பஸ்சுக்குள் தீகுளித்த முதியவர் - 42 பயணிகள் உடல் கருகி பலி
சீனாவில் விரைவு பஸ் நேற்று முன்தினம் திடீரென வெடித்து சிதறியதில் 42 பயணிகள் உடல் கருகி பலியானார்கள். விபத்து என்று கருதப்பட்ட நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த முதியவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி பஸ்சுக்குள் தீ வைத்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.சீனாவின் புஜியான் மாகாணம் ஜியாமென் கடற்கரை சாலை வழியாக நேற்று முன்தினம் விரைவு பஸ் சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 42 பயணிகள் உடல் கருகி பலியானார்கள். 40க்கும் அதிகமான பயணிகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், சீன துறைமுக நகரான ஷாமெனை சேர்ந்த முதியவர் சென் சுகி சாங் (59) என்பவர் பெட்ரோல் கேனுடன் பஸ்சில் பயணம் செய்ததும், வாழ்க்கையில் விரத்தி அடைந்த சென், பஸ்சுக்கு தீ வைத்துள்ளார் என்றும் சீன மீடியாக்கள் திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டுள்ளன. மேலும் முதியவர் சீனாவில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் குவோ ஷெங்குன் உத்தரவிட்டுள்ளார்.சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக விரக்தி, அரசியல் விரோதம் காரணமாக பஸ், கட்டிடங்களுக்கு தீ வைப்பது, மக்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவம் நடக்கிறது. கடந்த 2009ல் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி பஸ்சுக்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இதில் 26 பேர் இறந்தனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

Post a Comment