இந்தியாவில் கடும் வெள்ளம், 207 பேர் பலி, 50.000 பேர் பாதிப்பு
வரலாறு காணாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வட மாநிலங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இங்கு ஏற்பட்ட அழிவுகள் மக்களை பெரும் துயரத்திற்குள்ளாக்கியிருக்கிறது. உத்தர்கண்ட், இமாச்சல பிரதேசத்தில் உள்ள யாத்திரை ஸ்தலங்கள் பல மூழ்கி கிடக்கின்றன. இங்கு வந்த பக்தர்கள் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்று மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பஞ்சாப், அரியானா, டில்லி, மும்பை, உத்தரகண்ட், இமாச்சல்பிரதேசம் பகுதிகளில் பருவமழை பலமாக பெய்தது. இதில் உத்தரகண்ட், இமாச்சல்பிரதேசம் கடும் பாதிப்பை சந்திதித்திருக்கிறது. நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்துள்ளனர், யாத்திரை சென்ற பக்தர்கள் ஆங்காங்கே தவித்து வருகின்றனர்.
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 40 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றன.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே வெள்ள பகுதிகளை இன்று பார்வையிட்டு மீட்பு பணிகள் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; இதுவரை பலியானோர் எண்ணிக்கை 207 பேர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர். உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கேதார்நாத் கடும் பாதிப்பிற்குள்ளாகயிருக்கிறது. மீட்பு பணியில் முழு அளவில் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment