13: பாதுகாக்கப்பட வேண்டிய எண்!
(தம்பி)
அரசாங்கத்தின் கௌரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது – 13 விவகாரம். தனது கௌரவத்தினைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவேனும் 13ஆம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தே தீருவது எனும் கங்கணத்துடன் ஆட்சியாளர்கள் அரசியல் அரங்கில் கோர நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விவகாரத்தில் வெற்றியினைப் பெறுவதற்காக அவர்கள் என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளனர்.
இன்னொருபுறம், 13 விவகாரத்தில் அரசு – தோற்றுப் போவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. 13 ஐ திருத்தும் தீர்மானத்துக்கு - அனைத்து மாகாணசபைகளுடைய ஆதரவினையும் பெறுவதற்கு அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கிழக்கு மாகாணசபையில் அது பலிக்காமல் போகலாம். ஏனென்றால், 13 இல் திருத்தங்களைக் மேற்கொள்ளும் பிரேரணை – கிழக்கு மாகாணசபைக்குக் கொண்டுவரப்பட்டால், அதை தமது கட்சி எதிர்க்கும் என்று மு.காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இன்னொருபுறம், 13 இல் மாற்றங்களைச் செய்யும் பிரேரணைக்கு அனைத்து மாகாணசபைகளிலும் ஆதரவினைப் பெறவேண்டும் என்கிற தேவையுமில்லை. உதாரணமாக, கிழக்கு மாகாண சபையைத் தவிர்த்து விட்டு, 13இல் மாற்றம் செய்யும் பிரேரணைக்கு ஏனைய மாகாணசபைகளின் ஆதரவினைப் பெற்றுக் கொண்டு, அதை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கவும் முடியும். ஆனால், 13இல் மாற்றம் செய்யும் பிரேரணைக்கு ஆதரவளித்த மாகாணசபைகளுக்கு மட்டுமே அந்தச் சட்டம் செல்லுபடியாகும். பிரேரணை கொண்டு வரப்படாத கிழக்குக்கு அந்தச் சட்டம் பொருந்த மாட்டாது.
ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைக் குறிவைத்தே 13 இல் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு ஆட்சியாளர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே, கிழக்கு மாகாணசபையைத் தவிர்த்து விட்டு, 13 இல் மாற்றம் செய்து, அதை - அரசு ஒருபோதும் சட்டமாக்காது.
கிழக்கு மாகாணசபையைப் பொறுத்தவரையில், ஆளுந்தரப்பில் ஐ.ம.சு.முன்னணியின் 14 உறுப்பினர்களும், விமல் வீரவன்சவினுடைய தே.சு.முன்னணியின் 01 உறுப்பினரும், மு.காங்கிரசின் 07 உறுப்பினர்களும் உள்ளனர். அதேபோல், எதிர்தரப்பில் த.தே.கூட்டணி 11 உறுப்பினர்களையும், ஐ.தே.கட்சி 04 உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றன.
எனவே, கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரஸ் உறுப்பினர்களைக் கழித்துப் பார்த்தால், ஆளும் தரப்பிலும், எதிர்தரப்பிலும் தலா 15 உறுப்பினர்கள் வீதம் உள்ளனர். இந்த நிலையில், 13 விவகாரம் கிழக்கு மாகாணசபைக்குக் கொண்டுவரப்படும் போது, அதை மு.காங்கிரஸ் எதிர்க்குமானால் - கிழக்கு மாகாணசபையில் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான பிரேரணை 07 வாக்குகளால் தோல்வியடையும். இந்தக் கணக்கு ஆட்சியாளர்களுக்கும் தெரியும். எனவே, இந்தப் பொறியில் - தெரிந்து கொண்டே அவர்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.
எனவே, 13 விவகாரத்தை கிழக்கு மாகாணசபையில் வேறு வழிகளில் வெல்வதற்கான காய் நகர்த்தல்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்று கதைகள் அடிபடத் துவங்கியுள்ளன. அதில் ஒன்றுதான் - மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மனச்சாட்சியின்படி வாக்களிக்கும் ஏற்பாடுகளைக் கொண்ட சட்மொன்றினை உருவாக்கும் அரசின் திட்டமாகும்.
கடந்த வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, 'மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மனச்சாட்சியின்படி வாக்களிக்கும் ஏற்பாடுகளைக் கொண்ட அவசர சட்டமூலமொன்றினை' அமைச்சர் அதாஉல்லா சமர்ப்பித்தார். ஆனால், இதற்கு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தமது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இதனையடுத்து, 'மேற்படி சட்டமூலம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் பேசிய பிறகு - ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள்' என்று அமைச்சர் அதாஉல்லாவிடம் ஜனாதிபதி கூறியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியின் யாப்புக்கும் அதன்வழி எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கும் மாறாகச் செயற்படுவார்களாயின், அவர்கள் - தமது கட்சி அங்கத்துவத்துவத்தினையும், மாகாணசபை அல்லது உள்ளுராட்சி மன்றத்தில் வகிக்கும் உறுப்பினர் பதவியினையும் தற்போதுள்ள சட்டத்தின்படி இழக்க நேரிடும்.
ஆனால், 'மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மனச்சாட்சியின்படி வாக்களிக்கும் ஏற்பாடுகளைக் கொண்ட சட்டம்' ஒன்று உருவாக்கப்படுமாயின், உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தமது கட்சியின் யாப்பு மற்றும் அதன்வழி எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு விரோதமாகச் செயற்பட்டாலும், அவர்களை கட்சியிலிருந்தோ – மாகாண அல்லது உள்ளுராட்சி சபை உறுப்பினர் பதவிலிருந்தோ நீக்கி விட முடியாது.
ஆக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மனச்சாட்சியின்படி வாக்களிக்கும் ஏற்பாடுகளைக் கொண்ட சட்டமூலத்தினை அரசு - அவசரமாகக் கொண்டுவர முயற்சித்ததில் இருந்து - ஒரு விடயம் அப்பட்டமாகப் புரிகிறது.
அதாவது, 13 இல் மாற்றங்களை மேற்கொள்ளும் பிரேரணை கிழக்கு மாகாணசபைக்கு வரும் போது, அதற்கு ஆதரவாக மு.காங்கிரஸ் மற்றும் எதிரணி உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சி செய்யப் போகிறது. இதன்போது, தமது கட்சியின் உத்தரவினையும் மீறி, 13 தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் மாகாணசபை உறுப்பினர்களின் பதவிகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே, 'மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மனச்சாட்சியின்படி வாக்களிக்கும் ஏற்பாடுகளைக் கொண்ட அவசர சட்டமூலத்தினை' அரசு கொண்டு வர முயற்சிக்கிறது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 13 தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படும் போது, அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் பொருட்டு, தாம் ஆளுந்தரப்பினரால் விலைபேசப் படுவதாக, கிழக்கு மாகாணத்தின் மு.கா. உறுப்பினர்கள் சிலர் - கட்சித் தலைமையிடம் முறையிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இது குறித்து கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும், மு.காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீலிடம் கேட்டோம். அவ்வாறு தன்னிடம் யாரும் விலைபேசலில் ஈடுபடவில்லை என்று கூறினார். ஆனால், அரச தரப்பினர் தம்மை விலைபேசியதாக மு.கா.வின் சில உறுப்பினர்கள் கூறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையிலே 13 தொடர்பான பிரேரணையில் வெற்றி பெறுவதென்றால், மு.காங்கிரஸ் அல்லது எதிர்கட்சியில் இருந்து 04 மேலதிக உறுப்பினர்களை - அரசு விலைகொடுத்து வாங்க வேண்டும். மு.காங்கிரசின் திருகோணமலை உறுப்பினர் ஹஸன் மௌலவி கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார். எனவே, அவர் அநேகமாக - சபை அமர்வில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. எனவே, மு.கா.வின் 06 உறுப்பினர்கள்தான் சபை அமர்வில் கலந்து கொள்வார்கள். இவர்களில் 04 பேரை அரசு விலைகொடுத்து வாங்கினால் மட்டுமே 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் விடயங்கள் அடங்கிய பிரேரணையில் வெற்றி பெறலாம்.
இன்னொரு விடயத்தையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. மு.காங்கிரஸ் உறுப்பினர்களை மட்டும் குறிவைத்து - அரச தரப்பு விலைபேசலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுகிறது என்று, நாம் நினைத்தால் - அது தவறாகும். எதிரணியிலுள்ள த.தே.கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.கட்சி உறுப்பினர்களிடமும் விலைபேசல் இடம் பெறலாம்.
இந்த நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணசபை கூடுகிறது. அதன்போது, '13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் பிரேரணையினை ஆளுந்தரப்பு சமர்பிக்கலாம், சமர்பிக்காமலும் விடலாம். ஆனாலும், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவிதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது எனும் பிரேரணையொன்றினை சபையில் மு.காங்கிரஸ் சமர்ப்பிக்கவுள்ளதாக - கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும், மு.காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம். ஜெமீல் நம்மிடம் மேலும் தெரிவித்தார்.
இன்னொருபுறம், கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளிலும் 13 விவகாரம் தொடர்பான பிரேரணையில் அரசு வெற்றி பெற்றாலும் கூட, அதை நாடாளுமன்றில் சட்டமாக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். அதாவது, 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது நாடாளுமன்றத்தின் ஆளுந்தரப்பில்; 160 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 08 பேர் மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். இந்த நிலையில், மு.கா. உறுப்பினர்கள் அனைவரும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும் அரசின் முயற்சியை எதிர்தாலும் - நாடாளுமன்றத்தில் அரசுக்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மை குறையாது. அதாவது அரசுக்கு 152 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல் போகவேண்டுமென்றால், மு.காங்கிரசின் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சேர்த்து மேலும் 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 விவகாரத்தை எதிர்க்க வேண்டும்.
ஆளுந்தரப்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன ஆகியோரும் 13இல் மாற்றம் கொண்டுவருவதை வெளிப்படையாகவே எதிர்த்து வருகின்றனர். இவர்களோடு, இணைந்து இன்னுமொரு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் 13 விவகாரத்தை எதித்து வாக்களிப்பாராயின், அரசுக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் போய்விடும்.
ஆனால், இப்படியெல்லாம் கூட்டிப் பொறுக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. மு.காங்கிரசின் 08 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இலங்;கை தொழிலாளர் காங்கிரசிலுள்ள 03 நாடாளுமன்ற உறுப்பினர்களும் (இ.தொ.கா.வின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ராதாகிருஷ்ணன் - மலையக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டதால், தற்போது இ.தொ.கா.வில் 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர்) சேர்ந்து 13 விவகாரத்தை நாடாளுமன்றில் எதிர்த்தால் போதும். அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல் போய்விடும்.
ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. மு.காங்கிரசின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் - அவர்கள் அரசுக்கு விசுவாசிகளாக இருப்பார்கள் என்றும் மிக நீண்ட நாட்களாக கதைகள் உலாவி வருகின்றன. சிலவேளை, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு அல்லது பெற்றுக் கொள்வதற்காக 13 விவகாரத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றில் கைகளை உயர்த்தவும் சந்தர்ப்பம் உள்ளது.
எனவே, 13 விவகாரத்தினை கிழக்கில் தோற்கடித்து விடுவதுதான் சிறுபான்மை கட்சிகளுக்குச் சாதகமானதாகும். 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் பிரேரணை கிழக்கில் வெற்றி பெற்றால், பிறகு – நாடாளுமன்றத்தில் அது இலகுவாகச் சட்டமாகிவிடக் கூடும்.
ஆனால் ஒரு விடயத்தை நாம் மனதில் பதித்துக் கொள்தல் வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தினூடாக உருவாக்கப்பட்டுள்ள மாகாணசபை முறைமையானது, சிறுபான்மை சமூகங்களுக்கு ஏதோவொரு வீதத்தில் கிடைத்துள்ள அதிகாரமாகும். எனவே, 13ஆது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் - அரசின் செயற்பாடுகளுக்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்ஆதவரவளிப்பதென்பது, நமது கண்களை நமது கைகளால் குத்திக் கொள்வதற்கு ஒப்பாகும். நமது கண்களை நமது கைகளால் குத்திக் கொள்வதற்குப் பரிசாக, ஆயிரமாயிரம் ஓவியங்களை ஆட்சியாளர்கள் நமக்கு வழங்கக் கூடும். கண்ணிழந்த பிறகு கிடைக்கும் ஓவியங்களுக்குப் பெறுமதி கிடையாது

Post a Comment