Header Ads



ஷுறா அடிப்படையிலான தலைமை முஸ்லிம் சமூகத்தின் வெற்றியின் உயிர்நாடி

(அஷ்ஷெய்க் றமீஸ் (நளீமி)  M.A. (சமூகவியல்)

பலதரப்பட்ட மனிதர்களிடமும் வித்தியாசமான கருத்துக்கள்,சிந்தனைகள்,ஆற்றல்கள் காணப்படலாம்.அவற்றை வெளிப்படுத்த நாம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு வித்தியாசமான பலரது புதுப்புது கருத்துக்களிலிருந்து மிக சிறந்த அபிப்பிராயங்களை தெரிவுசெய்ய வேண்டும்.இவற்றில் அதிகமானவர்கள் தெரிவுசெய்யும் கருத்தை செயல்படுத்த வேண்டும்.இதனூடாக நல்ல பல விளைவுகள் தோன்ற முடியும்.

ஷுறாவை நாம் இவ்வாறு நோக்கும்போது அரசியல்,சமூக பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு ஒழுங்காக இது அமைகின்றது.கடந்த காலங்களில் இஸ்லாமிய ஆட்சி வெற்றிபெறவும் இதுவே காரணமாய் அமைந்தது.

ஷுறாவின் முக்கியத்துவம்

அல்குர்ஆனில் ஷுறா(ஆலோசனை செய்தல்) என்ற பெயரில் ஒரு சூறா காணப்படுகின்றது.அது முஃமின்களின் பண்புகள் பற்றி பேசுகின்றது.முஃமின்களின் வாழ்க்கை ஆலோசனையின் அடிப்படையில் அமையப்பெற்றிருக்கும் என்றும் அது தெரிவிக்கின்றது. 'அவர்கள் பெரும் பாவங்களையும்,மானக்கேடானவற்றையும் தவிர்ந்துகொள்வார்கள்.கோபம் ஏற்பட்டால் மன்னிப்பார்கள்.அவர்களின் இறைவனின் கட்டளைக்கு கட்டுப்படுவார்கள்.தொழுகையை நிலைநாட்டுவார்கள்.அவர்களது விவகாரங்கள் கலந்துரையாடலின் அடிப்படையில் காணப்படும்.நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவளிப்பார்கள்        (ஷுறா 37,38)

பாவங்களை தவிர்ந்துகொள்வதும், மன்னிப்பதும், தொழுவதும், தர்மங்கள் செய்வதும் மாத்திரம்தான் இஸ்லாம்.முஸ்லிம் என்பவன் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் கூற முடியாது.கலந்துரையாடல் அடிப்படையில் வாழ்வை வளப்படுத்துவதும் எமது மார்க்கம் எதிர்பார்க்கும் விடயம் என்பதை மறந்துவிடலாகாது.

மேலும் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை பார்த்து தன்னிச்சையாக முடிவெடுக்காமல் கலந்துரையாடும்படி பணிக்கின்றான். 'அல்லாஹ்வின் அருளின் காரணமாக நீங்கள் மென்மையான சுபாவம்கொண்டவராக இருக்கின்றீர்.நீங்கள் கடுகடுப்பானவராக, கடினஉள்ளம் கொண்ட ஒருவராக இருந்திருப்பின் மக்கள் உங்களைவிட்டு விலகியிருப்பார்கள். எனவே அவர்களை மன்னித்துவிடுங்கள்.அவர்களுக்காக இஸ்திஃபார் செய்யுங்கள்.விவகாரங்களை அவர்களுடன் கலந்துரையாடுங்கள்.தீர்க்கமான முடிவெடுத்தால் அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டுங்கள்.(ஆல இம்றான் 159)

ஒரு நபி இவ்வாறு ஏவப்பட்டிருந்தால் நாம் எவ்வாறு செயற்படவேண்டும் என்று சிந்திக்கவேண்டும்.மேலும் இந்த வசனம் உஹத் யுத்த தோல்வியின் பின்னர் அருளப்பட்டது.நபி(ஸல்)அவர்கள் ஷுறாவின் அடிப்படையில் இங்கு முடிவெடுத்தார்கள்.தனது கருத்தை விட்டுவிட்டு பெரும்பான்மையினரின் கருத்தை ஏற்றுத்தான் உஹதை நோக்கி நகர்ந்தார்கள்.

     இப்படி நடந்துகொண்டதன் காரணமாகத்தான் நபி(ஸல்) அவர்களுக்கு உஹதில் தோல்வி ஏற்பட்டது.அவர் தனது விருப்பத்திpன் பிரகாரம் மதீனாவிலிருந்தே போராடியிருக்க வேண்டும்.ஆலோசித்திருக்க கூடாது.அதுவும் இளைஞர்களின் கருத்தை கேட்டிருக்கவே கூடாது.அவர்கள் எப்போதும் உணர்வுபூர்வமானவர்கள். என்று சிலர் நினைக்க கூடும்.ஆனால் இங்கு தோல்வியின் பின்னரும் கலந்தாலோசனை தொடர்பாக அல்லாஹ் கூறுவதனை நாம் மனங்கொள்ள வேண்டும்.ஷுறா என்பது சமூக முன்னேற்றத்தின் அடிப்படையென்ற வகையில்தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.ஒரு யுத்தத்தில் தோல்வியடையலாம்.ஆனால் எமது அடிப்படை அம்சமொன்றை இழக்க முடியாது. சமூக ஆளுமையை விட்டுவிட கூடாது.

நபி (ஸல்)அவர்களின் வாழ்வில் ஷுறா
 நபி(ஸல்)அவர்கள் சஹாபாக்களுடன் அதிகமாக கலந்துரையாடினார்கள்.அபூபக்கர்(ரலி),உமர்(ரலி) போன்றோரை பார்த்து 'எனது கலந்துரையாடல்களில் நீங்கள் இருவரும் இருந்தால் உங்கள் இருவருடனும் நான் முரண்படமாட்டேன்'(முஸ்னத் அஹ்மத்)என்று கூறினார்கள்.பத்ரின்போது 'மனிதர்களே எனக்கு ஆலோசனை கூறுங்கள் என்றார்கள்'.மிக்தாத் இப்னு அம்ர் (ரலி) பதில் கொடுத்தார்கள்.ஹப்பாப் இப்னு முன்திர் (ரலி)யின் கருத்தை ஏற்று பத்ர் தளப்பிரதேசத்தை மாற்றியமைத்தார்கள்.பத்ரின் கைதிகள் தொடர்பாக ஆலோசித்தார்கள்.உஹதிலும் தனது கருத்தை விட்டுவிட்டு மதீனாவைவிட்டு வெளியில் சென்றார்கள்.கன்தக்கில் ஸல்மான்(ரலி)யின் ஆலோசனையை நடைமுறைப்படுத்தினார்கள்.ஹுதைபியாவின்போது உம்மு ஸலமா(ரலி)யின் ஆலோசனைப்படி தலையை முதலில் மளித்தார்கள்.மக்கா வெற்றியின்போது அப்பாஸ்(ரலி)யின் ஆலோசனையின் பிரகாரம் அபூ சுப்யானை கன்னியப்படுத்த 'அவரது வீட்டில் இருப்போருடன் யுத்தமில்லை' என்று அறிவித்தார்கள். 'உங்களிடம் யாராவது ஆலோசனை கேட்டால் ஆலோசனை கூறுங்கள்'(இப்னு மாஜா) என்றார்கள். 'அறிவின்றி ஆலோசனை கூறுவது மோசடி'(அஹ்மத்)என்றும் தெரிவித்தார்கள். 'நபி(ஸல்) போன்று தனது தோழர்களுடன் ஆலோசிக்கும் ஒருவரை நான் கானவில்லை' (திர்மிதி)என்று அபூ ஹுரைரா(ரலி) தெரிவிக்குமளவுக்கு நபியவர்கள் நடந்துகொண்டார்கள்.

இதனைத்தான் நபியின் கலீபாக்களும் பின்பற்றினார்கள்.தாரமி என்ற கிரந்தத்தில் மய்மூன் இப்னு மிஹ்ரான் அறிவிக்கிரார். 'அபூபக்கர் (ரலி)யிடம் விசாரனைகள் ஏதும் வந்தால் அல்குர்ஆனில் தீர்வு தேடுவார்கள்.கிடைக்காவிட்டால் அறிந்துவைத்துள்ள ஹதீஸ்களில் தேடுவார்கள்.அங்கும் இல்லாதபோது முஸ்லிம்களை அழைத்து இதுபற்றி ஏதும் தெரியுமா?என்று கேட்பார்கள்.பலர் தெரிந்த விடயங்களை கூறுவார்கள்.இங்கும் கிடைக்காத போது தலைவர்கள், அறிஞர்களை இணைத்து ஆலோசிப்பார். குறித்த விடயத்தில் ஒன்றுபடும் போது அதனை வைத்து தீர்ப்பு கூறுவார். 

மனித வாழ்வில் சூறாவின் செல்வாக்கு

ஷுறா என்பது ஒரு பெரிய யதார்த்தமாகும். அந்தஸ்த்தும் அறிவும் எந்தளவுதான் இருந்தாலும் தவறு விடாதவர் யாரும் இருக்க முடியாது. திறமையும் ஆற்றலும்  குறைந்த ஒருவர் சரியான பொருத்தமான ஒரு கருத்தை கூறமாட்டார் என்று நினைக்கவும் முடியாது. 
ஷுறா என்பது பொறுப்புக்களை பிரித்து வழங்குவதாகும். செய்ய வேண்டியதை செய்வதற்கான ஒரு தூண்டுகோளாகும். பொருத்தமான கருத்துக்கள், ஆட்கள், சந்தர்ப்பங்கள், வழிமுறைகளை தேடுவதற்கான ஒரு பொறிமுறையாகும். இது குறைகளை நீக்கி பொருத்தமான அமைப்பை ஏற்படுத்தவல்லது. அநுபவங்களை அடுத்த பரம்பரைக்கு நகர்த்துகிறது. கருத்துக்களை உருவாக்குகிறது. நடைமுறைக்கு சாத்தியமானதாக ஆக்குகிறது.

கலந்துரையாடுவதில் ஏழு பயன்கள் காணப்படும். சரியான விடயத்தில் தெளிவை ஏற்படுத்தும். கருத்துக்களை உருவாக்கும். வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும். குறைகள் குறைக்கும். கைசேதப்படும் நிலை தோன்றாது. உள்ளங்களின் இணைப்பு ஏற்படும்.நல்ல கருத்துக்களை பின்பற்றலாம் என்று அலி (ரலி) அவர்கள் கூறுவதாக அக்துல் பரீத் என்ற நூலில் இப்னு அப்தி ரப்பிஹி (ரஹ்) கூறுவார்கள்.

கலந்துரையாடி முடிவெடுத்தல் என்ற விடயத்தில் காட்டப்படும் அசிரத்தை அல்லது பொடுபோக்கின் காரணமாக தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் நிறைய இழப்புகள்தான்  ஏற்படும். பெரிய வளங்கள், ஆற்றல்கள் சிதறடிக்கப்படும். திறமைகள் மழுங்கடிக்கப்படும். கட்டியெழுப்புவதற்கு தேவையான பல விடயங்கள் சிதறிக்கிடக்கும். அதனை கண்டுகொள்வது எத்துணை பயனளிக்கும். 

''உங்களது தலைவர்கள் சிறந்தவர்களாகவும், பணக்காரர்கள் தாராளத்தன்மை வாய்ந்தவர்களாகவும், விவகாரங்கள் கலந்துரையாடி முடிவெடுக்கும் அமைப்பிலும் காணப்பட்டால் பூமியினுள் (கப்றில்) இருப்பதைவிட மேற்பகுதி உங்களுக்கு நல்லது. உங்களது தலைவர்கள் மோசமானவர்களாகவும், பணக்காரர்கள் கஞ்சர்களாகவும், விடயங்கள் பெண்களை நோக்கியதாகவும் இருந்தால் பூமியின் மேற்பரப்பை விட உற்பகுதியே உங்களுக்கு சிறந்தது.'  (திர்மிதி 2267) அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரலி) என்று நபியவர்கள் கூறினார்கள்.

ஷுறா என்பது வெறுமனே வெற்றுப்பேச்சும் கருத்து பரிமாற்றமும் அல்ல. அங்கு பேசப்படும் விடயங்கள் செயல்படுத்தப்படல் வேண்டும். இது சமூகத்திற்கு வலியுறுத்தப்பட்ட ஒரு விடயம். இவ்விடயத்தில் கவனயீனமாக இருந்து விடக்கூடாது. அப்படி இருக்கவும் முடியாது. தொழுகையோடும், ஸகாத்துடனும் இணைத்துகூறப்பட்ட ஒரு விடயத்தில் எப்படி பொடுபோக்காக இருக்க முடியும்.

ஷுறா என்பது பெரிய அரசியல் விடயங்களுடன் நிர்வாக விடயங்களுடன் தான் தொடர்புபடும் என்று அதனை சுருக்கவும் முடியாது. சுருக்கவும் கூடாது. இது வாழ்;க்கைக்கான ஒரு வழிகாட்டல். இது தனிமனித சமூகம் இரண்டுக்கும் பொருந்திவரும் விடயமாகும். ஷுறா என்பது சமூகத்தை பயிற்றுவிக்கும் ஒரு பாடசாலை. சமூகத்தின் ஆளுமை கலந்துரையாடல் ஊடாக வெளிப்படும். 

' அவர்களது விவகாரங்கள் கலந்துரையாடல் அடிப்படையில் காணப்படும்' என்ற வசனத்தை ஷஹீத் சையித் குத்ப் விளக்கும் போது ' வாழ்வின் அனைத்து விவகாரங்களும் கலந்துரையாடல் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது போல வசனப்பிரயோகம் அமைந்துள்ளது. இது மக்காவில் அருளப்பட்ட வசனம். அதாவது இஸ்லாமிய ஆட்சிமுறையொன்று தோன்ற முன்பே இவ்வசனம் அருளப்பட்டது. எனவே ஷுறா என்பது பொதுவான ஒரு விடயம். அரசியலோடு மாத்திரம் சுருங்கிய ஒரு விடயமன்று. என்று குறிப்பிடுகிறார். எனவே கலந்துரையாடல் ஒழுங்கு முஸ்லிம் சமூகத்தில், கிராமங்களில், குடும்பங்களில், கணவன், மனைவிக்கிடையில் தனிப்பட்ட, குடும்ப, சமூக விடயங்களில் இயல்பாக வரவேண்டிய ஒன்றாகும்.
முஸ்லிமின் வாழ்வில் சூறா

கலந்துரையாடல் (ஷுறா) என்பது முஸ்லிமின் வாழ்வில் மேலான ஒரு இடத்தில் இருக்க வேண்டும். அதற்கு ஒரு பாரிய அந்தஸ்தை கொடுக்க வேண்டும். வாழ்வின் அனைத்து விடயங்களிலும் இதனை பேணிக்கொள்ள வேண்டும். இப்பண்புதான் எமக்கு எப்போதும் வெற்றியை தேடித்தந்துள்ளது. 
முஸ்லிம்கள் பாரசீகத்தவரோடு யுத்தத்திற்கு தயாரான நிலையில் இரு தளபதிகளும் பேச்சுவார்த்தைக்காக சந்தித்துக் கொள்கிரார்கள். அப்போது ஒரு குறித்த தீர்க்கமான விடயம் தொடர்பாக பாரசீக தளபதி கருத்து கூறியபோது முஸ்லிம் தளபதி ''நான் எனது படைவீரர்களுடன் கலந்துரையாடி முடிவு கூற அவகாசம் தாருங்கள்' என்றார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாரசீக தளபதி 'நீங்கள் படைத்தளபதி இல்லையா'? கலந்துரையாடக்கூடிய ஒருவரை நாம் தளபதியாக நியமிப்பதில்லை'. என்று கூறினார். அதற்கு முஸ்லிம் தளபதி ' இதுதான் எமக்கும் உங்களுக்குமிடையிலான வித்தியாசம். இதன் காரணமாகத்தான் நாங்கள் வெற்றி பெருகின்றோம். எங்களை பொருத்தவரையில் கலந்துரையாடாத ஒருவரை நாம் தளபதியாக நியமிப்பதில்லை.' என்றார். 

கால ஓட்டத்தில் நிலைமை தலை கீழாய் மாறிவிட்டது. சமூகம் ஷுறாவை புறக்கணித்து விட்டது. ஆத்துமீறக்கூடியவர்கள் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்து செயல்பட்டமையினால் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய பலதை இழந்து விட்டோம். ஏனைய சமூகங்கள் ஷுறாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து யாப்பில் கூட (உழளெவவைரவழைn) அதனை இணைத்துவிட்டார்கள். ஆனால் ஷுறா என்பது ஜனநாயகத்தiவிட பரந்த விரிந்த கருத்தை தன்னகத்தே கொண்டது.நாம் இதனை சிறப்பாக சீராக கடைப்பிடிப்பதன் மூலம் வெற்றி பெறுவோம்.

No comments

Powered by Blogger.