Header Ads



இன வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் - உடனடித் தடை தேவை..!

(லதீப் பாரூக்)

மீடியா ஒழுக்கக் கோவையொன்றை விரைவில் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக வெகுசன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்கல்ல தெரிவித்துள்ளார். “இது ஆரோக்கியமானதொரு மீடியா கலாசாரத்தை நாட்டில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்திற்கு உத்தேசக் கோர்வை சமர்ப்பிக்கப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார். 

நாட்டில் ஏற்கனவே தனியார் ஊடகங்களுக்கான முழுமையானதொரு ஒழுக்கக் கோர்வை காணப்படுகிறது. பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (The Editors’ Guild) மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் இயக்கம் என்பவற்றினால் கூட்டாக 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கோர்வை, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினாலும், பத்திரிகை முறைப்பாட்டுக் கவுன்ஸிலினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

ஊடகங்களுக்கான ஒழுக்கக் கோர்வை ஊடக சமூகத்தினால்தான் முன்வைக்கப்பட வேண்டும். அரசாங்கம், இத்தகையதொரு முயற்சியை மேற்கொள்வதன் பின்னணியில் உள்ள உண்மையான முகம், பசுத்தோல் போர்த்திய புலியின் கதையாக அமைந்து விடுமோ என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் பலர் அரசாங்கத்தின் இந்நகர்வை சந்தேகக் கண் கொண்டே நோக்குகிறார்கள். 

வெறுப்புணர்வைத் தூண்டும் அம்சங்களைத் தடை செய்யும் வகையிலானதொரு ஏற்பாடும் இக்கோர்வையில் காணப்படுகின்றது. நாட்டின் இன்றைய தேவை, மீடியாத் துறை தொடர்பிலானதொரு ஒழுக்கக் கோர்வையல்ல. இன வெறுப்புணர்வை தூண்டும் அம்சங்களை பிரசுரிப்பதையும், ஒலி, ஒளிபரப்பு செய்வதையும், அறிக்கை விடுவதையும் கண்டிப்பாகத் தடை செய்வதுதான். அதே போன்று இதே போன்ற உணர்வுகளைப் பிரதிபளிக்கக் கூடிய பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளும் தடை செய்யப்பட வேண்டும். 

மீடியாக்கள் இத்தகை அம்சங்களை எதுவித முன் யோசனையும் இன்றி பிரசுரிப்பதும், ஒலி, ஒளிபரப்பு செய்வதும்தான் இலங்கை வரலாற்றில் சமூகங்கள் இடையிலான விரிசல்களுக்கு அடிப்படையாக இருந்து வந்திருக்கின்றன. 

சில மாதங்களுக்கு முன் இனவாதிகளில் சிறு தொகையினர் நாட்டில் இனங்கள் இடையிலான வெறுப்புணர்வை உருவாக்குவதற்குத் தீவிரமாகச் செயற்பட்டனர். ஏதோ சில காரணங்களால், தற்போதைக்கு இவர்கள் சற்று அடங்கியிருப்பது போல் தோன்றினாலும், இன்னும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக தமது அமெரிக்க, இஸ்ரேலிய, நோர்வே எஜமானர்களின் அடிவருடிகளாக செயற்படும் இவர்கள், இலங்கை வாழ் பெரும்பான்மை சமூகத்துடையவும், ஒட்டு மொத்த இலங்கைத் தேசத்தின் இன நல்லுறவு பற்றியதுமான நற்பெயருக்கு எத்தகைய கலங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதைப்  புரிந்து கொள்ளவில்லை.    
  
தமது அரசியல் மற்றும் வணிக நலன்களுக்காக கடந்த காலங்களில் இன நல்லுறவை அடகு வைக்கும் விதமாக செயல்பட்டு, அதன் கோரமான விளைவுகளைக் கண்களால் கண்ட பிறகும் எமது அரசியல்வாதிகளும், மீடியாக்களும் வரலாற்றில் இருந்து இன்னும் பாடம் படிக்கவில்லை. இனவாதத் தீயை மூட்டி, அதில குளிர்காய முனைகின்ற சில கும்பல்களின் பிரசார இயந்திரம் போன்று சில அச்சு, மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றன. 
இலங்கை சுதந்திரம் அடைகின்ற காலப்பகுதியில், லேக் ஹவுஸ், டைம்ஸ் குரூப் ஒப் நிவ்ஸ்பேபர்ஸ் என இரண்டு பிரதான ஊடக நிறுவனங்கள் இயங்கி வந்தன. அவை எல்லா சமூகங்களையும் பாதிக்கின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தி வந்தன. “தவஸ குரூப் ஒப் நிவ்ஸ் பேபர்ஸின் ஊடகப் பிரவேசம் நாட்டில் நிலவிய இந்த ஊடகக் கலாசாரத்தை சிதறடித்தது. அளவு கடந்த தேசப் பற்றையே தமது வியாபார அபிவிருத்திக்காக  அது பயன்படுத்திக் கொண்டது. 

1968 இல் முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழரசுக் கட்சியோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில், மாவட்டக் கவுன்ஸில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். பிற்பட்ட காலங்களில் எல்.டீ.டீ.ஈ யினருக்கு வழங்க முற்பட்ட அதிகாரப் பகிர்வோடு ஒப்பிடும் போது, மிகவும் நடுநிலையான அதிகாரப் பரவலாக்கலாகத்தான் அது இருந்தது. இம்முயற்சி சாத்தியமாகி இருப்பின், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி, அதன் விளைவாக ஆசியாவில் மிக மோசமான கொலைக்களங்களில் ஒன்றாக இலங்கை மாற்றம் பெற்ற துரதிஷ்டமான வரலாறு தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

ஆனால், டட்லியின் இந்நகர்வை “தவச” எதிர்த்தது. இதற்கெதிராக மூர்க்கமானதொரு பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. சிங்களவர்கள் மத்தியில் தமிழ் விரோத மனநிலையை உருவாக்கியது. “தவச” குழுமத்தின் தமிழ் வெளியீடான தினபதி ஊடகவியலாளர் ஒருவர் அப்போது இவ்வாறு குறிப்பிட்டார்: “நாட்டை இப்பிரசாரம் எங்கு கொண்டு செல்லுமோ என, எனக்கு இது மிகுந்த அச்சத்தை உண்டு பண்ணுகிறது”.

கிராமிய கவுன்ஸிலுக்கு எதிரான எதிர்ப்புணர்வு மிகவும் மூர்க்கமாக இருந்தது. இறுதியில் மாவட்ட கவுன்ஸிலை டட்லி சேனாநாயக்க கைவிட வேண்டிய நிலை உருவானது. “டட்லி நியாயமான முறையில் தன்னுடைய வாக்கை நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால், இனவாத சக்திகள் அதனைத் தடுத்து விட்டன. எனவே, அரசாங்கத்தில் இருந்து விலகி, வெளியிலிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதைத் தவிர, தமிழரசுக் கட்சிக்கு முன் வேறு தெரிவுகள் இருக்கவில்லை” என இது குறித்து, தமிழரசுக் கட்சியின் அப்போதைய தலைவர் அமிர்தலிங்கம் என்னிடமும், மறைந்த வீரகேசரி பத்திரிகையாளர் தியாகராஜிடமும் தெரிவித்தார். 

மாவட்ட கவுன்ஸில் முறை அறிமுகம் செய்யப்பட்டு, மீடியாக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டிருப்பின், தமிழ் இளைஞர்கள பலர் இராணுவ மயமானமையும், நாடு சந்தித்த மனித அவலங்களும் தவிர்க்கப்பட்டிருக்க முடியும். 

நாற்பத்தைந்து ஆண்டுகள் கடந்து, சில அரசியல்வாதிகளுக்கு ஞானம் தோன்றியிருப்பதாகத் தோன்றுகிறது.  அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான மஹஜன எக்சத் பெரமுண மாவட்ட கவுன்சில்கள் மூலமான அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்வதற்கான யோசனையை முன்வைத்துள்ளது. ஆனால், இது 13ஆம் திருத்தத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறையை இல்லாதொழிப்பதற்காக மேலெழுந்துள்ளதே அல்லாமல், அதிகாரப் பரவலாக்கல் அல்ல இதன் பின்னணி நோக்கம். 

மூன்று தசாப்த கால யுத்தத்தின் இறுதியில் தமது கடந்த காலத் தவறுகளை அரசியல்வாதிகள் உணர்ந்து நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்காக செயற்படுவார்கள் என்ற பசுமையான நம்பிக்கையும் இன்று தகர்ந்து போயுள்ளது.  

வேதாளம் முறுங்கை மரம் ஏறும் கதையாக, தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்புவதே மீண்டும் அரசியல்வாதிகளின் நோக்கமாகியுள்ளது. இவ்வரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலைத் திருப்தி செய்யும் வெறும் கருவிகளாகவே மீடியாக்கள் மாறியுள்ளன. நாட்டு நலனைக் கருத்திற் கொள்ளாமல், பொறுப்பற்ற விதத்தில், சூடான செய்தி என்பதற்காக மட்டும் செய்திகள் பிரசுரமாகின்ற நிலையே இன்று காணப்படுகிறது.  

கடந்த ஆண்டு சிறியதொரு குழுவினரின் அழிவுகரமான பிரசார நடவடிக்கைகளை ஊதிப் பெருப்பிப்பதில் மீடியாக்களின் பங்களிப்பை அவதானிக்கும் போது, நாட்டு நலன் பற்றி எதுவித கரிசணையும் இன்றி, அரசியல்வாதிகள் சிலரின் நிகழ்ச்சி நிரலை முன் கொண்டு செல்வதற்காகச் சோரம் போகின்ற நிலையில் மீடியா இருப்பது தெளிவாகின்றது. 

இக்குழுவினர் சிறியதொரு குழுவாக இருந்த போதிலும், அவர்கள் போடுகின்ற சப்தம் மிக அதிகமாகவும், தொந்தரவு தருவதாகவும் உள்ளது. பாராளுமன்றத்தில் இருக்கின்ற வெறும் சுமார் பத்து உறுப்பினர்களே இத்தகைய இனவாதக் குழும்பலுக்கு சாதகமாக இருக்கிறார்கள். ஏனைய 215 உறுப்பினர்களும் நாட்டின் பன்மைத்துவத்தையும், வெவ்வேறு இனக் கூறுகளைக் கொண்டவர்களின் உரிமைகளையும் அங்கீகரிக்கிறார்கள். ஆனால், இது தொடர்பிலான இவர்களது கருத்துக்களுக்கு எதுவித பெறுமானத்தையோ, முக்கியத்துவத்தையோ மீடியாக்கள் வழங்குவதாக இல்லை.   

இனவாதத்தைத் தூண்டி, இன நல்லுறவை சீரழிக்கின்ற விதத்திலான கருத்துக்களை மிகச் சுதந்திரமாக பெரும்பாலான மீடியா நிறுவனங்கள் பிரசுரிக்கின்றன. ஹலால் உணவு, மாடறுப்பு போன்ற அம்சங்களே இவற்றின் தலைப்புக்கள். கொட்டை எழுத்துக்களில் இவற்றைப் பொறித்து, வியாபாரத்தை உச்சப்படுத்திக் கொள்ளும் உத்வேகத்தோடு, சூடான தலைப்புக்களில் சந்தைக்கு வந்து, கொந்தளிப்பு நிலையை இவை உண்டு பண்ணுகின்றன. 

பதிமூன்றாம் திருத்தம் குறித்து இடம்பெற்று வருகின்ற விவாதங்களை நோக்குகையில் மீடியாவோ, அரசியல்வாதிகளோ கடந்த காலத்தில் இருந்து எதுவித பாடத்தையும் படிக்கவில்லை என்பதையே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மாவட்டக் கவுன்ஸில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த மனபாவம் இன்றும் மாறவில்லை. 

எனவே, இன்று இருக்கின்ற தேவை சமூகங்கள் மத்தியில் விரிசல்களைக் கூர்மைப்படுத்தும் வகையிலான அம்சங்களை பிரசுரிப்பதையும், ஒலி, ஒளிபரப்புவதையும் தடை செய்து, மீடியாக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குகின்ற முழுமையான சட்ட மூலம் ஒன்றை அறிமுகம் செய்வதே! மீடியாக்களுக்கான ஒழுக்கக் கோர்வையொன்றை அறிமுகப்படுத்துவதல்ல. ஒழுக்கக் கோர்வை ஊடக சமூகத்திடம் இருந்து வரவேண்டும். அரசாங்கத்திடம் இருந்து வர வேண்டிய அவசியமில்லை.                           

No comments

Powered by Blogger.