வடமாகாண சபை தேர்தல் நடைபெறுமா..?
(எம்.எஸ்.சஹாப்தீன்)
வட மாகாண சபைக்கான தேர்தலை எதிர் வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. என்ற போதிலும், இத்தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் முட்டுக் கட்டைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் அறிவித்துள்ளதன் பிரகாரம் செப்டம்பர் மாதத்தில் நடத்துமா என்ற சந்தேகங்களும் எழுப்படுகின்றன.
அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு விருப்பமில்லை. இத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே வெற்றி பெறும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் அதே வேளை, இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன் வைக்க வேண்டிய கட்டாயமும் அரசாங்கத்திற்கு ஏற்படும். வட மாகாண சபை ஏனைய மாகாண சபைகளைப் போன்று அரசாங்கத்தின் சங்கீதத்திற்கு ஏற்றவாறு இயங்காது. தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தை நடாத்துவதற்கான ஒரு தளமாக வடமாகாண சபை அமைந்திருக்கும்.
இதனால், சர்தேசத்தின் இலங்கை மீதான கவனம் இன்னும் அதிகரிக்கும். இதனை தவிர்க்க வேண்டுமாக இருந்தால் வடமாகாண சபைக்குரிய தேர்தலை நடாத்தாது இருப்பதே சிறந்தாகும். இதன் காரணமாகத்தான் அரசாங்கம் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டு வந்தது. அரசாங்கத்திற்கு வடமாகாண சபை தேர்தல் குறித்து இருக்கின்ற அபிப்ராயத்தை வெளிப்படையாக சொல்லவும் முடியாது.
வடமாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மற்றும் சில கட்சிகளும் வற்புறுத்திக் கொண்டு வருகின்றன. அதே வேளை, சர்வ தேச நாடுகளும் இத்தேர்தலை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றன.
அரசாங்கத்தைப் பொறுத்த வரை சர்தேச நாடுகளையும் திருப்திபடுத்த வேண்டியுள்ளது. சர்தேச நாடுகளை அரசாங்கம் கருத்திற் கொள்ளாது இருந்தாலும், நாட்டிற்கு ஏற்பட்டு கொண்டிருக்கின்ற அழுத்தங்களைக் குறைப்பதற்கு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குள் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளது.
இதே வேளை , வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தக் கூடாதென்றும், காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்கக் கூடாதென்று அரசாங்கத்தில் உள்ள ஜாதிக ஹெல உறுமய போன்ற தரப்பினர்கள் அரசாங்கத்தை எச்சரிக்கை செய்யும் வகையில் அறிக்கைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றது.
மாகாண சபைகளுக்கு இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இல்லமால் செய்வதற்கு அரசாங்கம் 19வது திருத்தத்திற்கு ஆயமாகிக் கொண்டிருக்கின்ற அதே வேளை, செப்டம்பர் மாதத்தில் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆதலால், மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் முரண்பட்ட போக்குகளை கையாண்டுக் கொண்டிருக்கின்றது. இதனால், பங்காளிக் கட்சிகளைப் பயன்படுத்தி தேர்தலை தடுப்பதற்கு திட்டமிடுகின்றதா என்று சந்தேகமும் தோன்றவே செய்கின்றது.
19வது திருத்தத்தினைக் கொண்டு வந்து மாகாண சபையின் அதிகாரங்களை குறைப்பதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அரசமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தத்தை நீக்குவது சம்பந்தமாக அரசாங்கம் இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. 13இற்கு அமைவாகவே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். 13 ஐ தன்னிச்சையாக மாற்ற முடியாது என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரான அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.
மேற்படி அமைச்சரின் கருத்துக்கள் அரசாங்கத்தில் உள்ள 13வது திருத்தத்திற்கு எதிரானவர்களின் கோபத்தை சீண்டியுள்ளது. யார் என்ன சொன்னாலும் 13 சீர்திருத்த ஒழிப்புப் போரைக் கைவிடப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, 13வது சீர்திருத்தம் சம்பந்தமாகத் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டியுள்ளது எனத் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.
இன்றைய அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளை எடுத்துக் கொண்டால் மாகாண சபை முறைமை. அதற்கான அதிகாரங்கள் என்பவைகளில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. இவர்களை ஒரு முகப்படுத்த வேண்டியுள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்த வரை இந்த முரண்பாட்டாளர்களை ஒரு முகப்படுத்தும் வேலைகளை முன் எடுக்குமென்று கூற முடியாது. அரசாங்கம் மாகாண சபைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற சிந்தனையைக் கொண்டதாகவே இருக்கின்றது.
அரசாங்கம் பௌத்த மேலாதிக்கத்தை முன்னிலைப்படுத்தியே தன்மை பாதுகாத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுக் கொண்டு வருகின்றது. இந்தப் பாதுகாப்பு அரண் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்று, அதன் அதிகாரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு சென்று விடுமானால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்பில் சொல்லியுள்ள அதிகாரங்களை பயன்படுத்தும். அவ்வாறு பயன்படுத்தும் போது, மத்திய அரசாங்கத்திற்கும் வடமாகாண சபையின் அpகாரத்தைப் பெற்றுள்ளவர்களுக்கும் இடையே பாரிய பிரச்சினைகள் ஏற்படும். அப்பிரச்சினைகள் அரசாங்கத்திற்கு எதிராகவுள்ள நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்யும்.
வடமாகாண சபையின் அதிகாரத்தைப் பெற்றவர்கள் அதிகார தோரணையில் செயற்படும் போது மத்திய அரசாங்கத்தின் செல்வாக்கை பாதிக்கச் செய்யும். இன்றைய அரசாங்கத்தின் தூண்களில் ஒன்றாக இருக்கின்ற பௌத்த மேலாதிக்கவாதிகளின் ஆதரவை அரசாங்கம் இழக்க வேண்டியேற்படும். இன்றைய அரசாங்கத்தின் சில நடவடிக்கைளை சிறுபான்மையினர் ஏற்றுக் கொள்ளும் தன்மையில் இல்லை. வடமாகாண சபைத் தேர்தல் மூலமாக தமது செல்வாக்கிற்கு ஆபத்து ஏற்படுவதனை ஜனாதிபதி விரும்பமாட்டார்.
ஆதலால், மாகாண சபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்ததன் பின்னர்தான் வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தும்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக தோற்றம் பெற்ற மாகாண சபை முறைமைக் கொண்டு வந்த போது அதற்கு எதிராக ஜே.வி.பி மற்றும் பௌத்த அமைப்புக்கள் குரல் கொடுத்து, கூட்டங்களையும் நடத்தினர். அப்போது வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தன.
வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு வடமாகாண சபைத் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பைப் போன்று எதிர்ப்புக்கள் கிளம்பவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னால் போராளி சிவநேசத்துரை சந்திரக்காந்தன் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவும் நியமிக்கபட்டிருந்தார். கிழக்கு மாகாண சபைக்கு எதிர்ப்புக்கள் ஏற்படாதிருந்தமைக்கான காரணமும், வடமாகண சபைக்கு எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளதற்குரிய காரணமும் ஒன்றாகும். அதாவது, அதிகாரம்தான்.
கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களை அரசாங்கத்தினால் கைப்பற்ற முடியும். அதனைப் பயன்படுத்தி சர்தேசத்தின் கண்களுக்குள் விரலை விட்டாட்ட முடியும் என்று அரசாங்கம் கருதியது. பௌத்த அமைப்புக்களும் இதில் தெளிவாக இருந்தன. இதனால்தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு எதிர்ப்பக்கள் ஏற்படவில்லை.
எப்படி கிழக்கு மாகாண சபையின் வெற்றியை தனக்கு சாதகமாகவும், தமிழர்களின் அதிகாரக் கோரிக்கைக்கு ஆப்பாகவும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுக் கொண்டதோ, இதே போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களின் அரசியல் அதிகாரங்களை அழுத்தத்துடன் கேட்டுக் கொள்வதற்கும், அரசாங்கத்தின் மாறுபட்ட முகத்தை சர்வதேசத்திற்கு மீண்டுமொரு தடவை காண்பிக்க வேண்டுமென்று திட்டத்தைக் கைகளில் வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் கண்களுக்குள விரலை விட்டாட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நினைக்கின்றது.
ஆதலால், வடமாகாண சபைத் தேர்தல் இலங்கையின் அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுவதற்கு காரணமாக அமையவிருக்கின்றது. இதனைக் கருத்திற் கொண்டு தமிழ் பேசும் மக்கள் தங்களின் உரிமை, அரசியல் அதிகாரங்கள், பாதுகாப்பு போன்றவைகளுக்கு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளது.
அரசாங்கமும் சிறுபான்மையினருக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. ஐக்கியமான இலங்கையை கட்டி எழுப்ப வெண்டுமாயின் இனங்களுக்கிடையே அதிகாரப் பகிர்வில் பாரபட்சம் காட்டக் கூடாது.

Post a Comment