மூத்த ஊடகவியலாளர் மீரா எஸ். இஸ்ஸதீன் கௌரவிப்பு (படங்கள்)
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) ஏற்பாடு செய்த மே தின விழா அட்டாளைச்சேனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கூட்ட மண்டபத்தில் இன்று 1-5-2013 நடைபெற்றது.
இவ்விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் விசேட அதிதியாகக் கலந்து கொண்டனர். சிறப்பு அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபுர், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தினக் கூட்டம் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வோம் எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் மூத்த ஊடகவியலாளரும்,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும் , ஊடகத் தொழிற்சங்க வாதியுமான கலாபூசணம் மீரா எஸ். இஸ்ஸதீன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையில் சுமார் 40 வருடங்களாக பணியாற்றி நாட்டுக்கும் கிழக்கு மண்ணுக்கு பெருமை சோ்த்ததோடு, சமூகத்தின் வளா்ச்சிக்கு தனது வாழ்நாளை அா்ப்பணித்துள்ள மீரா எஸ்.இஸ்ஸதீனின் ஆளுமைகளை அதிதிகள் எல்லோரும் சிலாகித்து மனமகிழ்ந்து பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மீரா எஸ். இஸ்ஸதீனுக்கு பொன்னாடை போர்த்த அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தனர்.


Post a Comment