கலந்து வாழும்போது கரைந்து போகாமலிருப்போம்..!
அஷ்ஷெய்க்: MI அன்வர் (ஸலபி)
முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்ட்டில் சிறுபான்மையாக வாழ்கிறோம். இப்படி வாழும்போது எம்முன்னாலுள்ள முதன்மைப் பிரச்சினையானது எமது சுய ஆளுமையை இழக்காமல் வாழ்வதாகும். அப்படி ஆளுமையை இழக்காமல் வாழும் போது மூடுண்ட சமூகமாக இருக்காமல் அடுத்த சமூகங்களுடன் கலந்து வாழும் சமூகமாக இருக்கவேண்டும். அப்படிக் கலந்து வாழும் போது நாம் பிறரின் கலாசார பாரம்பரியங்களில் கரைந்து போகாமல் இருப்பது முஸ்லிம்களாகிய எம்மைப் பொருத்தவரை இன்றியமையாததாகும்.
இந்த வகையில் ஒரு முஸ்லிம் தன்னோடு வாழக் கூடிய முஸ்லிமல்லாத மனிதர்களுடன் எவ்வாறு உறவுகளைப் பேணிக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஷரீஆவின் நிலைக்களனில் நின்று ஆராய வேண்டிய அவசியத்தேவை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்களிடம் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வழிகாட்டல்கள் நிறைவாகக் காணக் கிடைக்கின்றன. இந்த வகையில் மதங்களையும் கொள்கைகளையும் காரணமாக வைத்து நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களோடு முரண்பட்டுச் செல்லவில்லை. மனிதர்கள் எந்த மதத்தை பிரதேசத்தை நிறத்தை கலாசாரத்தை மொழியை கொண்டோராக இருப்பினும் அவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் அன்புக் கண் கொண்டே நோக்கினார்கள். இதற்கான பல சான்றுகளை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.
அயலவர்களாக அந்நிய மதத்தவர்கள் அண்ணலாரோடு வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்களோடு நபி (ஸல்) அவர்கள் கொடுக்கல்-வாங்கல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அன்பளிப்புக்களைப் பெற்றது போன்று அவற்றை வழங்கியும் உள்ளார்கள். உணவுப் பண்டங்களையும் உதவிகளையும் பரிமாறியுள்ளார்கள். தேவைப்படின் உதவிகளைப் பெற்றும் உள்ளார்கள். தவிர ஏனைய சமூக உறவுகளையும் பேணியுள்ளார்கள்.
இத்துறை தொடர்பான சில வழிகாட்டல்கள் மாத்திரம் இங்கு எடுத்தாளப்படுகின்றன. இது ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரை இல்லை. மாறாக இது ஒரு சில வழிகாட்டல்களின் தொகுப்பே என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ளவும்.
தான் ஏற்றிருக்கும் நேர் வழியுன் பால் உலக மாந்தர் அனைவரும் பிரவேசிக்க வேண்டும் நரகில் விழுந்து விடக் கூடாதென்ற பரந்த மனப்பாங்கு அவர்களிடம் காணப்பட்டது. அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரை நோய் விசாரிக்கச் சென்று அவருக்கு இஸ்லாத்தை எத்திவைத்தார்கள். அவர் கலிமாவை மொழிந்த போது என் மூலம் அவரை நரகிலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் எனக் கூறியவாறு அண்ணார் அங்கிருந்து வெளியேறினார்கள்.
அந்த வகையில் பிற சமயத்தவருடனான உறவு அவர்களுக்கு இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தல் என்ற மையப் புள்ளியிலிருந்து தொடங்குவதை நாம் காணலாம். இந்த இடத்தில்தான் எம்மை நோக்கி ஒரு வினா எழுகிறது. இன்று எம்மோடு வேலைத் தளங்களில் வர்த்தக நிலையங்களில் கல்விக் கூடங்களில் வாழும் முஸ்லிமல்லாத மக்களோடு நாம் கொண்டிருக்கும் உறவுகள் எந்த வகையில் அமைந்துள்ளது என்பதை நாம் சிந்திக்கவேண்டும். இஸ்லாம் பற்றிய செய்தியை அவர்களுக்கு எத்திவைப்பதில் எமது பணி எவ்வளவு தூரம் அமைந்துள்ளது. எமது செயற்பாடுகள் முன்மாதிரிகள் மூலமாக அவர்களுக்கு நாம் இஸ்லாத்தை விளங்கப்படுத்தியுள்ளோமா? என்பவற்றைப் பற்றி நாம் மீள்வாசிப்புச் செய்யவேண்டியுள்ளது.
தவிர அந்நிய மதத்தவர்கள் இஸ்லாத்தைக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளவில்லை. என்பதற்காக மனித நேயத்தை மறந்த நிலையில் அவர்களோடு அணுகுவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. ஒரு தடவை நபி (ஸல்) அவர்களைக் கடந்து யூதர் ஒருவரின் பிரேதம் எடுத்தச் செல்லப்பட்ட போது அதற்காக எழுந்து மறியாதை செய்தார்கள். அவர்களது இந்த நடவடிக்கை தொடர்பாக தோழர்கள் வினாத் தொடுத்தபோது அதுவும் ஒரு ஆத்மாவாக இல்லையா? என்று அவர்கள் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்கள். (முஸ்லிம்)
மனிதர்கள் கூடி வாழும்போது பிரச்சினைகள் எழுவது இயல்பானதே! ஒரு தாய் பெற்ற பிள்ளைகளிடையே கூட அற்ப காரணங்களுக்காக முரண்பாடுகள் எழுகின்ற போது அறிமுகமுடைய அல்லது அறிமுகமில்லாத அந்நியரிடையே பிணக்குகள் எழுவதையிட்டு ஆச்சரியப்படுவதிற்கில்லை. இதற்கு சமகால நிகழ்வுகள் சில சான்றுகளாக அமைந்துவிடுகின்றன. மதத்தால் கொள்கையால் முரண்பட்டோர் என்பதைக் கடந்து மனிதர்கள் என மாற்று மதத்தவர்களை நோக்கும் இஸ்லாம் இத்தருணத்தில் அவர்கள் மீது கொண்ட வெறுப்பு துவேஷம் காரணமாக நீதியைத் தவற விட வேண்டாம் என போதிக்கிறது.
“உங்களுக்கு ஒரு சமுதாயத்தில் இருக்கும் பகையானது நீங்கள் நீதியாக நடந்து கொள்வதற்கு ஒரு போதும் தடையாக இருக்க வேண்டாம். நீதியாக நடவுங்கள். அப்படி நடப்பது இறைபக்திக்கு மிக நெருக்கமானதாகும்.” (05-08)
நஜ்ரானின் கிறிஸ்தவத் தூதுக் குழுவினர் மதீனா வந்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் அவர்களைத் தங்க வைத்தார்கள். தமது மார்க்கத்தைப் பாதுகாத்துப் பேச அவர்கள் விரும்பிய போது நபிகளார் அவர்களது பேச்சுக்குச் செவிசாய்த்து அவர்களுடன் கருத்துக்களை பரிமாறினார்கள். இவை அனைத்தும் மிக நளினமாகவும் பண்பாகவும் நடந்து முடிந்தது.
எனவே இவ்வாறான அசாதாரணமான சூழ்நிலைகளின் போது மிக நளினமான முறையில் அணுகிக் கருத்துப் பரிமாற்றத்தினூடாக சுமூகமான சூழ்நிலையை உருவாக்குவது அவசியமானதாகும்.
பொதுவாக மனிதன் ஒரு சமூகப் பிராணி என்ற வகையில் பிறரது உதவிகளில் தஙகி வாழ்வது தவிர்க்க முடியாதது. இந்தவகையில் தேவைகளின் போது மாற்று மதத்தவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதில் நாம் மதத்தை காரணம் காட்டி பின்வாங்கக்கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் போதனையாகும். அத்தோடு அவசியப்படுமிடத்து அவர்களிடத்திலிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் கூட தவறில்லை என்பதை நாம் அண்ணாரின் நடைமுறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பஞ்சம் ஏற்பட்ட போது மதீனாவிலிருந்து 200 தீனார்களை திரட்டி மக்கத்து காபிர்களுக்கு அனுப்பி வைத்தமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதேபோல் நபி (ஸல்) அவர்கள் தனது ஹிஜ்ரத் பயணத்தின் போது தனக்கு வழிகாட்ட இப்னு உரைகத் என்ற இறை நிராகரிப்பாளரின் உதவியையே பெற்றார்கள்.
தனிமனித-சமூக வாழ்வில் கொடுக்கல் வாங்கல் முறையானது தவிர்க்க முடியாத அம்சமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் பிற சமயத்தவர்களோடு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அந்தவகையில் பின்வரும் உதாரணங்களை நாம் இதற்கான ஆதாரங்களாக கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு முஷ்ரிக்கிடமிருந்து ஓர் ஆட்டைக் கொள்வனவு செய்தார்கள். அதன் மூலம் சமைக்கப்பட்ட இறைச்சியை அண்ணாரும் அவரது தோழர்களும் சாப்பிட்டார்கள். (முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் யூத சமூகத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து கடன் பெற்றுள்ளார்ள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதே இனத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தன் கேடயத்தை அடகு வைத்தார்கள். அவர்கள் மரணிக்கும் போது அக்கேடயம் அடகு வைக்கப்பட்ட நிலையில்தான் இருந்தது.
முஸ்லிமல்லாத ஒருவருக்கு ஒரு முஸ்லிம் அன்பளிப்பு வழங்கவும அவரிடமிருந்து அன்பளிப்பு பெறவும் முடியும். நபி (ஸல்) அவர்களுக்கு அந்நிய ஆட்சியாளர்கள் அன்பளிப்புக்களை வழங்க அவற்றை அண்ணார் ஏற்றிருக்கிறார்கள்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுக்கு ஐலா அரசன் வெள்ளை நிறக் கோவேறு கழுதையொன்றை அன்பளிப்புச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சால்வையொன்றை பதிலுக்கு அனுப்பிவைத்தார்கள். (புகாரி)
அதே போன்று அவசியப்படுமிடத்து பிற சமயத்தோரின் வீடுகள் காணிகள் போன்றவற்றைக் குத்தகைக்காக எடுக்கலாம். நபி (ஸல்) அவர்கள் கைபர் பகுதி யூதர்களது நிலங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதை ஆதாரமாகக் கொண்டு அந்நிய மதத்தவர்களினது வீடுகளில் குடியிருக்க முடியும் என்று இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள். இது வரை நாம் குறிப்பிட்ட விடயங்கள் மாற்று மதத்தவர்களுடனான நாம் கொணடிருக்கவேண்டிய உறவுகள் அவற்றின் போது நாம் கடைப் பிடிக்கவேண்டிய வரையரைகளுக்கான ஒரு சில இஸ்லாமிய வழிகாட்டல்களாகும்.
உறவுகள் எது வரை?
மதத்தால் கொள்கையால் வேறுபட்டோர் என்பதைத் தாண்டி மனிதர் என அந்நியவரை நோக்கும் இஸ்லாம் அவர்களுடனான சகவாழ்வின் போது ஒழுங்குகளையும் வரையரைகளையும் வகுத்து தந்துள்ளது. மதச் சகிப்புத் தன்மை இன நல்லிணக்கம் பற்றிக் கூறும் இஸ்லாம் மதச் சுதந்திரம் இன ஒற்றுமை என்ற பெயர்களில் இரண்டரக் கலந்து கொள்கைகளுக்கு இடையில் சமரசம் காண்பதை அது மறுக்கிறது.
நபியே! நீர் கூறுவீராக நிராகரிப்பாளர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். மேலும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களுமல்லர். நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனுமல்லன். இன்னும் நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களுமல்லர். உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு எனது மார்க்கம். (109-06)
இஸ்லாத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் இடையிலான பிறிகோட்டை வரையறத்து இரண்டும் சமரச அடிப்படையில் ஒன்றினையும் போக்கை கொண்டதல்ல என்பதை.இஸ்லாம் மேற்குறிப்பிட்ட வசனங்களில் விபரிக்கினறது.
தவிர முஸ்லிமல்லாதோர் ஒழுங்கு செய்யும் பொதுவான நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் எந்த தடையும் இல்லை. மாறாக அவர்களது சமய நிகழ்வுகளில் பங்குகொள்வதும் அதற்காக வாழ்த்துக் கூறுவதும் அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவையே ஏனெனில் இது அவர்களது சமயச் சடங்குகளை அங்கீகரிப்பதாகவே அமையும். அத்தோடு முஸ்லிம்களுக்கு பெரும் தொந்தரவாக அச்சுறுத்தலாக இருக்கும் அந்நிய மதத்தவர்களை அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக்கொள்வதை இஸ்லாம் தடைசெய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் பற்றிய இரகசிய தகவல்களை அவர்கள் அறிந்து அதை மக்கள் மத்தியில் பரப்பி விடுவார்கள் என்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. சமகாலத்தில் சில சான்றுகளும் உள்ளன.
விசுவாசிகளே! என் எதிரையையும் உங்கள் பகைவரையும் நேசம் கொள்ளும் அந்தரங்க தோழர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (60-01)
அதேபோன்று அந்நிய மதத்தவர்கள் அனாச்சாரங்களில் ஈடுபடும் வேளை அவர்களுடன் இரண்டறக்கலந்து அவற்றை போசிக்கும் வகையில் அழியவேண்டிய அனாச்சாரங்களை தூபமிட்டு வளர்ப்பது பாறிய குற்றம் என்பதை இஸ்லாம் தெளிவுபடுத்துகின்றது.
”நன்மை செய்வதிலும் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதிலும் பரஸ்பரம் உதவியாக இருங்கள். மேலும் பாவம் செய்வதிலும் வரம்பு மீறுவதிலும் பரஸ்பரம் உதவியாக இருக்காதீர்கள். (05-02) என்ற அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்தும் உண்மைக் கருத்தும் இதுவே!
எனவேதான் முஸ்லிம்கள் பிற சமயத்தவர்களுடன் கலந்து வாழும் போது தமது தனித்துவம் காத்த நிலையில் கரைந்து போகாமல் இருப்பது மிக முக்கியமானதாகும்.
.jpg)
Very worth article & useful information for muslim society!! Dear Brothers & Sisters in Islam please read this and do bring practice in all our's life. Insha Allah it can be turn with positive result between us and non muslims in our areas.
ReplyDelete