Header Ads



அரச வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண முஸ்லிம்கள்

வடமாகாண சபைக்கான தேர்தல் குறித்த உத்தியோகப் பற்றற்ற செய்திகள் பரவலாக வெளிவரத்தொடங்கிய காலம் முதல் அரச் வேலைவாய்ப்புகள் குறித்த முன்னெடுப்புகளும் வடமாகாணத்தில் பரவலாக அவதானிக்கப்பட்டது. உண்மையில் வடமாகாணத்தில் அரச இயந்திரத்தை இயக்குவதில் போதிய ஆளணியில்லாத நிலை காணப்படுவது உண்மையே. இந்த நிலையில் தேர்தல் மற்றும் அரச இயந்திர ஆளணிப்பற்றாக்குறை என்பவற்றை கவனத்தில் கொண்டு அண்மைக்காலமாக அரச வேலைவாய்ப்புகள் பரவலாக வடமாகாணத்தில் வழங்கப்படுகின்றன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு , கல்வி அமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு போன்ற அமைச்சுகளுக்கு போதிய ஆளணியினை உள்வாங்கிக்கொள்வதே மேற்படி அரச உத்தியோக வழங்களின் நோக்கமாக சொல்லப்படுகின்றது. இவ்வேலைவாய்ப்புகளின் மூலம் வடமாகாணம் தளுவிய ரீதியில் சுமார் 15000 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் மேற்படி வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சித்தகவலை இங்கே வெளிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்படி வேலைவாய்ப்புகளை வழங்கவதில் கௌரவ அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும்,றிஷாட் பதியுத்தீன் அவர்களும் பிரதான செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றார்கள், இவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறும் முஸ்லிம்கள், அல்லது மீளக்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்ற முஸ்லிம்கள் எவரும் கண்ணுக்குப் புலப்படாது போனமை வருத்தமளிக்கும் விடயமாகும்

யாழ்ப்பாணத்தில் சமுர்த்தி கள உத்தியோகத்தர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது நாச்சுக்குடாவில் வசித்துவரும் ஒருவருக்கும் முல்லைத்தீவில் சுகாதார சிற்றூழியர் நியமனமும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆக மொத்தம் 6 யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் மாத்திரமே மேற்படி நியமனத்தின் போது உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். உண்மையில் இது வேதனை தரும் நிகழ்வாகும்.

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் றிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆளும் கூட்டணியில் 3 அங்கத்தவர்களை கொண்டிருக்கின்றது. அது மாத்திரமல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1 முஸ்லிம் மாநகர சபை உறுப்பினரைக் கொண்டிருக்கின்றது. சுயேட்சை மாநகர சபை அங்கத்தவர் ஒருவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளராக  செயற்படுகின்றார் இந்த நிலையில் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் அரச வேலைவாய்ப்புகளில் இணைத்துக் கொள்ளப்படாமையானது யாழ்ப்பாண முஸ்லிம்கள் குறித்த அரசியல் தலைவர்களால் புறக்கணிக்கப்படுகின்றார்களா? என்ற ஐயத்தை உண்டு பண்ணுகின்றது.

தாங்கள் இதுவரை வழங்கிய வேலைவாய்ப்புகளில் 0.5% வேலைவாய்ப்பினைத் தன்னும் யாழ்ப்பாணத்து முஸ்லிம்களுக்கென ஒதுக்கியிருந்தால் ஆகக் குறைந்தது 75 பேராவது அரச வேலைவாய்ப்புகளைப் பெற்றிருப்பார்கள் அதனால் அவர்களது மீள்குடியேற்றம் ஊக்குவிக்கப்பட்டிருக்கும். 75 குடும்பங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை நோக்கி குடியேறியிருப்பார்கள். இவ்வாறான சமூகரீதியான நன்மைகள் யாழ்ப்பாணத்து முஸ்லிம்களுக்கு கிடைப்பதனால் அது குறித்த இரு அமைச்சர்களுக்கும் நன்மையளிக்கின்ற விடயமாகவே இருக்கும். தற்போது இடம்ப்பெயர்ந்துள்ளவர்களும் வாக்களிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் நன்மையடையும் விதத்தில் யாழ்ப்பாணத்து முஸ்லிம்களும் அரச வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்கின்ற செயற்த்திட்டத்தின் இணைக்கப்படுவது பொறுத்தமானதாக அமையும்.

இது குறித்து உள்ளூர் அரசியல் வாதிகளைத் தொடர்புகொண்டு கேட்ட போது போதியளவான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்கின்ற ஒரு நொண்டிச்சாட்டை முன்வைக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தின் சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றுவதற்காக மன்னாரில் இருந்து சிற்றூழியர்கள் வருகின்றார்கள், யாழ்ப்பாண விவாசாயத் திணைக்களத்தில் பணியாற்ற மன்னாரில் இருந்து ஊழியர்கள் வருகின்றார்கள். இது வரவேற்கத்தக்க விடயங்களே கேள்வி என்னவென்றால் இவர்கள் எல்லாம் எப்படி விண்ணப்பித்தார்கள் என்பதுதான். இங்குதான் நீங்கள் செய்யும் அரசியலின் இலட்சனம் வெளிப்படுகின்றது. எமது உள்ளூர் அரசியல் வாதிகளிடம் மக்கள் சார்பாக நாம் முன்வைக்கும் விடயம் என்னவென்றால். உங்களது எஞ்சியிருக்கின்ற பதவிக் காலத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் நன்மையடையும் விதத்தில் ஏதாவது செய்துவிட்டுப்போங்கள். அப்படி செய்ய மறுக்கின்ற நிலையில் நீங்கள் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு துரோகம் இழைத்தவர்களாகவே அடையாளப்படுத்தப்படுவீர்கள். அரசியல் வாதிகள் என நாம் இங்கே குறிப்பிடுவது வெறுமனே மாநகரசபை அங்கத்துவங்களைப் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரமல்ல, அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்களாக, செயற்பாட்டாளர்களாக இருக்கின்றவர்களையும் இணைத்துத்தான்.

No comments

Powered by Blogger.