழ்வில், நாம் செய்யும் வியாபாரத்தில், செய்யும் தொழிலில், எனைய சமூகங்களுடான உறவுகளில், அரசியலில், மத விடயங்களில், எமது கலாச்சார விடயங்களில், எமது பொதுவாழ்வில் என்று அத்தனை விடயங்களிலும் நாம் உண்மையான ஒரு முஸ்லிம் சமூகத்தின் உயர்ந்த பண்புகளோடு நடந்து கொண்டோமா என்று நாம் பார்ப்போமாக இருந்தால் எமது விடை எதுவாக இருக்கமுடியும் என்பதை வாசகர்களாகிய உங்களின் முடிவிற்கே விட்டுவிட நான் விரும்புகின்றேன். 

உதாரணமாக ஹலாலான பொருட்களை நுகர்வதில் அவற்றை உண்பதில் நாம் எல்லோரும் காட்டிய அக்கறை மற்றும் ஆர்வம் என்பவற்றில் ஒரு சிறிய வீதமாயினும் அதே பொருட்களை சந்தையில் நுகர்வு செய்யும் முஸ்லிம் அல்லாத, எப்போதும் எம்மைச்சுற்றியிருக்கின்ற சமூகத்தினருக்கு நாம் தனியாகவோ அல்லது கூட்டாகவோ விளங்கவைக்க அல்லது தெளிவுபடுத்த முற்பட்டோமா? இல்லை என்பதுதான் பதிலாகும். அப்படியானால் அது எமது மார்க்க கடமை இல்லையா? கவலையான விடயம் என்னவெனில் இந்த ஹலால்-ஹராம் பிரச்சினை பூதாகரமாக நாட்டில் உருவெடுத்தபோது இதுபற்றி திறந்த உள்ளத்தோடும் உண்மையாகவும் தனியாகவும் மற்றும் பொதுவாகவும் விளக்கம் கேட்டுநின்ற மாற்றுமத சகோதரர்களுக்கு எம்மில் பலரால் பூரணமாக இஸ்லாமிய அடிப்படையில் விளக்கம் கொடுக்க முடியவில்லை என்பதுதான்.

நமது நாட்டில் எத்தனைவிதமான இஸ்லாமிய தஃவா இயக்கங்கள் எத்தனை விதமான இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. அப்படியானால் தவறு எங்கே இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதை நாம் ஆராய வேண்டும். முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களினால் வழிநடத்தப்படுகின்ற இந்த பல்வேறுபட்ட சிவில் அமைப்புகளின் ஏதாவது ஒரு செயலினாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயற்பாடுகளினாலோ ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது சமூகத்தில் வாழும் அத்தனை முஸ்லிம்களும் அதற்கு பலியாக வேண்டியதொரு நிலை காணப்படுவதை யாரும் மறுத்துரைக்க முடியாது. அவ்வாறானதொரு சூழ்நிலையினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படும் சமூகத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனின் கேள்விக்கு பொறுப்புச் சொல்லவேண்டிய கடமை சமூகத்தின் பெயரால் இயங்கும் அத்தனை இயக்கங்களுக்கும் உரித்தான ஒன்றாக நாம் கருதவேண்டும் அல்லவா? அவ்வாறான பிரச்சினைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பதும் இதற்கு காரணமாக இருப்பவர்களின் கடமை என மக்கள் நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? காரணம் பாதிக்கப்படுவது அவனும் அவனது குடும்பமும் அவனை சுற்றி வாழ்பவர்களுமேயாகும். இப்பேற்பட்ட சூழ்நிலைகளில் வெறுமனே படைத்த இறைவன் மீது பாரத்தை சாட்டிவிட்டு தப்பிக்க முடியாது. தப்பிக்கவும் கூடாது. சமூகத்தின் பெயரால் இயங்கும் அத்தனை பிரிவினரும் தமது சமூகக் கடமைகளை எப்பொழுதும் முன்நிறுத்தியே செயல்பட வேண்டும் என்பதுதான் நியதியாகும்.

ஆனால் முஸ்லிம்கள் மிகச் சிறுபாண்மையாக வாழும் இந்நாட்டில் எமது இஸ்லாமிய அமைப்புகள் கடந்த காலங்களில் எவ்வாறு நடந்து கொண்டன? நாம் எமக்குள்ளேயே பல்வேறு விதமான போட்டிகளை போட்டுக் கொண்டோம் அல்லவா. பள்ளிவாசல்களை கட்டுவதில், மத்ரசாக்களை அமைப்பதில், ஏழைக்குமர்களுக்கு வாழ்வமைத்துக் கொடுப்பதில், அநாதைகளை பராமரிப்பதில், பொதுக்கிணறுகளை கட்டுவதில், மலசல கூடங்களை அமைப்பதில், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில், ஏழைச்சிறார்களுக்கு கல்வி வசதி செய்து கொடுப்பதில், விதவைகளுக்கும் நோயாளிகளுக்கும் உதவிசெய்வதில், ஆடுமாடுகளை அறுத்து குர்பான் கொடுப்பதில், இப்தார் நிகழ்ச்சிகளை நடத்துவதில் என்று எல்லாவிதமான நல்ல காரியங்களையும் செய்வதில் நாம் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டோம். ஆனால் எம்மைச்சுற்றி எப்போதுமே வாழ்ந்து வரும் முஸ்லிம் அல்லாத சமூகத்தினர் விடயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதுதான் நாம் இன்று எம்முன் நிலைநிறுத்த வேண்டிய முக்கியமான கேள்வியாகும். 

குறைந்த பட்சம் எமது புனிதமான மார்க்கம் எமக்கு அறிவுறுத்தி நிற்கின்ற பண்புகளையாவது நாம் இவ்வாறான விடயங்களில் மாற்றுமத சகோதரர்கள் தொடர்பாக கடைப்பிடித்தோமா? அவ்வாறு சிலவேளைகளில் சிலர் கடைப்பிடித்தாலும் அது போதுமான அளவில் அல்லது சொல்லிக்கொள்ளுமளவிற்கு செய்யப்பட்டதா? என்பன போன்ற விடயங்களை நாம் ஆராய்ந்து பார்ப்போமாக இருந்தால் எமது ஒட்டுமொத்த விடை எதுவாக இருக்க முடியும்?

தொடரும்..!

4 comments:

  1. நிச்சயமாக பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும்...இயக்க வல்லாதிக்கத்தை உருவாக்குவதில் ஏற்படுத்த எடுத்த முயற்சியில் ஒரு குறிப்பிட்ட வீதத்தையேனும் மாற்று மத சகோதரர்களுக்காக முன்மாதிரியாக வாழ்வதில் எடுத்துகாட்டாக இருந்திருந்தால் இத் துரதிஷ்ட நிலைமை உருவாகி இருக்காது.....

    ReplyDelete
  2. Nienkal Etharkkumun Aanka Erunthierkal Sir,
    Question Very Easy, Answer Very Difficult
    ============Kalmunai Mohamed Fowse++++++++++++


    ReplyDelete
  3. முஸ்லிம்களாகிய நாங்கள் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பெருமை பட்டுக் கொள்கிறோம், வரலாற்று ஆதாரங்களை வைத்து தம்பட்டம் அடிக்கிறோம் ஆனால் ஆயிரம் வருடங்கள் ஆகியும் இஸ்லமிய விழுமியங்களில் , குறிப்பாக இலங்கை மாந்தர் அணைவரது அன்றாட வாழ்க்கையிலும் தொடர்புபட்ட ஹலாலை மக்கள்மயப்படுத்த தவறி விட்டோம்.இதற்காக நாங்கள் வெட்கப்படுவதில்லை.இன்னும் எந்தப் பள்ளியை தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவது என்ற சிந்தணையில் எந்த இயக்கத்தை தட்டிவைப்பது,எந்த இயக்கத்தை குட்டிவைப்பது என்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.இந்த நிலை மாறாதவரை,p.b.s.போன்ற
    பேரினவாதம் காலத்துக்குக் காலம் தோன்றி வல்லாதிக்கவாதிகளை தட்டிக்கொண்டும்,முட்டிக்கொண்டுமே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.