ஆப்கானிஸ்தான் படைகளிடம் நேட்டோ படைகள் பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைத்தன.
ஆப்கானிஸ்தான் படைகளிடம், நேட்டோ படைகள், பாதுகாப்பு பொறுப்பை நேற்று முறைப்படி ஒப்படைத்தன.
அடுத்த ஆண்டு இறுதிக்குள், வெளிநாட்டு படைகள் வாபசாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு நடவடிக்கையாக, ஆப்கானிஸ்தானின், 95 மாவட்டங்களின் பாதுகாப்பு பொறுப்பை, நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம், நேற்று ஒப்படைத்தன.
தலிபான்களின் அச்சுறுத்தல் உள்ள ஒரு சில மாவட்டங்களில், நேட்டோ படைகள் தொடர்ந்து, பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.இது தொடர்பாக காபூலில் நேற்று நடந்த விழாவில், நேட்டோ படை தளபதி ஆன்டர்ஸ் பாக் குறிப்பிடுகையில், ""பத்து ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ்தானுக்கென எந்த படையும் இல்லை. தற்போது, ஆப்கன் ராணுவம் மற்றும் போலீசில், 3.5 லட்சம் வீரர்கள் உள்ளனர். தேவைப்பட்டால், ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து உதவ தயாராக உள்ளோம்,'' என்றார்.
இவ்விழா நடக்கும் போது, பார்லிமென்ட்டுக்கு சென்ற எம்.பி., ஒருவர் மீது, தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி மக்கள் மூன்று பேர் பலியாயினர்.இதுகுறித்து, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் குறிப்பிடுகையில், ""தலிபான்களை சமாளிக்க, ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தயாராக உள்ளனர். ஆனால், குண்டு வெடிப்பு சம்பவங்களால், ஆப்கானிஸ்தானில் ஸ்திரமற்ற நிலை உள்ளது,'' என்றார்.

Post a Comment