Header Ads



தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சமூகம் கொண்டுள்ள பார்வைகள்..!

(கல்விமாணி எஸ்.எல். மன்சூர்)

'எனது பிள்ளை தரம் ஐந்து புலமைப்பரீசில் பரீட்சையில் சித்தியடையவேண்டும். அதற்குரிய புத்தகங்கள், வினாப்பத்திரங்கள் ஏதேனும் இருந்தால் தாருங்கள்' இது ஒருதாயின் வேண்டுகோள். இப்போது அவனது கற்றல் நிலைமைகள் எவ்வாறுள்ளது என்றுகேட்க 'அதுவா? காலையில் பள்ளிக்குச் சென்றால் பிற்பகல் 1.45மணிக்கு வீடுவருவான், பின்னர் மாலை 3.00மணிக்கு டியூஷனுக்குச் சென்றால் 6.00மணிக்கு வீடுவருவான். பரீட்சை அண்மிப்பதால் இரவு வகுப்புக்கும் கடந்த ஒருமாதமாக  ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு அனுப்புகின்றேன். இதற்கும் மேலாக ஏதாவது உதவிகள் செய்யுங்கள்' என்கிறார் அந்தத்தாய். இதற்கும் மேலாக ஒன்றுமே தேவையில்லை. அவ்வாறு தந்தாலும் அவனுக்கு படிக்க நேரமிருக்கிறதா? என்று கேட்க அதிகாலையில் எழுந்து படிக்கலாம்தானே அந்த நேரத்தையும் பயன்படுத்தினால் நல்லதுதானே. என்றார் அந்தத்தாய். அப்படியென்றால் அவன் விளையாட, சாப்பிட, உறவினர் வீடுகளுக்குச்செல்ல, சுதந்திரமாக உலாவ நேரமே இல்லையே? என்று கேட்க மீண்டும் அந்தத்தாய் அப்படிப் படித்தால்தானாம் அவன் பாசாகுவானாம். என்றார் தாய். ஏன் இரவு வகுப்புக்கு அனுப்பினீர்கள். அதற்கு அவர் பாடசாலையிலிருந்து தெரிவு செய்த 35மாணவர்களுக்கு மாத்திரம்தான் அந்த ஆசிரியர் கற்பிக்கின்றாராம். அவரிடம் கற்கின்ற மாணவர்கள்தான் சித்தியடைவார்களாம். ஆதனால்தான் நானும் மிகவும் கஷ்டப்பட்டு பிள்ளையை இரவு வகுப்புக்கு அனுப்பியுள்ளேன்.

பார்த்தீர்களா? தரம் 5 கற்கின்ற ஒரு மாணவனின் நிலைமையை. இன்று பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார்படுத்துவதற்காக பல பெற்றார்கள் முண்டியடித்துக் கொண்டு தன்னுடைய பிள்ளையும் சித்தியடைந்ததை சமுதாயத்திற்கு காண்பிக்க வேண்டும் என்றும், தன்னுடைய பிள்ளை இப்பரீட்சையில் சித்தியடைந்தால்தான் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பெருமை என்றும், சித்தியடையாவிட்டால் மக்குப்பிள்ளை என்றும், மக்குத்தனமான பெற்றோர்கள் என்றும், ஊராரின் பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டிவரும் என்று நினைத்து பிஞ்சுக் குழந்தைகளை எப்பாடு பட்டாவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவைக்கும் நோக்கில் இன்று வியாபாரமாகிப் போன ஒரு பரீட்சையின் அவலநிலை நமது எல்லாப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றன. இப்பரீட்சைக்கு மாணவர்களை இரவுபகல் பாராது தயார் செய்வதன் மூலம் பிள்ளை அடைகின்ற நன்மையைவிட பெற்றோரும், சுற்றியுள்ளோரும் அடைகின்ற நன்மைகள்தான் மிகப்பெரியதாகும்.

அண்மையில் வர்த்தக நிறுவனமொன்று தன்னுடைய விளம்பரத்தை மேற்கொள்வதற்கான யுக்தியாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைப் பயன்படுத்தியிருந்தது. அதாவது கிழக்கிலுள்ள ஒரு பிரதேசத்தில் புரோக்கரை ஏற்பாடுசெய்து அப்பிரதேசத்தில் கடந்தவருடம் சித்தியடைந்த மாணவர்களை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து அவர்களினது பெற்றோர்களிடம் நிறுவனத்தின் துண்டுப்பிரசுரங்களை எல்லாம் வழங்கி உங்களது பிள்ளைகளுக்கு நாம் இதோ பரிசு வழங்குகின்றோம் எங்களது நிறுவனத்தின் ஊடாக உங்களது சேவைகளை செய்வதற்கு நாம் காத்திருக்கின்றோம் என்று கூறி அந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 1000 ரூபாவுக்கும் மேலான பரிசுப்பொருட்களை வழங்கியிருந்தனர். இவ்வாறான விடயங்கள் நடைபெறுகின்றபோது அப்பிரதேச கல்வி அலுவலகத்திற்கோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ தெரியாமல் மாணவர்களை அழைத்து பரிசு வழங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி, சித்தியடைந்த மாணவர்களில் சிலருக்கு அழைப்பிதழ் அனுப்பாமல் விழா நடைபெற்றுள்ளது. சித்தியடைந்த இரண்டு மாணவர்களில் ஒருவருக்கு கிடைக்கின்றபோது மற்றவருக்கு அது கிடைக்காமல் விட்டால் அந்தப்பிஞ்சுக் குழந்தையின் உள்ளம் என்னபாடுபடும் என்பதை இந்த நிறுவனத்திற்கோ, ஏற்பாடு செய்த புரோக்கருக்கோ தெரிய நியாயமில்லை. ஏனெனில் உள்ளத்தைப்பற்றிய உளரீதியான தோற்றப்பாட்டை அறிந்திராதவர்களின் செயற்பாடுகள் இவ்வாறுதான் இருக்கும்.

இவ்வாறு பலசம்பவங்கள் இந்தப் புலமைப்பரிசில் பரீட்சையை மையப்படுத்தி காசு உழைக்கின்ற கூட்டங்கள் நாடுமுழுவதும் உலாவருகின்றனர். அதுமட்டுமன்றி சில அமைப்புக்கள் என்று பெயரிட்டு மூன்று அல்லது நான்குபேர் ஒன்றுசேர்ந்து தரம் 5 கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவரிடம் சென்று ஒரு வினாப்பத்திரத்தை தயார் செய்து ஊருக்கு ஊர்சென்று நாங்கள் இந்த அமைப்பினர். நாங்கள் வருமானத்திற்காக செய்யவில்லை. மாணவர்களின் சேவைக்காக தரமான ஆசிரியரைக் கொண்டு நடாத்துகின்றோம். உங்களது மாணவர்களை எம்மிடம் அனுப்;புங்கள் என்று அதிபரின் காலில் விழுந்து அதிபருக்கும் ஒரு பங்கு தருகின்றேன் என்று கூறி மாணவர்களை ஒன்றுதிரட்டி ஒரு மாணவரிடமிருந்து 400.00 பணத்தையும் அறவிட்டு வினாப்பத்திரத்தை வழங்கி பணமம் சம்பாதிக்கும் ஒரு கூட்டமும் நாட்டில் உலாவருகின்றது. தரம் 5க்கு கற்பிக்காத நபர்கள்கூட இந்த வேலைகளைச் செய்து கொண்டு அதிக பணத்தைக் கறக்கின்ற பேர்வழிகளிடம் ஏமாந்த பெற்றோர்கள் அதிகமதிகம். இத்தனைக்கும் இந்த ஆசிரியர்தானாம் பரீட்சைத்திணைக்களத்திற்கு வினா வழங்குபவர் என்றும் கூறிக்கொள்வார்கள். இவர்களின் கதைகளை நம்பி மாணவர்களும் ஏமாந்ததுதான் மிச்சம்.

அதுமட்டுமல்ல இன்னொரு கூட்டத்தார்; அதாவது, கெட்டிக்கார மாணவர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு மாலையில் டியூஷன் வகுப்பில் கற்பித்து அந்த மாணவர்களில் ஒரு தொகையினர் கூடிய புள்ளிகள் பெற்று தெரிவாகிவிட்டார்கள் என்றால் கற்பித்த அந்த ஆசிரியர்தான் அந்தப் பாடசாலையின் தரமான ஆசிரியர் என்று அதிபர் தொடக்கம் பெற்றோர்கள் வரையிலும் அவருக்குத் தனி மரியாதை வழங்கி, வருட முடிவில் பணப்பரிசுகொடுத்து விழாவேறு. அந்த ஆசிரியர் நினைத்தமாதிரி பாடசாலைக்கு வரலாம், போகலாம் யாரும் கண்டுகொள்ளக் கூடாது என்பதும் நியதி. இவ்வாறு கூறுகின்ற ஆசிரியர்கள் உண்மையான கற்பித்தலை அடைவு மட்டம் குறைவான மாணவர்களுக்குப் படிப்பியுங்கள் என்றால் 'என்னால் முடியாது அவர்கள் மக்குப் பிள்ளைகள்' என்று கூறுவார்கள். கற்றல் - கற்பித்தலானது கெட்டித்தனம் குறைந்த பிள்ளைகளுக்கு உரிய அடைவினை ஏற்படுத்த முனைகின்ற கற்பித்தலே சிறந்த கற்பித்தலாகும். இது ஒருபுறம். இன்னொரு புறமாகக் பார்க்கின்றபோது பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கற்பிக்க ஆசிரியர் ஒருவரை நியமிப்பது என்பது முயற்கொம்பாகவே காணப்படுகின்றது. என்னால் முடியாது என்கிற ஆசிரியர்கள்தான் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

ஏனெனில் கெட்டித்தனமற்ற பிள்ளைகளுக்கு கற்பித்து பாடசாலை, சமூகம் எதிர்பார்க்கின்ற அடைவினை அடைய முடியாதவிடத்து உரிய ஆசிரியரை அந்த சமூகமும், பாடசாலையும் தூரமாகின்ற ஒருநிலைமையும் காணப்படுகின்றது. இதற்காக சில ஆசிரியர்கள் வெறுத்தொதுக்கும் நிலையில், சில ஆசிரியர்கள் பணத்தை பிரதானமாகவைத்து இவ்வளவு தருவீர்கள் என்றால் நான் கற்பிக்கின்றேன். என்பார்கள் மாதாந்தம் ஒருமாணவரிடமிருந்து ரூ500.00 தொடக்கம் ரூ1000.00 வரையிலான பணத்தை கொடுத்து மாலை வகுப்புக்களுக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர். வகுப்பறையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர். பாடசாலையில் 25 மாணவர்களை வைத்து கற்பதற்கு பயப்படுகின்ற ஆசிரியர்கள்கூட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை வைத்து பணத்திற்காக கற்பிக்கின்ற ஒருநிலை இன்று டியூஷன் கொட்டகைகளில் காணப்படுகின்றது. எப்படியாவது தன்பிள்ளை சித்தியடைந்தால்போதும் என நினைக்கின்ற பெற்றோர்களும், இவ்வகையான டியூற்றர்களும் இணைகின்றபோது இவ்வாறான தப்புத்தாளங்கள் நடைபெற சாத்தியமாகின்றன.

புலமைப்பரிசில் பரீட்சை என்பது பாடசாலைகளுக்கு மாணவர்களைச் தேர்ந்தெடுப்பதற்கும், உதவிப் பணம் வழங்குவதற்குமாக 5ஆம்தர மாணவர்களுக்கு நடாத்தப்படும் பரீட்சையாகும். அரசாங்கத்தினால்;;; வரையறுக்கப்பட்டதும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மாவட்ட அடிப்படையில் உதவிப் பணத்தை வழங்குவதற்கும் மேலும், சிறந்த வசதிகளைக் கொண்டிருக்கின் தேசிய பாடசாலைகளிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கும் இப்பரீட்சையிலே கிடைக்கப்பெற்ற மொத்தப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டும் இப்பரீட்சை நடாத்தப்படுகின்றது. இப்பரீட்சையில் சித்திகள் ஏதும் தீர்மானிக்கப்படமாட்டாது என்றும், ஒரு வினாப்பத்திரத்திற்கு ஆகக்குறைந்ததது 35 புள்ளிகள் பெற்று இரண்டு வினாப்பத்திரங்களிலும் மொத்தமாக 70 புள்ளிகள் அல்லது அதற்குக் கூடிய புள்ளிகளைப் பெறும் பரீட்சார்த்திற்கு அடைவுச் சான்றிதழ் வழங்கப்படும். இதுதான் 5ஆம்தர புலமைப்பரிசில் பரீட்சை பற்றி, பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள பிரமாணக் குறிப்புக்களில் சிலவற்றை இங்கு தந்துள்ளேன். ஆனால் இன்று பாடசாலைகள்தோறும் மாணவர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இறுதியில் மாணவன் சோர்பிழந்து, கற்றலில் தோல்வியுற்றவனாகவும், பள்ளியென்றால் வெறுப்புற்றவனாகவும் அதிகூடிய புள்ளிகளைப்பெறுகின்ற மாணவர்கள்கூட மாற்றம்அடைகின்ற நிலைமைகள் கடந்த காலங்களில் அரங்கேற்றப்பட்டுள்ளமை யதார்த்தமான உண்மையாகும்.

எனவே, இவ்வாறான நிர்பந்தம் காரணமாக பிள்ளைகள் சிறுபராயத்திலிருந்தே டியூஷன் கல்விக்கு தூண்டப்படுகின்றார்கள். பாடசாலை முடிந்தபின்னர் அவசரமாக ஏதாவது உணவை உண்டுவிட்டு ஓடுகின்றார்கள். இந்த வயதுப் பிள்ளைகளுக்குக் கிடைக்கவேண்டிய மனப்பாங்குகள், சகாக்களுடன் சேர்ந்து வாழப்பழகுதல், மனச்சாட்சியையும் விழுமியங்களையும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ளல் போன்றன கிடைக்காததன் விளைவு சமநிலை ஆளுமை, மனநலம் போன்றவற்றுக்குப் பதிலாக இப்பிள்ளைப் பருவத்தின்போதே வயது முதிர்ந்த நிலையின் ஆளுமையும் நடத்தைப்போக்குகளும் உருவாக்கப்படுகின்றன. இதன்காரணமாகத்தான் உளவியலாளர்கள் மானிட அபிவிருத்தியில் உடலியல், உளவியல் மற்றும் சமூக நெருக்குதல்களை  தாக்குப் பிடிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவது கட்டயமாகும் என்றும் கூறுகின்றனர்.

பாடசாலைக் கல்வியினை சரியான முறையில் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் உதவியுடன், மாணவர்களின் தனியாள் வேறுபாட்டினை கண்டறிந்து, உளவியலாளர்களது கருத்துக்களை பின்பற்றி மாணவர்களுக்கு தரம் 1லிருந்து சிறப்பாக கற்பிக்கின்றபோது தரம் 5 மாணவர்களுக்கும் அதேபோன்று பாடசாலையில் கற்பிக்கின்ற நிலைமை மாறுமாக இருந்தால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்கள். பெற்றோர்களின் அதிகரித்த தொல்லை காரணமாகத்தான் இதனை பெற்றோர்கள் பரீட்சை என்றும், தாய்மாரின் பரீட்சை என்றும் அழைப்பார்கள். அண்மையில் தன்னுடைய  தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இரவுபகல் பாராது புலமைப்பரிசில் பரீட்சைக்கு படித்து பரீட்சையும் எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த அந்தச் சிறுவன் தன்னுடைய தாயாரைப்பார்த்து 'அம்மா உஙகள் பரீட்சை முடிந்துவிட்டது. நான்இப்பொழுது விளையாடலமா?' என்று கேட்டான் என்றால் இந்தப் பிள்ளையின் பருவத்து இயல்பினை என்னவென்று கூறுவது.

எனவேதான், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுவது என்பது தவிர்க்க முடியாததாக இருந்தாலும் மாணவர்களை இரவு பகல் என்று வீட்டிலும், பாடசாலையிலும், டியூஷசனிலும் படிபடி என்று கூறுவதை விட இன்றைய தேர்ச்சிமையக் கலைத்திட்டத்தின் ஊடாக உரிய தேர்ச்சிகள் அடிப்படையில் ஆரம்பத்திலிருந்தே மாணவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வழங்க வேண்டிய தேர்ச்சிகளை சரியான முறையில் அடையவைக்கின்றபோது பிள்ளைகளின் இயல்புகளுக்கேற்ப நடத்தை மாற்றங்களை வெளிப்படுத்துவார்கள். இன்று 70புள்ளிகளுக்குமேல் புள்ளிகள் பெற்றால் சித்தியடைந்துவிட்டார்கள் என்கிற மனப்பக்குவத்தை கல்விச் சமூகம் பெற்றோருக்கு ஊட்டுவதன் மூலம் மாணவர்களுக்கு இப்பருவத்தில் கிடைக்கின்ற மன அழுத்தங்கள் குறைவடைந்து எதிர்காலத்தில் சிறந்த ஆளுமையுள்ள சிறப்பான சிற்பிக்கை உருவாக்கலாம். இல்லையேல் இப்பரீட்சையின் மூலம் எதிர்காலச் சமூகத்தையே சீரழிக்கின்றோம் என்பதை நினைவிற்கொண்டு தரம் 5புலமைப்பரீட்சையில் சமூதாயத்தின் பார்வையை சரியான முறையில் மாற்றியமைப்பதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம்.


2 comments:

  1. "JAZAAKALLAH HAIRAH" very good concern and very good article. This article is very important in this pediat. Your article is hundred persent is truth. and all are should concern in this regard.

    ReplyDelete
  2. Hi Friends,

    *குருவிகளின் தலையில் பனங்காய்களை ஏற்றும் பாடவிதானம்...

    *வண்ணத்துப்பூச்சிகளின் செட்டைகளில் செங்கற்களை கட்டிவிடும் ஆசிரியர்கள்...

    *படி படியென்று ஓயாமல் உயிரை வாட்டும் பெற்றோர்கள்...

    இந்த மூன்று முளைகளிலும் கட்டப்பட்டுச் சுற்றிவரும் செக்குமாடுகளாய் நமது இளஞ்சிறார்கள்..

    அறிவுக்குத் தேடி விருப்போடு கற்பது வேறு.

    அவசரப்படுத்துகின்றார்களே என்பதற்காக தலைக்குள்ளே திணிப்பது என்பது வேறு.

    விருப்பமில்லாது உண்ணும் உணவே உடலுக்கு ஒத்துக்கொள்ளாது எனும்போது திணிக்கப்படும் விபரங்கள் மட்டும் செரிக்குமா?

    வருடந்தோறும் மனனம் பண்ணி அதை பரீட்சை மேஜையில் வாந்தியெடுத்து அதிலே கிடைக்கும் 'வெற்றியை' பெரிது பண்ணி கொண்டாடுகின்றோம்.

    வெட்கமாக இல்லை?

    ReplyDelete

Powered by Blogger.