பொஸ்னியாவில் 18 வருடங்களுக்கு பின்னர் 409 ஜனாஸாக்கள் நல்லடக்கம்
(Tn) செர்பிரெனிக்கா படுகொலையின் போது கொல்லப்பட்டோரது மேலும் 409 உடல்கள் நேற்று பொஸ்னியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறு குழந்தையின் உடல் உட்பட இவர்களது உடல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
சுமார் 8000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதன் 18 ஆவது ஆண்டு நினைவு நிகழ்விலேயே இந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
ஐ.நா.வின் பாதுகாப்புக்குட்பட்ட செர்பி ரெனிக்கா பகுதி பொஸ்னிய செர்பிய படைகளிடம் வீழ்ந்ததையடுத்து, 1995 ஜூலை மாதத்தில் 5 தினங்களுக்குள் இங்கு வாழ்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு உடல்கள் பாரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டன. இந்நிலையில் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உடல்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இறுதிக் கிரியைக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட ஒரு சிலர் சேதமடைந்த எலும்புகளை கொண்டே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“இந்த ஆண்டில் நாம் படுகொலை செய்யப்பட்ட மிக இளம் வயதானவரையும் நல்லடக்கம் செய்கிறோம்.
முஹிக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையே நல்லடக்கம் செய்யப்படுகிறது” என்று நல்லடக்க நிகழ்வுக்கு பொறுப்பான அதிகாரி கெனன் கரவ்டிக் குறிப்பிட்டார். இந்த குழந்தையின் உடல் பாரிய மனித புதை குழியில் இருந்து 2012 ஆம் ஆண்டு மீட்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
படுகொலை செய்யப்பட்டோரது உடல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இதுவரையில் பொடொகரி கிராமத்தில் உள்ள ஞாபகார்த்த மையத்தில் 5,657 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இதுவரை 300 க்கும் அதிகமான பாரிய மனித புதை குழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் மேலும் பல உடல்கள் எச்சங்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளதென உத்தியோகபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Post a Comment