''பகிடிவதை என்னும் பெயரில் சீரழியும் மாணவர்கள்'' - சிந்திப்போமா...??
(ஏ.எம்.அஷ்ரப்
வவுனியா வளாகம் – யாழ் பல்கலைக்கழகம்)
அண்மையில் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை அவர்களின் சிரேஸ்ட மாணவர்கள் பல்வேறு பகடிவதைக்கு உட்படுத்தியதும், அதன் பின் வெளியான செய்திகளும் நாம் அறிந்ததே. இதில் பல்கலைக்கழகத்திற்கும் மாணவர் சங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் காலாகாலம் நடந்து வரும் ஒரு செயற்பாடுதான் இது என்பது உண்மை. இது தொடர்பில் நாம் பல்கலைகழகத்தையும், மாணவர் சங்கத்தையும் இதுவரை காலமும் குறை சொல்லி வருகிறோம். அவர்களையே பொறுப்பு சாட்டியும் வருகிறோம்.
அவர்களால் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு மாத்திரம் தான் நடவடிக்கை எடுக்க முடியும். மாணவர் சங்கம் கூட இவ்வாறு அவரவர் ஊர்களில் யாருக்கும் தெரியாமல் நடைபெறும் இவ்வாறன செயற்பாடுகளைக் கண்காணிப்பதும் தடுப்பதும் இலகுவான காரியம் அல்ல. அவர்கள் அந்த அளவுக்கு அதிகாரம் உள்ளவர்களும் அல்ல. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கும், இதனை தடுத்து நிறுத்த முயற்சிப்பதற்கும் உண்மையில் பொறுப்புள்ளவர்கள் அந்த பிரதேசத்தில் உள்ள மாணவர்களும், இளமாணிப் பட்டப்பயிலுனர் மாணவர் சங்கமும் தான்.
அவரவர் ஊர்களில் தனித்தனியாக, யாரும் அறியாத வகையில் மறைமுகமாக, கனிஷ்ட மாணவர்களின் பூரண அனுமதியுடன் நடைபெறும் இக்கேவலமான செயற்பாடுகளை மாணவர்களால் தவிர வேறு யாராலும் தடுத்த நிறுத்த முடியாது. முற்று முழுதாக முஸ்லிம்களே செறிந்து வாழும் இவ்வூரில், மாணவர்களே இவ்வாறன நடவடிக்கையில் ஈடுபடுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். எதிர்காலத்தில் சமூகத்தின் தலைவர்களாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும் உருவாகி சேவை செய்யவிருக்கும் படித்த மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை இன்னும் விரும்புவது தான் கவலையளிக்கின்றது.
மாணவர்களை சமூகமயப்படுத்த இவர்கள் இதனை செய்வதாக பதிலளிக்கிறார்கள். சமூகமயப்படுத்த எவ்வளவோ சிறந்த, எமது புனித மார்க்கம் அனுமதித்த முறைகள் இருக்கும்போது இன்னுமா எமது படித்த மாணவர்களுக்கு இதனை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது...? முஸ்லிம்களாகிய நாம், அல்லாஹ்வின் அருட்கொடையால் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பு கிடைத்த நாங்கள் சமூகத்துக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் சில கீழ்த்தரமான செயல்கள் மூலம் நாங்கள் இன்னும் எங்களை சீரழித்துக் கொண்டிருக்கிறோம்.
இதிலும் சில கவலைக்குரிய விடயம் என்னவென்றால் நல்ல முறையில் எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் சிறந்த வீட்டு சூழலில் இருந்துவரும் மாணவர்களை கெட்ட விடயங்களை சொல்லவும், செய்யவும் பழக்குவதுதான் இன்றைய பகிடிவதை எனலாம். இதற்கு முஸ்லிம் மாணவர்களாகிய நாங்கள் கொடுக்கும் முன்னுரிமைதான் எங்களை இன்னும் தீய வழிக்கு இட்டு செல்கிறது. கடந்த வருடங்களில் கூட பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை அவர்களது சிரேஸ்ட மாணவர்கள் ) கடற்கரை மற்றும் ஆட்கள் இல்லாத வீடுகளுக்கு இரவு நேரங்களில் அழைத்துக்கொண்டு சென்று பல்வேறுபட்ட பகிடிவதையில் ஈடுபடுத்தியுள்ளார்கள். கெட்ட வார்த்தைப் பேச வைப்பது, முகத்தில் அறைவது, பெண்களின் அந்தரங்கம் தொடர்பாக பேச வைப்பது, அவர்களுக்கு புள்ளிகள் வழங்குவது, சிகரட் மற்றும் பீடி குடிக்கப் பழக்குவது, பெறுபேறுகளை கெட்ட சொற்களைப் பயன்படுத்தி சொல்ல வைப்பது, பல்கலைக்கழக கீதம் என்று சொல்லி தூசன (அருவருக்கத் தக்க ) வார்த்தைகள் மூலம் பாடல் பாட வைப்பது, அதனை மனனம் செய்ய சொல்லுவது, உள்ளாடை அணியாமல் ஆண்களை வரச்சொல்வது என இன்னும் இன்னும் அருவருக்கத் தக்க செயல்களைப் புரிவதுதான் எமது இஸ்லாமிய பண்புகளா? இவைதான் நாம் கற்றவையா? இன்னும் கற்றுகொடுப்பவையா?
யாரும் சொல்லலாம் இப்படியான செயல்கள் நடைபெறுவதில்லை, இவை பொய் என்று. ஆனால் இவை யாருக்கோ நடந்தவை அல்ல. எனக்கு நடந்தவை. யாரும் இதை மறுக்க முடியாது. கடற்கரையில் ஈர மணலில் மேல் சட்டை இல்லாமல் புரள வைத்தார்கள், உள்ளாடையின் உள்ளே ஈர மண்ணை அள்ளி போட்டு நிரப்பினார்கள், சிகரட் தந்து குடிக்கச் சொன்னார்கள், என் வாழ்வில் முதன் முதலாக எனக்கு சிகரட்டை வாயில் வைத்த அந்தப் பெருமையும் அவர்களையே சாரும். கெட்ட வார்த்தைகளைப் பேசுமாறு கூறி அடித்தார்கள், நடனமாட சொன்னார்கள், பச்சை மிளகாய், மிளகாய்த் தூள் ஆகியவற்றை உண்ணச் சொல்லி வற்புறுத்தினார்கள், உண்ணவும் செய்தார்கள். இப்படி எத்தனையோ விடயங்கள் மூலம் பல்கலைக்கழகத்தை வெறுக்கவும் செய்தார்கள் அவர்கள்.
இதன் காரணமாக ............................ பல்கலைக்கழகத்தையே வெறுத்து வேறு ஒரு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தேன். காரணம் என்னைத் துன்புருத்திய அந்த அனைத்து மாணவர்களும் அதே ............................ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது. ஆனால் நான் இன்றும் பல்கலைக்கழகம் ஒன்றில் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அங்கே நான் கண்ட எதனையும் இங்கு காணவில்லை. முஸ்லிம் என்று சொன்ன உடனே கெட்ட விடயங்களிலிருந்து என்னைத்தூரமாக்கி விடுகிறார்கள் இந்த தமிழ் சிங்கள சகோதரர்கள். (அல்லாஹ் அவர்களை நேர்வழிப் படுத்த வேண்டும்) தமிழ், சிங்கள மாணவர்களுக்குத் தெரிகிறது முஸ்லிம் மாணவன் சிகரட் புகைக்க மாட்டான், கெட்ட வார்த்தை பேச மாட்டான் என்று. ஆனால் முஸ்லிம்களுக்கு?
இப்படியான விடயங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது எனலாம். இவை குறைந்த பாடில்லை. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இதில் சில விடயங்களில் பெண்களும் விதிவிலக்கல்ல என்பதுதான். எனது சக நண்பர்களாகிய அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் நம்மைததவிர யாராலும் இதனைக்கட்டுப் படுத்தமுடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். பல்கலைக்கழக நிர்வாகமோ, உயர்கல்வி அமைச்சோ இதனைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம், இருந்தபோதிலும் நம் பங்களிப்பு இதற்கு மிக்க இன்றியமையாத ஒன்று.
நாம் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு இடத்திற்கு எமது முஸ்லிம் மாணவர்களை அனுப்பும் போது அவர்களுக்கு புகைக்கவும், ஆடவும், பாடவும், கெட்ட வார்த்தைகள் பிரயோகிக்கவும் தயார்படுத்தியா அனுப்புவது? அல்லாஹ்வும் ரசூலும் சொல்லித் தந்த வழிமுறைகள் எங்கே? படித்தவர்கள் நாம் எங்கே? நாகரீகத்தை உலகுக்கு சொல்லிக் கொடுத்த இனிய இஸ்லாம் மார்க்கத்தை கொண்டவர்கள் அல்லவா நாங்கள்? உத்தம நபி, உலகுக்கே உண்மையான போதனைகளைத் தந்த நபியின் வழியில் வந்தவர்கள் அல்லவா நாங்கள்? வெறுமனே இஸ்லாமிய பண்புகளை மறந்து, நாகரீகம் துறந்து, இழிவான விடயங்களைக் கற்றுக்கொண்டு சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறோம்..?
உங்களை விடுங்கள், உங்களோடு பழகும் அந்நிய சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களான மாணவர்கள் உங்களிடமே எமது இஸ்லாத்தையும், எமது கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்கிறார்கள் என்பது திண்ணம். அவர்கள் அல்குர் ஆன், அல்லது நபி மொழியைப் படிக்கவில்லை. முஸ்லிம் மாணவர்களாகிய உங்களைத்தான் படிக்கிறார்கள். உங்களிடமிருந்து வெளிப்படும் விடயங்களையும், உங்கள் நடவடிக்கை, பேச்சு ஆகியவற்றையும் கொண்டே முழு முஸ்லிம்களையும் எடை போடுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். நல்லவற்றை செய்யத்தூண்டுங்கள், நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுங்கள், அந்நிய சமூகத்தார் உள்ள இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுங்கள்.
முதலில் நாங்கள் தயாராக வேண்டும் இவ்வாறான விடயங்களைத் தடுப்பதற்கு. எனது கனிஷ்ட மாணவர் எவரையும் எந்தவித துன்புறுத்தலுக்கும் உட்படுத்த மாட்டேன் என்று நாங்கள் முடிவு செய்ய வேண்டும். இஸ்லாம் தடுத்த எதனையும் செய்பவர்களையும், செய்பவர்களுக்கு உதவியாய் இருப்பவர்களையும் காட்டிக் கொடுங்கள். அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள். அப்போதாவது எமது சமூகம் இதனை இல்லாமல் செய்ய முன்வரும். மற்றும் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு உதவியாகவோ அல்லது அதற்கு பார்வையாளராகவோ செயற்படாமல், அதனை கண்டிப்பவர்களாகவும் மாணவர்களாகிய நாங்கள் மாற வேண்டும். இல்லாதவரைக்கும் இப்படியான கெட்ட விடயங்களை எமது மாணவர் சமூகத்திலிருந்து இல்லாமல் செய்வது கடினம்.
இலங்கையில் முஸ்லிம்களின் பல்வேறுபட்ட செயற்பாடுகளை இன்று அநநியவர்கள் வெறுக்கவும், தடுக்கவும் முன்வந்துள்ளார்கள், அப்படி இருக்க நாம் படித்த மாணவர்கள் இன்னும் இவ்வாறன கேவலமான விடயங்களை நடாத்திக்கொண்டு வருவது எவ்வளவு வருந்தத்தக்க விடயம். புதிய மாணவர்களை வரவேற்க பல சிறந்த வழிகள் உண்டு. அவற்றை மேற்கொள்ளுங்கள். இஸ்லாம் தடுத்தவற்றை தயவுகூர்ந்து செய்யாதீர்கள். மற்ற சமூகத்தாருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ளுங்கள். இஸ்லாமிய வாழ்க்கை முறையை உங்கள் வாழ்வில் எடுத்து நடப்பதன் மூலம் அந்நியவர்களை தெளிவுபடுத்துக்கங்கள். அல்லாஹ் உங்களதும் எனதும் கல்வியையும் சிறப்பாக்கித் தருவான். ஈருலகிலும் சிறந்த அந்தஸ்தை நமக்கு வழங்குவான். இன்ஷா அல்லாஹ்.
.jpg)
asraf please write again when you at second year....
ReplyDeletebrother sifri faheem... you dont know that, iam in a third year in my university...
ReplyDeleteHi Friends,
ReplyDeleteபுதிதாக வரும் மாணவர்கள் கற்றல் காலத்தில் எல்லோருடனும் சகஜமாகவும் சமமாகவும் பழகாமல் இனரீதியிலும் ஊர் மற்றும் பிரதேசம் போன்ற தங்களுக்கிடையேயுள்ள பிரிவுகளுக்குள்ளே மட்டும் பழகிக்கொண்டு குறுகிய எண்ணத்தோடு இருந்துவிடாமல் இருப்பதற்காக இத்தகைய பகிடி வதை பயன்படுகின்றன.
அத்துடன் புதிதாக வரும் மாணவர்களிலே பலர் ஏழைக்குடும்பங்களிலிருந்தும் சிலர் செல்வந்த குடும்பங்களிலிருந்தும் வருவதுண்டு. அதுபோன்றே சிலர் பதவி அதிகாரமிக்கவர்களின் குடும்பப் பின்னணியிலிருந்தும் பலர் சாமானிய பிரஜைகளின் குடும்பத்திலிருந்தும் வருவார்கள். இவ்வாறானவர்கள் பல்கலைகக்கழகங்களுக்கு வந்த பின்பும் சகஜமாக பரந்த எண்ணத்துடன் இராமல் சிறுபிள்ளைகள்போல நடந்த கொள்வதுண்டு. இவற்றை அனைவரும் ரசிக்கத்தக்கதான வேடிக்கை நிகழ்ச்சிகளுடாக குறித்த காலத்துக்கு மாற்றியமைக்கப் பயன்படுவதுதான் பகிடிவதை.
தவிர பகிடி வதைகள் பழைய புதிய மாணவர்களுக்கிடையே குறிப்பிட்ட காலத்தின் பின்பு கற்றல் நடவடிக்கைகளுக்கு அவசியமான நெருக்கமான நட்பையும் புரிந்துணர்வையும் தருகின்றது.
இப்படி பகிடிவதைக்கு பல நல்ல முகங்களும் உள்ளன.
ஆனால் ஒருகாலத்தில் மக்கள் நலத்துக்காக அர்ப்பணிப்புடன் இருந்து இன்று அவற்றின் உண்மையான நோக்கங்களிலிருந்து விலகிக் கேவலமான நோக்கங்களுக்குத் துணைபோய்க் கொண்டிருக்கும் கல்வி, மருத்துவம், விளையாட்டு, ஆன்மீகம், அரசியல் துறவறம் போன்ற எத்தனையோ புனிதமான பல விடயங்கள் போலத்தான் இந்த பகிடிவதையும் கேவலமாகிப்போய்விட்டது.
புதிய மாணவர்களும் ரசிக்கத்தக்க வகையிலே நிகழவேண்டிய பகிடிவதைகள் இப்போதெல்லாம் வழி வழியாக வரும் சீனியர் மாணவர்களின் மன வக்கிரங்களையும் ஆசாபாசங்களையும் உயர்வு-தாழ்வுச்சிக்கல்களையும் தீர்த்துக்கொள்வதற்குரிய வழிமுறையாக மாறிவிட்டிருக்கின்றது.
ஒரு சத்திரசிகிச்சை நிபுணரின் கத்திக்கும் ஒரு மனநோயாளியின் கையிலிருக்கும் கத்திக்கும் நிறைய வேறுபாடுள்ளது. மனநோயாளியின் கையிலுள்ள ஆயுதம் தந்திரமாகப் பிடுங்கப்பட்டாக வேண்டும்.
அதுபோலத்தான் எதிர்கால புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் மத்தியில் ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்தும் கருவியாக பகிடிவதை பயன்படத் தவறும் பட்சத்தில் அந்த சர்ச்சைக்குரிய ஆயுதத்தைப் பிடுங்கித் தூரவீசி எறிவதுதான் எல்லோருக்கும் நல்லது.