Header Ads



திறந்த பல்கலைக்கழக சட்டபீடத் தலைவிக்கு கத்திக்குத்து - பின்னணி தகவல்கள்

(Thna) நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவமொன்றில் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பி பலத்த காயங்களுக்குள்ளாகி சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் நேற்று நண்பகல் பல்கலைக்கழகத்தின் சட்டபீடப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சட்டபீடத்தில் கற்கும் மாணவரான சிவஞான சுந்தரம் சுரேந்திர ஜித் என்பவரே சட்டபீடத் தலைவியைக் கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்குட்படுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் இவரைப் பின்னர் கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழக சட்டபீடத் தலைவியை கத்தியால் குத்திய மாணவன் அவ்விடத்தில் வைத்தே ஏதோ ஒரு மருந்தொன்றை உட்கொண்டுள்ளான். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர் பொலிஸாரின் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கத்திக்குத்துக்கு இலக்கான யசோதரா கதிர்காமத்தம்பி தொடர்ந்தும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவருக்கு எந்தவித உயிராபத்தும் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவர் குறித்த நாளில் தமக்கான ஒப்படை அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளார். காலங்கடந்த தமது ஒப்படை அறிக்கையை பொறுப்பேற்குமாறு சட்டபீடத் தலைவியான யசோதரா கதிர்காமத் தம்பியிடம் பலவந்தப்படுத்தியதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது: நேற்றைய தினம் நண்பகல் 12.20 மணியளவில் மேற்படி தர்க்கத் தையடுத்து சட்டபீடத் தலைவியான யசோதரா கதிர்காமத்தம்பி சட்டபீடத்தின் வரவேற்புப் பிரிவிற்கருகில் நடந்து செல்கையில் சம்பந்தப்பட்ட மாணவர் அவரைத் தம்மிடமிருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதனால் சட்டபீடத் தலைவியின் கழுத்துப் பகுதியிலும் வலது கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

கத்தியால் குத்திய மாணவன் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவராகவும் பணியாற்றுவதுடன் சட்ட பீடத்தில் பட்டப்படிப்பு மாணவராகவும் உள்ளார். தமது ஒப்படை அறிக்கையை சட்டபீடத் தலைவி நிராகரித்ததாலேயே அவரைக் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர் தமது புத்தகப் பொதிக்குள் மறைத்து கத்தியை எடுத்து வந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கத்திக்குத்துக்கு இலக்கான சட்டபீடத் தலைவியின் உடலில் பல காயங்கள் காணப்படுவதுடன் அவர் அவசர சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். எவ்வாறெனினும் அவரது உடல் நிலை கவலைக்கிடமானதாக இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவன் உட்கொண்ட மருந்து வில்லைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த சம்பவத்தைக் கண்ணால் கண்ட நேரடி சாட்சிகளிடமிருந்தும் வாய் மூலம் பெறப் பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.