நல்ல பிள்ளையாக இருப்பதற்கு போட்டிபோடுதல்..!

இவ்வருடம் செப்டம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்து இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே இத்தேர்தலை நடத்தக் கூடாதென்று அரசாங்கத்தில் உள்ள பௌத்த தீவிரக் கட்சிகளும், இயக்கங்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. வடமாகாண சபைத் தேர்தல் நாட்டில் பிரிவினைவாதத்தை மீண்டும் ஏற்படுத்தி தமிழ் ஈழம் தோன்றுவதற்கு காலாக அமைந்து விடுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
செப்டம்பர் மாதம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தாலும், மாகாண சபைகளுக்கு இருக்கின்ற பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை முழுமையாக இல்லாமல் செய்ததன் பின்னர்தான் தேர்தலை அரசாங்கம் நடாத்தும் என்பதாகவே நகர்வுகள் காண்பித்துக் கொண்டிருக்கின்றன.
மாகாண சபைகளுக்கு இருக்கின்ற பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இல்லாமல் செய்வதற்காக அரசாங்கம் அரசியல் யாப்பில் 19வது திருத்தத்தினை மேற்கொள்ளவுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தினை கொண்டு வருவதற்கு சிறுபான்மைக் கட்சியின் தலைவரும், முஸ்லிம்களின் பெரும்பான்மை செல்வாக்கைக் கொண்டிருக்கின்ற மு.காவின் தலைவருமான அமைச்சர் ரவூப் ஹக்கிமை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அரசியல் யாப்பில் மேற் கொள்ளவுள்ள 19வது திருத்திற்கான சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கிம் முன் மொழிய இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் மு.காவின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி பிபிசிக்கு அளித்த செவ்வி ஒன்று தெளிவுபடுத்திக் கொண்டிருகின்றது.
19வது திருத்தச் சட்ட மூலத்தினை ரவூப் ஹக்கிம் கொண்டு வந்தாலும் மு.கா அதனை எதிர்க்குமென்று ஹஸன்அலி தெரிவித்துள்ளார். ஹஸன் அலியின் இக்கூற்றுஅவர் இன்னமும் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதனைக் காட்டுவதாக இருக்கின்றது.
மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விடவும் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் சிறியதோ,பெரியதோ எதுவாக இருந்தாலும் பதவி ஒன்று வேண்டுமென்று வாய் பிளந்து கொண்டு நிற்பதனை காண்கின்றோம். முஸ்லிம்களுக்கு எதிராக என்ன நடந்தாலும் அதனை தட்டிக் கேட்பதற்கு ரவூப் ஹக்கிமுக்கோ அவரின் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ நாதி கிடையாது. மாற்று முஸ்லிம் கட்சிகள் மு.காவுக்கு முன்னமே நாதியற்ற நிலையை அடைந்துவிட்டன.
இவ்வாறு இருக்கின்றவர்கள் அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள 19 வது திருத்தச் சட்ட மூலத்தினை பாரளுமன்றத்தில் ஹக்கிம் முன் மொழியும் போது மு.கா எதிர்க்கும் என்பது ஏற்றுக் கொள்ளும் ஒன்றாகத் தெரியவில்லை.
என்ன நடந்தாலும் அரசாங்கத்தை விட்டு விலகமாட்டோம் என்ற உறுதி மொழியுடன் இருக்கின்ற மு.கா அரசாங்கம் எதனைச் சொன்னாலும் செய்யும் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. அதற்கான வழிகளையே ஹக்கிம் தமது கட்சியில் உள்ளவர்ளுக்கு காட்டிக் கொண்டிருக்கின்றார்.
அரசாங்கத்தில் இணையவேண்டுமென்று மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்பிய போது அதனை ஏற்றுக் கொள்ளாது அடம்பிடித்துக் கொண்டிருந்த ஹக்கிம். தற்போது அரசாங்கத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் அரசாங்கத்திற்கான தனது பூரண விசுவாசத்தினை காட்டுவதற்காக அரசாங்கத்தை விட்டு மு.கா ஒரு போதும் விலகிக் கொள்ளாது என்று அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாறு ஹக்கிம் சொல்லுவது கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தோசப்படுத்துவதற்காகவேயாகும். பாராளுமன்றத்தில் தமது கட்சியின் உறுப்பினர்கள் தம்மோடு இருந்தால்தான் பாராளுமன்றத்தில் தனக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்ற நோக்கில்தான் ஹக்கிம் அரசாங்கத்தில் தொடர்ச்சியாக இருப்பதற்கான அறைகூவலை அறிக்கைகளாக விடுத்துக் கொண்டிருக்கின்றார்.
இவ்விதமாக ஹக்கிமும், மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றபோது 19வது திருத்தச் சட்ட மூலத்தை மு.கா பாராளுமன்றத்தில் எதிர்க்குமென்று ஹஸன் அலி தெரிவித்து இருப்பது அறிக்கைகளுக்கு பொருத்தமாக இருக்குமேயன்றி நடைமுறையில் சாத்தியமாகாகது.
மு.காவிற்குள் அஸ்ரப்பின் கொள்கையும் திட்டமும் இருக்கின்றதா என்று ஹஸன் அலியிடம்தான் கேட்கவேண்டும். இக்கோள்விக்கு அவர்தான் பொருத்தமானவர். மு.காவின் ஆரம்பகால உறுப்பினர். அஸ்ரப்பின் அனைத்து அசைவுகளையும் அறிந்தவர். இன்று மு.கா புதிய கொள்கையிலும், புதியபாதையிலும் பயணித்துக் கொண்டிருக்கினறது. பட்டத்தயும். பதவியையும், பணத்தையும் நேசிக்கின்றவர்களின் கூடாரமாகவே மு.கா விளங்குகின்றது. அக்கூடாரத்திற்கு தலைமைவகிப்பராகவே ஹக்கிம் இருக்கின்றார். அவர்களுக்கு செயலாளராக ஹஸன் அலியும், தவிசாளராக பசீரும் இருந்து கொண்டிருக்pன்றார்கள்.
இந்த கூடாரத்திற்குள் இருந்து கொண்டு, மாகாண சபைகளின் அதிகாரங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மு.கா போராடுமென்று நம்புவதிற்கில்லை. அரசாங்கத்தின் நல்ல பிள்ளையாக இருப்பதற்கே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். மு.காவினை எடுத்துக் கொண்டால் இந்த நிலையை அடைந்து கொள்வதற்கு ஹக்கிமுக்கும், பசீருக்கும் போட்டி. மட்டுமல்லாது மு.காவின் மற்றைய பாராளுமனற உறுப்பினர்கள் இவர்கள் இரண்டு பேரையும் முந்திக் கொண்டு நல்ல பிள்ளையாக இருப்தற்கு போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகையதொரு போட்டியுள்ள கட்சியில் இருந்து கொண்டு 19வது திருத்தச் சட்ட மூலத்தை மு.கா எதிர்க்கும் என்பது ஹஸன் அலியின் கூற்றாகவே இருந்துவிடுமென்பதுதான் எமது அனுமானமாகும்.
தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை நாடி வருகின்ற ஹக்கிமும் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்போது வடமாகாணசபைத் தேர்தலை கருத்திற் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருப்பதனை அண்மைக் காலநடவடிக்கைகள் காண்பித்துக் கொண்டிருக்கின்றன.
தற்போது ஹக்கிம் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கினறார். குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். வடமாகாண முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளைப் பற்றி அதிகமான கருத்துக்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றார். அம்பாரை மாவட்டத்தில் அஸ்ரப் நகரில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சிரைனகளுக்கு தீர்வு காண்பேன் என்று தெரிவித்து கிழக்கு மகாகாணசபைத் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு வெற்றிவாகை சூடிக் கொண்ட மு.காவும், ஹக்கிமும் இன்றுவரை அப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. இந்த இலட்சணத்தில் வடமாகாண முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்று கூறுவது வடமாகாண சபை தேர்தல் நடைபெறும் போது அங்குள்ள முஸ்லிம்களின் வாக்குகளை மு.காவிற்குப் பெற்றுக் கொள்வதற்கு அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பெற்றுக் கொடுப்பதற்கான வேலைகளையே ஹக்கிம் மேற்கொண்டுவருகின்றார்.
இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஹக்கிம் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் 19வது திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் எதிர்ப்பார்கள் என்று ஆரூடம் சொல்லுவது பலிக்காது.
100% correct
ReplyDeleteUntil Muslims identify the cunningness of the SLMC and reject them, they will continue this drama to fulfill their personal needs.
ReplyDeleteHAKEEM SLMC IN TALAIMAIPPATHAVIYAI VIDDU VILAHATHA VARAI MUSLIMKALUKKU VIDIVU ILLAI
ReplyDelete