Header Ads



இளம் பிள்ளைகளும், கொம்பியூட்டரும்..!

(சாஹா)

நமது பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டி காலத்தில் நாம் கேள்வியேப் பட்டிராத விஷயம்.

நமக்குப் புதுமையாகவும் நேரத்தை விரயமாக்கும் விஷயமாகவும் தெரிகிற இவை, நம் குழந்தைகளுக்கோ தவிர்க்க முடியாத சுவாரஸ்யம். பிள்ளைகளின் உலகத்தில் பெரும்பங்கு வகிக்கிற இந்த இன்னொரு உலகத்தைப் பற்றி, அவற்றின்  உபயோகங்கள் மற்றும் அபாயங்களைப் பற்றி எல்லா பெற்றோரும்  தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் நுழைய 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது நியதி. ஆனாலும், டீன் ஏஜை கூடத் தொடாத பல குழந்தை களும் அதில் இருக்கவே செய்கிறார்கள். ‘ஃபேஸ்புக்ல இருக்கியா.... ட்விட்டர்ல இருக்கியா?’ என்கிற கேள்விகளுக்கு ‘இல்லை’ என்று சொல்வது  அவர்களைப் பொறுத்த வரை அநாகரிகம்...  கௌரவக்குறைவும் கூட. இன்றைக்கு மிக இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர்  அறிமுகமாகிறது. ஆனால், 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு செல்போனையோ,  ஃபேஸ்புக், ட்விட்டர் மாதிரியான விஷயங்களையோ கையாள  மனமுதிர்ச்சி இல்லை. 

7 வயது கவுதம், தனக்கு செல்போன் கேட்டு அடம்பிடிப்பதைப் பெருமையாகச் சொன்னார்கள் அவனது பெற்றோர். ‘‘அம்மாவும் அப்பாவும் வீட்ல  இல்லாதப்ப, எனக்கு ஏதாவது பிரச்னைன்னா நான் எப்படிப் பேசறது?’’ என்பது கவுதமின் கேள்வி. பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச்  செல்கிறார்கள். வீட்டில் தனியே பிள்ளைகளை விட்டுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லை.  ஆட்கள் இருக்க வேண்டிய இடத்தை டெக்னாலஜி ஆக்கிரமிக்கிறது. செல்போன், இன்டர்நெட், ஈமெயில் என எல்லா வசதிகளையும் வீட்டுக்குள் வர  வழைக்கிறார்கள். 

செல்போனை பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி என்பதோ, செல்போனிலும் இன்டர்நெட்டிலும் விளையாட்டுத்தனமாக அவர்கள் செய்கிற சில  விஷயங்கள் பிற்காலத்தில் பெரிய பிரச்னைகளை இழுத்து விடப் போகிறது என்பதையோ அவர்கள் அறிவார்களா? ‘என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும்  ஃபேஸ்புக்லயும் ட்விட்டர்லயும் இருக்காங்க. எனக்கும் அக்கவுன்ட் ஆரம்பிச்சுக் கொடுங்க’ என்று அடம் பிடிக்கிறபிள்ளைகள் அனேகமாக எல்லார்  வீடுகளிலும் இருப்பார்கள். பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்காமல் அதற்கு அனுமதிக்கிற பெற்றோர், அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுத்ததோடு தன்  வேலை முடிந்தது என இருக்காமல், பிள்ளைகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது முக்கியம். 

அந்தரங்க விஷயங்கள் பாதுகாக்கப்படுகின்றனவா என்பதைக்கவனிக்க வேண்டும். எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் எவை,  பகிரக்கூடாதவை எவை என்கிற வேறுபாட்டையும், அதற்கான காரணத்தையும் விளக்கிச் சொல்லுங்கள். அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க  வேண்டியது யதார்த்த உலகத்தில் எப்படி முக்கியமானதோ, அதே மாதிரி வலைத்தள யுகத்திலும் அவசியம் என வலியுறுத்துங்கள். எப்போதெல்லாம்  முடியுமோ, அப்போதெல்லாம் இணையதள இன்னல்கள் பற்றிப் பாடம் எடுக்கத் தவறாதீர்கள். நிஜ வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் செய்யத்  தயங்குவோமோ, யோசிப்போமோ, அதை ஆன்லைனிலும் செய்யக்கூடாது என்பதைப் பதிய வையுங்கள்.

அதற்காக உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டரை தொட்டாலே ஆபத்து எனக் குறுக்கே விழுந்து தடுக்காதீர்கள். இணையதளங்களைப் பற்றியும்  வலைப்பதிவைப் பற்றியும் தவறான தகவல்களைக் கேள்விப்பட்ட சில பெற்றோர், தம் குழந்தைகளை கம்ப்யூட்டரை தொடவே விடாமல் கறாராக  நடந்து கொள்வதையும், பிறகு திடீரென ஒரு நாள், தம் பிள்ளைகள் தமக்கே தெரியாமல் கம்ப்யூட்டரை பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் தெரிந்து  கொண்டு அதிர்ச்சியாவதைப் பார்த்திருக்கிறேன். உங்கள் பிள்ளைகள் கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் உபயோகிக்கட்டும். கம்ப்யூட்டரானது உங்கள்  வீட்டின் பிரதான இடத்தில் உங்கள் பார்வையில் படும்படி இருக்கட்டும். 

பிள்ளைகளின் அறையில் தனி கம்ப்யூட்டர் வைக்க அனுமதிக்காதீர்கள். அது அவர்களது நடவடிக்கைகளை நீங்கள் கண்காணிப்பதைத் தடுத்து விடும்.  அதில் அவர்களுக்கு உடன்பாடிருக்காதுதான். ஆனாலும் பரவாயில்லை... பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதைவிட, பாதுகாப்பாக இருப்பதுதானே  பெற்றோருக்கு முக்கியம்? பார்வையில் படும்படியான இடத்தில் கம்ப்யூட்டரை வைத்து, அவர்கள் உபயோகிக்கிற போது, அவர்கள் இணையதளத்தில்  என்ன பார்க்கிறார்கள், எத்தனை மணி நேரம் செலவிடுகிறார்கள் என்பதையும் உங்களால் கவனிக்க முடியும். பெற்றோர் கண்காணிக்கிறார்கள் என்கிற  பயத்தில், பிள்ளைகளும் தவறான வழிகளைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். 

அறிவு வளர்ச்சி மற்றும் கல்வி சம்பந்தமாக கம்ப்யூட்டரை, இணையதளத்தை குழந்தைகள் பயன்படுத்துவதைத் தடுக்காதீர்கள். சிறு குழந்தைகள் தன்  சுவாரஸ்யத்துக்காக கம்ப்யூட்டர் உபயோகிக்கிற நேரம் 30 நிமிடங்களுக்கு மேல் நீடிக்க அனுமதிக்காதீர்கள். அதுவும் அந்தக் குழந்தை விரும்பினால்  மட்டுமே. கேம்ஸ் விளையாடும் குழந்தைகளிடம் இந்த நேரக்கணக்கு செல்லுபடியாகாதுதான். ஆனாலும், இந்தக் கோட்பாடை நீங்கள்  வலியுறுத்தித்தான் ஆக வேண்டும். அது மட்டுமல்ல பெற்றோரே... உங்கள் பிள்ளைகள் பார்க்க விரும்புகிற இணையதளங்கள் பற்றியும் உபயோகிக்க  ஆசைப்படுகிற கருவிகள் பற்றியும் தெரிந்து வைத்திருங்கள். 

உங்கள் பிள்ளைகளிடமே அவற்றைப் பற்றிப் பேசலாம். உங்கள் குழந்தையின் டிஜிட்டல் உலகத்தில், நீங்கள் ஒரு ஆர்வமுள்ள பயணியாக மாறுங்கள்.  உங்கள் மகனிடம் அல்லது மகளிடம் அவன(ள)து விருப்பமான கேம்ஸ் பற்றியும் விருப்பமான இணையதளம் பற்றியும் வீடியோ மற்றும்  செயல்பாடுகள் பற்றியும் ஆர்வமாகக் கேளுங்கள். உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்திலும், பகிர்ந்து கொள்ளும் விருப்பத்திலும் பிள்ளைகளும்  உங்களுக்கு இசைவார்கள். ஒருவேளை நீங்கள் இவற்றையெல்லாம் செய்யத் தவறினால், டிஜிட்டல் குடியுரிமையை நோக்கிய அவர்களது  உலகத்திலிருந்து நீங்கள் தனித்து நிற்பீர்கள்.

அதே நேரம் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளின் உலகத்தில் அளவுக்கு அதிகமாக தலையிடுவதையும் தவிருங்கள். அவர்கள் அனுமதிக்கக்கூடிய  சுதந்திரத்தைத் தடை செய்யாதீர்கள். தொழில்நுட்ப விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பதில் உங்கள் பிள்ளைகள் நிச்சயம் உங்களைவிட ஒருபடி  மேலேதான் இருப்பார்கள். எனவே, அவர்களுடனான அந்த ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க முனையாதீர்கள். அவர்கள் சரியான பாதையில்தான்செல்கிறார்கள் என்பதைக் கவனித்தபடி,அவர்களுடனேயே பயணியுங்கள்.வலைத்தள அடிமைத்தனம் ஒரு பக்கம் என்றால், இணையதள விளையாட்டு  அடிமைத்தனம் அதைவிட அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! 

No comments

Powered by Blogger.