ஜே.வி.பி.யின் மேதின கூட்டத்தில் முஸ்லிம் நாடுகள் குறித்த பேச்சு
நாட்டில் சர்வாதிகார வெறியும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும் வேண்டாம். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டியடித்து தேசிய ஒற்றுமையை உருவாக்க அனைவரும் போராடுவோம். இன்று வடக்கிற்கோ அல்லது தெற்கிற்கோ எந்தவிதத்திலும் சுதந்திரம் இல்லை என ஜே.வி.பி. யின் மேதினக் கூட்டத்தில் அக் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
ஜே.வி.பி.யின் மேதின சிவப்பு பேரணி தெஹிவளையிலிருந்து ஊர்வலமாக வந்து ஹவலொக் வீதியில் அமைந்துள்ள பி.ஆர்.சி. மைதானத்தில் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஏகாதிபத்தியவாத அமெரிக்கா இன்று ஆசியாவை குறிவைத்துள்ளது. மாலைதீவில் அமெரிக்காவின் தளமொன்றை அமைக்க திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இதற்கு ஆசிய பிராந்திய மக்கள் இடமளிக்கக் கூடாது. அதேபோல் அமெரிக்காவினால் திட்டமிட்டு ஈரான் மற்றும் வடகொரியா மீது முன்னெடுக்கப்படுகின்ற அடக்கு முறைகளைகண்டிப்பதோடு அந்த நாடுகளுக்கு ஜே.வி.பி. நிபந்தனை அற்றவகையில் ஆதரவு வழங்கும்.
யுத்தம் முடிவுக்கு வந்தும் பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவில்லை. அனைத்து நிவாரணங்களும் வெட்டப்படுகின்றன.மாத்தளை மனிதப் புதைகுழி உண்மைகளையும் மூடிமறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே போராட்டத்தின் ஊடாக வெற்றி இலக்கை அடைய பொதுமக்கள் ஒன்று திரள வேண்டும். இது எளிதான விடயமல்ல. சவால் மிக்கதாக அமைந்தாலும் அதனை எதிர்கொள்ள பரந்த சூழலும் தற்போது கிடைத்துள்ளது. அமெரிக்கா ஆசிய மீது தனது பார்வையை திருப்புவதையோ அல்லது நமது நாட்டின் உள்ளக விடயங்களில் தலையிடுவதையோ அனுமதிக்க முடியாது. வியட்நாம், சிரியா, லிபியா, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் வடகொரியா போன்ற நாடுகள் மீது அடக்கு முறைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.



Post a Comment