சாய்ந்தமருதுக்கு சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகள் எப்போது நீங்கும்..?
(அபூ ஆதில்)
கடந்த 2004.12.26ம் திகதி சாய்ந்தமருதை, ஏன் இந்த உலகையே சுனாமி அனர்த்தம் உலுக்கிய நாள். எல்லா நாட்களையும் போல அன்றைய காலைப்பொழுது மிகவும் ரம்மியமாக விடிந்தது. சூரியன் உதித்து சில மணிநேரம் தான் சென்றிருக்கும் கடல்பேரலைகள் இந்த பிரதேசத்தை தாக்கின. அன்றாட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள், ஞாயிறு தினமாகையால் வீட்டில் கடமைகளில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனையோர் இந்த பாரிய கடல்பேரலைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகினர். சாய்ந்தமருதில் மட்டும் 770 பேர் கடல்பேரலைகளால் காவு கொள்ளப்பட்டனர் 3062 பேர் காயங்களுக்கு உள்ளானர். பல கோடி ரூபாய்கள் பொறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. 4.8633 சதுர கிலோமீட்டர்களைக் கொண்ட சாய்ந்தமருதின் பரப்பளவு, கடலிலிருந்து 65 மீட்டர்கள் ஆட்கள் குடியிருக்க முடியாத பகுதியாக பிரகடனபடுத்தப்பட்டு, அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். தற்சமயம் அந்த பிரதேசம் கரையோர பாதுகாப்பு அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சுனாமி சிலருக்கு தங்கச்சுனாமியாகவும் அமைந்தது. இன்னும் பலர் உறவுகளை இழந்து நிர்க்கதியாகினர். தொழிலை பலர் இழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய்கள் பொறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. 65 மீட்டர் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தங்களது வாழ்விடங்களையும் இழந்தனர்.
நாடு சுனாமி தாக்குதலுக்கு உள்ளானதால்,சர்வதேச நாடுகள் பல்வேறு பட்ட உதவிகளை வழங்கின. இந்த உதவிகளைக்கொண்டு வீதிகள் அமைக்கப்பட்டன, பாடசாலை மற்றும் அரச கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டன ஏன் சாய்ந்தமருது தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வீடுகளும் நிர்மாணித்து வழங்கப்பட்டன.
சாய்ந்தமருதில் சுனாமியால் வீடுகளை இழந்த 815 பேர்களில் 711 பேர்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கான வீடுகளை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் மேட்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. (வழங்கப்பட்டுள்ள அநேக வீடுகளுக்கு நீர் மற்றும் மின்சார வசதி கழிப்பறை வசதி என்பன இல்லை என மக்கள் குறை படுகின்றனர்.)
சுனாமி இவர்களைக்கடந்து சென்று 9 வருடங்கள் நெருங்கவுள்ள நிலையில் இன்னும் தகரக்கூடில்களில் காலத்தைக் கடத்துவோர்களின் சோகம் சொல்ல முடியாதவை.
சாய்ந்தமருதில் பாராளுமன்ற உறுப்பினர்,மாகாண சபை உறுப்பினர் மாநகர முதல்வர் என எத்தனையோ பேர் இருந்தாலும் இந்த மக்களின் துயர் துடைக்கப்பட்டதாக இல்லை.
நமது நாட்டில் சுனாமியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன அரசு இவர்களது மரணச்செலவுக்கு மட்டும் 15000/= ரூபாய் பணத்தை அவர்களது குடும்பங்களுக்கு வழங்கியது. இந்த உயிர்கள் இழக்கப்பட்டதனால் குறிப்பிட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகுந்த கீழ் நிலைக்கு சென்றது. இந்நிலையை அரசு கண்டு கொள்ளவே இல்லை. அவர்களது குடும்பங்களுக்கு பயங்கர வாத சம்பவங்களின் போது கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்காவது சுனாமி எனும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வில்லை என்பது பாரிய குறையே.
குறுகிய நிலப்பரப்பைக்கொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமி 65 மீட்டர் பிரதேசத்தை அபாகரித்துக்கொண்டது. சனநெரிசல் மிக்க சாய்ந்தமருது இன்னும் குறுகியுள்ள நிலையில் இந்த மக்களுக்கு மேற்கே அமைந்துள்ள கரைவாகு வட்டை நிலம் சற்று ஆறுதலாக இருந்த போதும் அங்கும் இவர்களுக்கு வயல் நிலங்களில் குடியிருப்புகளை நிர்மாணிக்க முடியாது என்ற விவசாய தினைக்களத்தின் சுற்று நிருபம் தடையாக இருக்கின்றது.
கிழக்கே கரையோர பாதுகாப்பு தினைக்களமும் இயற்கை அச்சுறுத்தலும் மேற்கே விவசாயத் திணைக்களம். இரண்டு தினைக்களங்களுக்கு இடையிலும் 25410 பேர்.
சனநெரிசல் காரணமாக சுனாமியால் பதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்கள் மேற்கே உள்ள கரைவக்கு வட்டை சுனாமி வீட்டுத்திட்டத்துக்கு அருகிலுள்ள நெற்செய்கை செய்யப்படாத பிரதேசத்தில் சிறு சிறு துண்டுகள விலைகொடுத்து வாங்கி அங்கு குடியிருப்புகளை அமைக்க முற்பட்ட போது அங்கு விவசாயத் தினைக்களம் தடையாக இருக்கின்றது. நாட்டில் பல்வேறு குடியேற்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது சுனாமியால் பாதிக்கப்பட்டு மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டு நேரடியாகக்கூறுவதானால் பயம் எனும் மன உளைச்சலுடன் வாழும் சாய்ந்தமருது மக்களின் அதுவும் அவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட சொந்த நிலத்தில் குடியிருப்பதை தடுப்பது மரத்தால் விழுந்தவனை மாடு மிதிப்பதற்கு ஒப்பான ஒரு நிலையாகும்.
அநேக இடங்களில் மக்கள் பரம்பல் அதிகரித்ததன் காரணமாக ஆரம்பத்தில் நெற்செய்கை பண்ணப்பட்ட இடங்களில் கடைத்தொகுதிகளும் நெல் குற்றும் ஆலைகளும் மாடிக்கட்டிடங்களும் அமைக்கப்பட்டும் இருக்கின்றன. இவைகளை ஏன் விவசாயத்தினைக்களத்தின் சுற்று நிருபங்கள் தடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
காலத்துக்கு காலம் வாக்குக்கேட்டு இந்த மக்களிடம் வரும் தலைவர்களும் அரசியல் வாதிகளும் பாவப்பட்ட இந்த மக்களின் பாரிய தேவையான கரைவாகு வட்டையின் சுனாமி வீடமைப்புத்திட்டத்துக்கு அருகில் சிறு சிறு துண்டங்களாக கொள்வனவு செய்து அந்த இடங்களில் குடியிருக்க விரும்புவவர்களின் எண்ணம் நிறைவேற உதவுவார்கள? அல்லது அடுத்த தேர்தலுக்கு வந்து வாக்குறுதி வழங்கி விட்டு சென்று விடுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Post a Comment