Header Ads



அரசியல் தலையீடுகள் மூலம் ஏற்பட்ட 2013 ஹஜ் கோட்டா பங்கீட்டினால் ஹஜ் பயண ஏற்பாடுகள் ஸ்தம்பிதமடையுமா?

ஏகாதிபத்தியம் பேசும் அரசியல், மற்றும் ஏகபோக உரிமை பேசும் முகவர்களினால்  கடந்த 2006 இலிருந்து, ஹஜ் கோட்டா (  சவூதி அரசாங்கத்தால் வருடா வருடம் ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்படுவதைப் போல் இலங்கக்கும் கிடைக்கும்  ஹஜ் செல்ல அனுமதி பெற்ற யாத்திரிகர்களின் எண்ணிக்கை )பங்கீட்டில் பல வகையான பாரபட்சங்கள் நடந்தேறியது யாரலும் மறுக்க முடியாததொன்றாகும்.

இதன் விளைவாக சென்ற வருடம் சில முகவர்கள் (முன் அனுபவம் மட்டுமின்றி, முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் வேண்டுகோளின் (MRCA) பேரில் புதிதாக விண்ணப்பித்து முகவர் அனுமதி கிடைக்காத முகவர்கள் ),  உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழ்க்கின் மூலமாக, ஹஜ் யாத்திரையயை நெறிப்படுத்த ஒரு சட்ட கோவையயை தயாரித்து சமர்ப்பிக்கும் படி முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தினை (MRCA) உயர் நீதி மன்றம் அறிவுறுத்தியது.

இதன் பேரில் (MRCA)இனால் சிபாரிசு செய்யப்பட்டு உயர் நீதி மன்றத்தால் அங்கீகரம் பெற்ற சட்டக் கோவையில் கீழ் வரும் இரண்டு நிபந்தனைகள் , ஹஜ் கோட்டா பங்கீட்டின் போது இடம் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

1. அ) விண்ணப்பித்த எல்லா முகவர்களும் கடந்த கால அனுபவமிக்க செயற்திறன் மற்றும் ஆற்றல்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு தரப்படுத்தப்படல் வேண்டும்.
     
    ஆ) இதன் அடிப்படையிலேயே ( கடந்த கால அனுபவமிக்க செயற்திறன் மற்றும் ஆற்றல்கள் ) கோட்டா பங்கீடும் மேற்கொள்ளப்பட வேண்டும் .

2. அ) சவூதி அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கோட்டா விடயத்தில் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட முகவருக்கும் ஆகக் குறைந்தது 45 யாத்திரிகர்களை ஒதுக்கீடு செய்வதற்கு  hajj committee ஆனது கடும் முயற்சி எடுக்க வேண்டும் .

ஆ) மேலும், மேலதிக கடந்த கால அனுபவமிக்க செயற்திறன் மற்றும் ஆற்றல்களை பெற்றிருப்பவர்களுக்கு ,அதிகரிக்கப்பட்ட மேலதிக ஒதுக்கீடுகள் பற்றி ஆலோசிக்கப்படலாம்.

சட்ட அங்கீகாரம் இவ்வாறு இருக்க ,இதற்கு மாற்றமாக சில முகவர்களுக்கு 20 உம், சிலருக்கு 25 உம் , 45 உம் மற்றும் இரண்டு முகவர்களுக்கு 75 எனவும் கோட்டா ஒதுக்கீடுகள் நடந்தேறியுள்ளதாக பல்வேறுபட்ட  வட்டாரங்கள் அறிவிக்கின்றன.உயர்நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதி முறைகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட முகவர்களுக்கு  ஆகக் குறைந்தது 45 ஒதுக்கப்பட வேண்டும் எனவும், மேலதிக கடந்த கால அனுபவமிக்க செயற்திறன் மற்றும் ஆற்றல்களை பெற்றிருப்பவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மேலதிக ஒதுக்கீடுகள் பற்றி ஆலோசிக்கப்பட வேண்டும் என்றுமே குறிப்பிடுகிறது...

இதில் உயர் நீதி மன்றத்தால்   (2. ஆ) ஷரத்தில் வலுவாகக் கூறப்பட்ட ”கடும் முயற்சி எடுக்க வேண்டும்” என்ற வசனம் ”ஆலோசிக்கப்படலாம்” என்ற ஒப்பீட்டு ரீதியில்  வலு இழந்த வசனத்தால் தகர்க்கப்பட்டு கணக்கில் கொள்ளப்படாததை மேற்கண்ட ஒதுக்கீடு முறையில் காண முடிகிறது.

மேலும் ஹஜ் சட்ட கோவை அங்கீகாரத்திற்கமைய, இவ் வருடத்திலிருந்து தரப்படுத்தப்பட்ட தகமை அம்சங்களின் அடிப்படையில் சகல விண்ணப்பதாரிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு, முகவர் தெரிவு செய்யப்பட  வேண்டும் என்பதும் ஒரு ஷரத்து இதற்கமைய 50 புள்ளிகளுக்கு கீழ் பெற்றுக் கொண்டவர், முகவர் தகமை இழந்தவர்கள் எனவும், 75 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள்  ஆகக் குறைந்த 45 எனும் கோட்டா தொகையிலிருந்து மேலதிக கோட்டா ஒதுக்கீடு பற்றி ஆலோசிக்கப்பட வேண்டியவர்களாக தகைமை பெறுகிறார். எனவே இதற்கமைவாகத்தான் 75 புள்ளிகளுக்கும் மேற்பட்ட குறிப்பிட்ட இரண்டு முகவர்களுக்கு 75 வீதம் பங்கீடு செய்ததாகவும் மேற்கூறப்பட்ட இதர முறைகளிலும் பங்கீடு நடை பெற்றதாகவும் நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றான..

அப்படியாயின் (2. ஆ) ஷரத்து வலுவாக குறிப்பிடும் ஆகக் குறைந்தத 45 கோட்டா ஒதுக்கீடு எங்கே..? வலு இழந்த ”ஆலோசிக்கப்படலாம்” வசனத்தைக் கொண்டு, சில அதிகார மற்றும் ஹஜ் என்பது எங்களது ஏகபோக உரிமை என வாதிட்டு குழறுபடி செய்யும் வர்க்கத்தால், அநியாயமான முறையில் அவை விழுங்கப்படுகின்றது என்பது தான் நிதர்சனம். மேலும் 50 புள்ளிகளுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரும், ”தகுதியானவர்கள்” என்றால் இருக்கின்ற கோட்டாவை எப்படி பிரிப்பது என அறிவார்ந்த கேள்வி கேட்போரே உங்களுக்கு சில பதில்கள்:

* உயர் நீதி மன்ற ஹஜ் சட்ட கோவை அங்கீகாரத்தில், குறிப்பிட்ட தொகை கோட்டாவை குறிப்பிட்ட எண்ணிக்கையயைக் கொண்ட முகவர்களுக்குத் தான் பங்கீடு செய்ய வேண்டும் என்ற ஷரத்து ஒன்றுமில்லை. மாறாக  ஆகக் குறைந்தது 45 யாத்திரிகர்கள் ஒதுக்கீடு அன்பது தான் ஷரத்து.          

எனவே சவூதி அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கோட்டாவையும், மற்றும்  ஆகக் குறைந்தது 45 ஒதுக்கீடு என்ற ஷரத்தையும் கருத்திற்கொண்டு 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களில் முதன்மையானவர்களுக்கு கோட்டா பங்கீடு செய்வது தான் சட்டத்துக்குட்பட்ட நிர்வாகத்தின் கடமை

* உதாரணமாக கோட்டா 2240 எனில்  ஆகக் குறைந்தது 45 ஒதுக்கீடு என்ற முறையில் வகுத்தால் 49 முகவர்கள். மிச்சம் இருப்பின் (2. ஆ) ஷரத்துக்கமைவான முறயில் பங்கிட்டுக் கொள்ள முடியும்.

* இல்லை , இது ஒரு புனிதம் வாய்ந்த விடயம் என்று சந்தர்ப்பவாத இஸ்லாமும்  சந்தர்ப்பவாத தர்மமும்  பேசும் முகவர்கள் ( தலை சிறந்த உலமாக்கள்  உட்பட )  சட்ட கோவை குறிப்பிட்ட தகமைகளுக்கு முன்னால் எமது தகமை பற்றிய சந்தேகத்தின் காரணமாக எல்லோருக்கும் சமமாக பங்கீடு செய்யப்பட வேண்டும் என்ற சட்ட அங்கீகாரத்திற்கு  புறம்பான ஆனால் ஒரு தர்மத்தை  வாதமாக  முன்வைக்கின்றனர். இதை சில அரசியல் பின்புலமிக்க, (அரசியல் வாதிகளுக்கு அதுவும் இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யப்படவில்லை என பெரும்பான்மை அரசியல்வாதிகளின் பின்னால் சோரம் போகின்ற கேவலம் கெட்ட சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளுக்கு வால் பிடிக்கின்ற) ஒரு சில முகவர்கள் ஏற்க மறுத்தாலும் மீதி பெரும்பான்மை முகவர்கள் ஏற்றுக்கொள்வர் என்பது பெரும்பாலும் சாத்தியமே.

மேற்க்கூறப்பட்ட இரண்டு முறைகளுக்கு மாற்றமான முறையில் கோட்டா பங்கீடு உறுதிப்படுத்தப்படுமாயின், ஹஜ் கோட்ட ஒதுக்கீடு விவகாரம்  இம் முறையும் உயர் நீதி மன்றத்தில் கேள்விக்குட்படுத்தப்படும் என்பதாக தெரிகிறது.

சென்ற முறை முகவர் தெரிவு விடயம்   உச்ச நீதி மன்றத்தில் கேள்விக்குட்படுத்தப்பட்டு  ,இவ்வாறான உத்தரவு (injunction order) பிறப்பிக்கவும் தாக்கல் செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுக்கான சட்டக் கோவை ஒன்று இல்லாத பட்சத்தில்  ஹஜ்ஜுக்கு பொறுப்பான அமைச்சர் அதிகாரமிக்கவர் எனக் கொள்ளப்பட்டதால், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மாற்றீடாக புதியதொரு சட்டக் கோவைக்கான முன் மொழிவும் MRCA ஐ கேட்கப்பட்டு  அது இன்று உயர் நீதி மன்ற சட்ட அங்கீகாரமாக இவ்வருடம் முதல் அமுலில் உள்ளது. என்பது யாவரும் அறிந்ததே. 

மேற்கூறப்பட்ட விடயங்களை உற்று நோக்கும் போது, இம் முறைக்கான புனித யாத்திரை முற்றாக ஸ்தம்பிக்க செய்யும் உத்தரவு உயர் நீதி மன்றத்தில் பிறப்பிக்கப்படும் வாய்ப்பு காணப்படுவதையும் சென்ற முறை போன்று அதை நீக்கி கொள்ள்வதற்கான சட்டத்திற்கு ஏற்புடய எது வித காரணிகளும் இல்லை என்பதை கண்கூடாக  அவதானிக்க முடிகிறது..

ஆனால் சட்டக் கோவையயை மாற்றங்கள் ஏற்படுத்தும் அதிகாரம் ஹஜ்ஜுக்கு பொறுப்பான அமைச்சருக்கு உண்டு என வாதிடும் அதி மேதாவிகள் கீழ் வரும் ஷரத்தை கவனிக்கவும்.

இலங்கை ஹஜ் யாத்திரைக்கு ஏதாவது அவசியம் ஏற்படும் இடத்து, hajj committee இன் ஒப்புதலுடன் (ஹஜ்ஜுடைய  சட்ட ஒழுங்கு முறைக்கு அமைவாக, ஹஜ் யாத்திரையுடைய  புனிதத்துவத்தை பேணிக் கொள்வதற்கான எதிர்கால சூழலை உருவாக்குவதற்கு ஏற்புடைய சட்டமாக உள்ளதா என ஆராய வேண்டும்)  மேலதிக சட்டத்தை ஹஜ் சட்டக் கோவையில் சேர்த்துக் கொள்ளும் உரிமையயை ஹஜ்ஜுக்கு பொறுப்பான அமைச்சர்  பெற்றுள்ளார்.

இதில் புலப்படுவது யாதெனில், பூதிய சட்டத்தை சேர்த்துக் கொள்ள இயலுமே தவிர இருக்கும் ஷரத்துகளை திருத்தம் செய்ய இயலாது என்பதும் அவ்வாறு திருத்தம்செய்ய வேண்டுமெனில் இனி வரும் வருடங்களில் தான் மேற்கொள்ளப்பட இயலும் என்பதும் தெட்டத் தெளிவாகப் புலப்படுகிறது .அதாவது திருத்தத்திற்குட்பட்ட சட்ட கோவையயை மீண்டும் உயர் நீதி மன்றில் சமர்ப்பிப்பதன் மூலமே அது சாத்தியம்..

மேலும் உயர் நீதி மன்ற சட்ட அங்கீகாரத்தை இலங்கை பாராளுமன்ற சட்டமாக மாற்றியமைக்கும் முகமாக சிரேஷ்ட அமைச்சர் பொளஸி அவர்கள் சகல முஸ்லிம் பா.உ களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.அவ் வழைப்பை ஏற்ற மு.கா தலைவர் மற்றும் செயலாளர் அவர்களும் சட்ட கோவையில் சில திருத்தங்களுடன்அவரைச் சந்தித்து கலந்துரையாடியமையும் இறுதியில் அது கை கூடாமல் போனதால் மு.கா வினர் விசனப்பட்டு கொண்டதாகவும் சில தகவல்கள் கிடக்கின்றன.

எனவே மேற் சொன்னவாறு  injunction order பிறப்பிக்கப்பட்டு யாத்திரிகர்கள் எவரும் பயணம் மேற்கொள்ள முடியாமல் போனால் அதற்கான முழுப் பொறுப்பையும் MRCA பணிப்பாளரும் , ஹஜ் விடயங்களுக்கு பொறுப்பான அமச்சர்களுமே,அல்லாஹுவிடம் ஜவாப் தாரிகளாவர், மாறாக நீதிமன்றம் சென்ற முகவர்களில்லை, ஏனெனில். 2006 ஆம் ஆண்டு கோட்டா பங்கீடு முறையில் நடந்த பாரபட்சம் காரணமாக பின்புலங்களற்ற குறிப்பிட்ட எண்ணிக்கையான முகவர்களுக்கு முற்றாக கோட்டா இல்லாமல் ஆக்கப்பட்டு பல் வேறு இன்னல்களுக்கும் மனச் சிதைவும் ஏற்பட்டதை இங்கு நினைவு கூற வேண்டும் .  அந்த வேளையிலும் கூட மேற்கூறப்பட்ட செல்வாக்குமிக்க பணமுதலைகளாகக் கருதப்படும் முகவர்கள் மற்றும்  சந்தர்ப்பவாத இஸ்லாம் பேசும் எவரும் அவர்களுக்கு கை கொடுக்க முன் வரவில்லை.

     ஹஜ் முகவர்கள் சங்கம் என்ற ஒன்று இருந்த போதும் கூட அநியாயம் இழைக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வென்று கொடுக்கப்படவில்லை..மாறாக அச் சங்கமானது  இன்று வரை எல்லா முகவர்கள் பக்கமும்  நின்று பேசியதில்லை என்பது புலனாகிறது. இதற்கு காரணம் ,ஹஜ் கோட்டாவுக்கு ஏகபோக உரிமை பாராட்டும் முகவர்களே அச் சங்கத்தின் உயர் பீடத்திலிருப்பதாகும்.பணமும் அரசியல் பின்புலமும் இருப்பவர்களின் ஆதிக்க பீடமாகவே  ஹஜ் முகவர்கள் சங்கம் கருதப்படுகிறது. எனவே இங்கு சில ஹஜ் முகவர்கள் வெறுமனே பணமீட்டும் வியாபாரிகளாக மாத்திரம் இருப்பதாலும் , மேலும் திணைக்களமும் பொது மக்களும் முகவர்களானவர்களை அவ்வாறான ஒரு கண்ணோட்டத்தில் மாத்திரம் பார்த்ததலுமே ஏற்பட்ட விளைவு ஹஜ்ஜுக்கான சட்டம் என்பது.

ஆகவே சட்டத்திற்கு அமைவாக எது நடந்தாலும் யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்று, மாறாக அநியாயம் இழைக்கப்படின் சட்டத்திற்கு முன் செல்வது இஸ்லாத்தில் ஒன்றும் முரணானதல்ல.

இதில் வேடிக்கை என்னவெனில் நாம் எல்லோரும் பற்பல போர்வைக்குள் ஒழிந்து கொண்டிருக்கும்  முஸ்லிம்கள், எம்மை துவம்சம் செய்ய கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் இனவாதிகளுக்கு நம்மை நாமே காட்டிக் கொடுக்கும் வேலையயை தம்மை அறியாமலே (செல்வம் என்ற சடப் பொருளுக்கு முன்னால் இக்லாஸை முற்று முழுதாக அடகு வைத்ததன் விளைவாக) செய்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறில்லாமல் நீதி மன்றம் செல்வதைத் தடுக்கும் வகையில் காத்திரமானதும்  ,ஹஜ் சட்டத்திற்கும் அமைவான முறையில் கோட்டா பங்கீடு நடை பெற வேண்டுமென பொறுப்பானவர்களிடம் நியாயமான மனுவொன்றை முன்வைப்பதோடு மேலும் செய்யும் தொழில் சுவர்க்கம் செல்லும் வழிமுறையயை அல்லஹுவுக்காக ஞாபகத்திலும் செயலிலும் எடுத்து தில்லு முல்லுகளைக் களைந்து நடக்குமாறும் இஸ்லாத்தை கற்றுத் தேர்ந்த, படித்த மற்றும் எல்லா முகவர்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

1 comment:

Powered by Blogger.