பிரான்ஸ் நாட்டிலும் இராணுவ வீரருக்கு கத்திக்குத்து
பிரான்ஸில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இராணுவத்தினரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வீரரின் பின்புறமாக கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அவர் இராணுவ வீரர் என்பதனாலேயே கொலை செய்ய முயற்சித்திருப்பதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் ஸிவஸ் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கத்திக் குத்துக்கு இலக்கான 23 வயது இராணுவ வீரருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தாக்குதல் நடத்தியவர் வட ஆபிரிக்க நாட்டவர் அணியும் கலாசார அங்கியை அணிந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல்தாரியை தேடி தீவிர சோதனை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே பிரிட்டனில் கடந்த வாரம் இராணுவ வீரர் ஒருவர் இரு ஆயுததாரிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment