Header Ads



எமது இருப்பையும், எதிர்காலத்தையும் தக்கவைத்துக்கொள்வது கனதியானதா..?

அஷ்ஷெய்க் MI அன்வர் (ஸலபி)

மூன்று தசாப்தங்களாக நம் நாட்டைப் போட்டு வாட்டி வதைத்த போருக்குப் பின்னரான இலங்கையில் புதிய ஒரு தேசத்தை கட்டமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் கனகச்சிதமாக செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையினம் தேசிய அரசியல் நீரோட்டம் முதல் பிராந்திய அரசியல் வரை தன்னை முதன்மைப்படுத்தி சிறுபான்மை இனங்களை பொருட்படுத்தாமல் செயற்படும் நிலை தோன்றியுள்ளது. இவ்வாறு நாம் தற்போது வாழும் காலத்தை பகை மறுப்புக் காலம் அல்லது பின் இன அரசியல் எனக் குறிப்பிடுகின்றனர்

அதாவது பெளத்த மேலாதிக்கம் வளர்ந்துள்ளமையும் சிறுபான்மை இனங்கள் அல்லது எதிர்க்கட்சிகள் பலம் இழந்து காணப்படும் நிலையும் அதிகாரமுள்ளவர்கள் தங்களின் எண்ணங்களை தங்கு தடையின்றி நிறைவேற்றக் கூடியதான ஒரு காலமாகவே பின் இன அரசியல் காலத்தை அவதானிக்க முடிகிறது. எனவே போருக்குப் பிந்திய இலங்கையில் முஸ்லிம்கள் பல வகையான பிரச்சினைகளுக்கு இரு பெரும்பான்மை இனத்தாலும் முகம்கொடுக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலை எழுந்துள்ளது.  

போர்க்கால இலங்கையில் ஆயிதப் போராட்டக் குழுக்களே முக்கிய இலக்காக இருந்தன. போருக்குப் பிந்திய இலங்கை எவ்வாறு வடிவம் கெள்ளும் என்பதற்கான வேலைத்திட்டங்களே தற்போது களத்தில் காணக்கூடியதாக உள்ளது. இப்போது முஸ்லிம் சமூகம் குறிவைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. எமக்கெதிரான திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்று முன்னெடுக்கப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. 

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பேசும் போது “இந்த நாட்டில் இனி சிறுபான்மை என்பது கிடையாதென்றும் அனைவரும் ஒரு தாய் நாட்டு மக்களே! அவர்கள் அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டியவர்கள்” என்று பேசியது பலருக்கு நினைவிருக்கலாம். சில அரசயல்வாதிகளுக்கு மறந்திருக்கலாம். இந்த வேதவாக்கை அவர் கிழக்கு மாகாணத்தில் சில கூட்டங்களில் கூட அவரது பேச்சுக்களின் ஆரம்பத்தில் உச்சரித்தது எனக்கு நினைவிருக்கிறது. 

இன்றைய நாட்களில் எதையும் இனத்துவ சாயம் பூசிப் பார்க்கும் மனோ நிலை பேரினவாதிகளிடையே வலுப்பெற்றுவருவதை நாம் அவதானிக்க முடிகிறது. பெருந்தேசியவாதத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான பிரயத்தனமாத இதனைப் பார்ப்பதா? அல்லது சிறுபான்மையோர் தமது தேவைகளையும் விருப்புக்களையும் நிறைவேற்றித்தரும் அடிவருடிகளாக இருக்கவேண்டுமென்ற மேலாதிக்க சிந்தனையா? என்பதை திட்டவட்டமாக மதிப்பிட முடியாதுள்ளது.

முஸ்லிம்கள் இந்த நாட்டை கொள்ளையடிக்க வந்தவர்கள் இவர்கள் இந்த நாட்டை திட்டமிட்டு ஆக்கிரமிக்க முனைகின்றனர். பள்ளிவாயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமது வணிக நிறுவனங்களால் சிஙகளவர்களை ஏமாற்றுகின்றனர். இந்த நாட்டு பௌத்தர்களை கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளாக்குகின்றனர். தலிபான் அல்-காயிதா போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் இவர்களுக்கு தொடர்பிருக்கிறது. தாய் நாட்டு பற்று அற்றவர்கள். என்பன போன்ற பல குற்றச்சாட்டுக்களை பல வழிகளிலும் இவர்கள் பரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவ்வாறான நிகழ்வுகளையும் அவற்றின் பின்புலத்தையும் நன்கு ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை எமது முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தலைமைகள் எடுக்காவிடின் நாம் காலம் கடந்து கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. தமக்குள் பிளவுண்டு வெறும் ஆவேசத்துடனும் அறிக்கைளுடனும் சமாளித்துக் கொள்ளும் எமது அரசியல்வாதிகளும் இன்னும் சரியான கட்டமைப்புக்குள் திட்டமிடலுக்குள் வராத தேசிய பிராந்திய சிவில் தலைமைகள் கருத்து முரண்பாடுகளாலும் பகைமை உணர்வுகளாலும் வேறுபட்டுக் கிடக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மேலும் நிலைமைகளை சிக்கலாக்குவதாகவே தெரிகிறது.

சிறுபான்மை மக்கள் மீதான பெரும்பான்மை மக்களின் இத்தகைய இனத்துவ பார்வை எப்போது மாறும் என்பது தெரியாது. போகிற போக்கில் அது மாறும் என்பதற்கான சமிக்ஞைகளும் தென்படவில்லை. நாளுக்கு நாள் சிறுபான்மை மீதான தப்பபிப்ராயம் அதிகரித்து வருகிறது. அதே நேரம் இத்தகைய இனவாத பிரசாரங்களுக்கு பின்புலமாக ஒரு சில தேசிய சர்வதேச சக்திகள் தொழிற்படுகின்றமையை நாம் மறுப்பதற்கில்லை. அத்தோடு மேலே குறிப்பிட்ட சில இனதவாதக் கருத்துக்கள் வளர்வதற்கு நாமும் ஒருவகையில் காரணமாக இருக்கிறோம் என்பதை இந்த இடத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆக வேண்டும். பொதுவாக சுதந்திரத்திற்கு பிந்திய இலங்கையில் எம்மை நாம் ஒரு கொள்கைவாத சமூகமாக அடையாளப் படுத்தவில்லை மாறாக ஒரு இனவாத சமூகமாகவே இனங்காட்டப்பட்டு வந்துள்ளோம் என்பது கசப்பான ஓர் உண்மையாகும். 

முஸ்லிம்களுக்கு தேசிய நலனில் பங்கில்லை அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மாத்திரமே என்ற இப்பிரசாரத்திற்கு நாம் சரியான பதிலை வழங்கியுள்ளோமா? என்று நாம் சிந்திக்கவேண்டும். அதேபோன்று இப்படியான குற்றச்சாட்டுக்கள் எழுவற்கான உள்ளக நிலமைகள் இருக்கின்றனவா? காணப்படின் அவற்றை சீர்செய்வதில் நாம் எவ்வளவு தூரம் முனைப்புக் காட்டுகிறோம் என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது. உதாரணமாக இன்று இலங்கையில் மொத்தமாக 2500 பள்ளிவாயல்கள் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 500 பள்ளிவாயல்கள் இதுவரையிலும் பதிவுசெய்யப்படாமல் இருப்பது நாம் எந்தளவு எமது உள்ளக நிலமைகளை சீர்செய்வதில் அசிரத்தையுடன் இருக்கிறோம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். 

முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் இலங்கையை இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன?  நாம் நம்மை கைது செய்து வைத்திருக்கும் வேற்றுமைகளிலிருந்து விடுபட்டு ஐக்கியப்பட்டு எமது சமய சமூக அரசியல் கோரிக்கைகளை முன்வைக்காதவரை அதாவது எமது உள்ளக நிலமைகளை மாற்றிக் கொள்ளாதவரை எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா கூட எமது தலைவிதியை மாற்றப்போவதில்லை. 

அல்லாஹ் கூறுகிறான் “எந்தவொரு சமுதாயத்தையும் அவர்கள் தங்களுக்குள் உள்ளவற்றை அவர்களாகவே மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ் மாற்றப்போவதில்லை.” (13-11)

3 comments:

  1. this is very good article from which our political leaders, educated people and Ulamas should take a lesson and sacrifice their individual interests on behalf of our society to unite us under one leadership.

    ReplyDelete
  2. absolutely your right my dear Brother this movement my Idea all our masjith should be care to register and try to make Sinhala Language Class for ulama because they can only replied well about our religion in budist monks and monthly we make conference with budist monks explain our islam .

    ReplyDelete
  3. பள்ளிவாசல்கள் புற்றீசல்கள் போல் நாட்டில் அதிகரித்துள்ளன. என்ற போதிலும் முஸ்லிம்களின் சமய, சமூக, கல்வி, அரசியல், வர்த்தகம் போன்ற எத்துறையிலும் இஸ்லாமிய விழுமியங்கள் வளர்ச்சியடைந்ததாகக் காணோம்.

    பள்ளிவாசல் நிர்வாகிகளே பொய் சொல்பவர்களாகவும், மோசடி செய்பவர்களாகவும், நம்பிக்கைத் துரோகம் இழைப்பவர்களாகவும், கூட்டிக் கொடுத்துக் கொலை செய்பவர்களாகவும் இருக்கும்போது, சாமன்ய மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு இஸ்லாமிய விழுமியங்கள் ஓம்பும்?

    அரசியல்வாதிகளின் நிலையோ அதை விட மோசம். பல மில்லியன் ரூபா செலவில் காத்தான்குடியில் கட்டப்பட்டு திறப்பு விழாவைக்கூடக் காணாத புத்தம் புதிய மாடிக் கட்டிடம் இந்தக் கருத்தை நான் தட்டச்சு செய்யும்போது இவ்வூர் அரசியல் அதிகாரமுள்ள தரப்பினரால் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

    கட்டிடம் ஒன்றைக் கட்டுவதில் கூட திட்டங்கள் ஏதுமில்லாத இவர்கள் எவ்வாறு இந்நாட்டு முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கப் போகின்றனர்?

    அபிவிருத்தி என்ற பெயரில் ஒதுக்கப்படும் தொகைகளை உடைத்தும் கட்டியும், கட்டியும் உடைத்தும் காலத்தைக் கடத்துவதே இவர்களின் முழுச் சிந்தனையுமாக இருக்கும் போதும், இப்படிப்பட்ட வர்களுக்கே எமது மக்களும் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கும் போதும் எப்படி சமூக மாற்றம் இடம்பெறும்?

    இன்று முஸ்லிம் சமூகத்தின் மீது பேரின வாதிகளின் வெறுப்பு மிகைத்திருக்கும் கால நேர சூழல் புரியாமல் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன கிராமத்தில் பிரதான வீதியோரமாக மாபெரும் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

    இது பேரினவாதிகளின் கண்களில் தூசு விழுந்ததைப்போல் கரித்துக் கொண்டே இருக்கிறது. இப்பள்ளிவாசலுக்கு மிகக் கிட்டிய நடை தூரத்தில் இரண்டு பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும்போது இப்படி ஒரு "எடுப்பு" எமது சமூகத்தின் "இருப்பை" நிச்சயம் கேள்விக்குறியாக்கும் என்பதில் ஐயமில்லை.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.