பார்வையற்ற வயோதிபர் ஜமாஅத் தொழுகையில் கண்ட இன்பம் (வீடியோ)
(மௌலவி அபூ ஸஃத்-ரியாத்)
இஸ்லாத்தின் பிரதான கடமையே தொழுகையாகும். நபி (ஸல்) அவர்கள் ''யார் வேண்டுமென்றே தொழுகையை விடுகின்றானோ அவன் காபிராவான்'' எனக் கூறியுள்ளதிலிருந்து தொழுகையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். பருவமடைந்த ஒவ்வொரு ஆணும், சுத்தமான நிலையிலுள்ள பருவமடைந்த ஒவ்வொரு பெண்ணும் தமது உடம்பில் உயிர் இருக்கும் வரை தினந்தோறும் ஐவேளைத் தொழுது வருவது கடமையாகும். ஜும்ஆத் தொழுகையை மாத்திரம் தொழுது தான் ஒரு முஸ்லிம் என கருதுவோர் மறுமையில் வெற்றிபெறுவார்களா என்பது கேள்விக்குரியே!
ஆண்களைப் பொறுத்தளவில் தொழுகை கடமை என்பதைப் போன்றே அதனை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதும் கடமையாகும். சிலர் ஜமாஅத்துடன் தொழுவது ஸுன்னத் எனக் கூறி தாமதமாகியோ, வீட்டிலோ தொழுவதை வழமையாக்கி வைத்துள்ளனர். சில இமாம்களின் கூற்றை தமது கருத்துக்கு ஆதாரமாகக் கொள்கின்றனர். யார் எதைச் சொன்னாலும் இஸ்லாத்தை எமக்குக் கற்றுத் தந்த உத்தமத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய பொன் மொழிகளை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா.
''அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் ஒரு விடயத்தில் தீர்ப்புச் செய்துவிட்டால் அதற்கு மாற்றமாக வேறொன்றைத் தெரிவுசெய்ய எந்தொரு முஃமினான ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை'' (அல் அஹ்தாப்: 36)
ஜமாஅத் தொழுகை ஸுன்னத்தாக இருந்தால்..
''அதனை விடுபவரின் வீட்டை எரித்து விட என் மணம் நாடுகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் ஏன் எச்சரிக்கை விடுக்க வேண்டும்?
எதிரிகளின் அச்ச சூழல் நிறைந்த யுத்த களத்திலும் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம் என்று ஏன் இறைவன் பணிக்க வேண்டும்?
நபித்தோழர் ஒருவர், தமது இரு கண்களுமே குருடாக இருப்பதாகவும், பள்ளிக்கு அழைத்து வர உதவியாளர் எவரும் இல்லையெனவும் முறையிட்டு வீட்டில் தொழ அனுமதி கேட்கின்றார். அதற்கு நபியவர்கள் உங்களுக்கு அதான் சத்தம் கேட்கிறதா? என வினவியபோது, அம்மனிதர் ''ஆம், அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். அவ்வாறென்றால் நீங்கள் பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்துடனே தொழ வேண்டும்'' என (கண்கள் இரண்டும் குருடானவரை) ஏன் கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும்?
நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்நாளின் இறுதி நாட்களில் மயங்கி விழுவதும், தெளிவு பெறுவதுமாக இருந்தபோதும் தொழுகை நேரமாகிவிட்டால் கால்கள் இரண்டும் நிலத்தில் உரைபட இரு ஸஹாபாக்களின் தோல்களில் கையைவிட்டு சுமக்கப்பட்டு பள்ளியில் ஏன் நிறுத்தப்பட்டார்கள்?
மழை பெய்துகொண்டிருக்கும் நேரங்களில் ளுஹருடன் அஸரையோ, மஃறிபுடன் இஷாவையோ ஜமாஅத்துடன் தொழுதுவிட்டுச் செல்வதற்கு ஏன் சலுகை வழங்கப்பட்டிருக்க வேண்டும்?
ஒவ்வொரு ஆணும் சிந்தித்துப்பார்ப்பார்களாக.
இதோ கண்கள் குருடான ஒரு வயோதிபர், அவர் ஜமாஅத்துடன் தொழுவதற்காக பள்ளியிலிருந்து வீடு வரை ஒரு கயிற்றைக் கட்டி வைத்துள்ளார். வலது கையால் ஊன்றுகோளையும், இடக்கையால் கயிற்றையும் பிடித்தவாறு பள்ளியைச் சென்றடைகின்றார். ரஸூலுள்ளாஹ்வின் காலத்திலல்ல. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில்.
இதோ இன்னொரு வயோதிபர் எழுந்து நடக்க முடியாதவர். அனைத்துத் தொழுகைகளையும் 77 வருடங்களாக தவழ்ந்தே பள்ளிக்குச் சென்று தொழுகிறார். ஸுப்ஹானல்லாஹ்.
''அல்லாஹு அக்பர்'' (அல்லாஹ்வே மிகப் பெரியவன்) என்ற வார்த்தை காது பிழக்கக் கேட்டும் வியாபாரத்தை, வேலைகளை, குடும்பத்தை கொஞ்சம் வைத்துவிட்டு ஜமாஅத்துடன் தொழ மனம் வருவதில்லையே. நாம் தான் ரஸுலுள்ளாஹ்வை உண்மையாக நேசிக்கும் முஹப்பத்துள்ளவர்கள்????
இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகின்றார்கள்: ''ரஸுலுள்ளாஹ்வின் காலத்தில் நயவஞ்சகர்களையும் நோயாளியையும் தவிர வேறு யாரும் ஜமாஅத் தொழுகைக்கு வராமலிருப்பதை நாம் அறிந்ததில்லை. நடக்க முடியாதவர் கூட இருவரின் துணையுடன் ஜமாஅத் தொழுகைக்கு வந்துவிடுவார்'' (முஸ்லிம்)
சத்தியத்தைப் படித்து அதன்படி செயலாற்றும் உண்மை விசுவாசிகளாக வாழ அல்லாஹ் எமக்கு அருள்புரிவானாக.
AAMEEN
ReplyDelete