Header Ads



யாழ்ப்பாண பள்ளிவாசல்கள் கோயில்களாக, தேவாலயங்களாக மாறி விடக்கூடாது - மௌலவி சுபியான்

1. யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின் தற்போதைய நிலை பற்றி?

யாழ்ப்பாணத்தில் 2009 மே க்குப் பின் மீள்குடியேறி குடும்பமாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் 245 குடும்பங்களாகும். ஆனாலும் இதற்கு மேலாக 300 குடும்பங்கள் வரை வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். இது தவிர மீள் குடியேற்றத்திற்காக பதிவு செய்துள்ள குடும்பங்கள் 1932 ஆகும். இது தான் இறுதியாக எடுக்கப்பட்ட யாழ் பிரதேச செயலக மதிப்பீடாகும். 

2. மீள் குடியேற்றம் பின்னடைந்தமைக்குக் காரணம்? 

முஸ்லிம்கள் வாழ்ந்த வட்டாரம் அழிக்கப்பட்டதுதான் முதற் காரணம். யுத்தம் நடைபெற்ற சூழ் நிலையில் முஸ்லிம் வட்டாரத்தைச் சூழவுள்ள பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்படாத நிலையில் முஸ்லிம் வட்டாரம் மாத்திரம் அழிவுகளுக்கும், சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளதை ஆராய்ந்த பொழுது இவ் அழிவுகள், நாசகார வேலைகள் 1996க்குப் பின்னரே நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்திற்கு முதலில் திரும்பிய பொறுப்புள்ள மனிதர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் இதற்கு பொறுப்புக் கூற கடமைப்பட்டவர்கள். அன்று இச் சொத்துக்களும் வீடு வாசல்களும் கூறப்படுவதைப் போன்று இவ் அழிவுகாரர்களினால் அகட்டப்படாமல் விடப்பட்டிருந்தால் இன்று தங்கள் வீடுகளில் வீட்டுச் சொந்தக்காரர்கள் மீள் குடியேறியிருப்பர். இதுதான் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பொதுவான அபிப்பிராயமாகும். 

இரண்டாவது 2009 இறுதி யுத்தத்தின் பின்பு யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்காக திட்டமிடப்பட்டு அங்கீகாரத்துடன் முதலில் காணியுள்ள 100 குடும்பத்தினரை குடியேற்றுவதற்கு நடவடிக்கையை எடுத்தோம். இவர்களுக்காக ரூபா 8 இலட்சம் பெறுமதியான முழுமையான வீடுகளைத் கட்டித் தருவதற்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று முன் வந்திருந்தது. இம் முயற்சியை முன்னெடுத்துக் கொண்டிருந்த போது அரசியல் உள் நோக்கம் கொண்ட ஒரு சிலரின் தூர நோக்கற்ற திட்டமிடப்படாத வேலைகளினால் எமது முயற்சிக்கு தடைகள் ஏற்பட்டது. அன்று மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி பிழையாக வழி நடத்தப்பட்டதால் மீள் குடியேற்றத்திற்கான பதிவுகள் இரண்டாயிரத்தை தாண்டியது. 'முஸ்லிம்கள் வந்தார்கள் மீள் குடியேற்றத்திற்காகப் பதிந்தார்கள் அதே பஸ்ஸிலேயே திரும்பிச் சென்றார்கள்'. என்ற செய்தி ஊடகங்களில் யாழில் செய்தியாக வந்தது. அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் விழித்துக் கொண்டார்கள் இதன் தாக்கத்தினால் உண்மையில் யாழ்ப்பாணத்தில் குடும்பத்துடன் மீள் குடியிருப்போருக்கு அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. நாளடைவில் மீள் குடியேறி வாழ்வதற்காக வந்த குடும்பங்களும் மீளவும் முன்னர் இடம் பெயர்ந்து வாழ்ந்த இடங்களுக்கே படிப்படியாக திரும்பத் தொடங்கினர். அது தான் உண்மைக் காரணங்களாகும். 

3. யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் காணிகள் வீடுகளை மீளப் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனரா?

முஸ்லிம்கள் வாழ்ந்த காணிகள் வீடுகள் தெளிவான உறுதியுடன் ( காணி ஒப்பம்) உள்ளவர்கள் எவ்வித பிரச்சினைகளுமின்றி திரும்பப் பெற்றுள்ளனர். கோயில் வளவுகளில் உள்ள ஒரு சில வீடுகள் கைமாற்றப்பட்டுள்ளது. இவற்றை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றோம். இது போன்று குத்தகை வாடகை கடைகளிலிருந்தோர் ஒரு சிலர் தங்கள் தொழில் ஸ்தாபனத்தை இழந்து உள்ளனர். இது தொடர்பாகவும் முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றோம்.

4. யாழ்ப்பாண முஸ்லிம்கள் அங்குள்ள அதிகாரிகளினால் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவது பற்றி?

என்னைப் பொறுத்த வரையில் இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. யாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் பாதிப்படைந்தோர் தேவையுடையோர் அதிகமாகவேயுள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைக்கும் உதவிகள் பாதிப்படைந்த அனைவருக்கும் பங்கீடு செய்வதற்கு போதுமானதாக இல்லை. எனவே கிடைக்கும் உதவிகளை அதிக தேவையுடையோருக்கு முன்னிலைப்படுத்துகின்றனர். இதில் எமது மக்கள் சில வேலைகளில் பின் தள்ளப்படுகின்றனர். இதனால் எமது மக்களில் ஒரு சிலர் தாங்கள் அதிகாரிகளினால் புறக்கணிக்கப்படுவதாகக் கருதுகின்றனர்.

5. அங்குள்ள ஏனைய சமூகத்தவர்களின் ஆதரவு முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கின்றதா?

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய சமூகங்களுடன் நல்லுறவைப் பேணி மதிப்புடனேயே வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒரு சிலர் இன்றும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களால் முடிந்தளவு முஸ்லிம்களுக்கு உதவுவதில் ஆர்வமாகவே உள்ளனர். இவர்கள் மூலம் ஏனையவர்களுடன் நல்லுறவைப் பலமாகக் கட்டியெழுப்பும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றோம். 

6. முஸ்லிம் மக்களின் சமயகலாச்சார நிகழ்வுகளை மேற் கொள்வதற்கு ஏதேனும் தடைகள் உண்டா?

தற்போது ஏனைய சமய சமூக நிறுவனங்களுடன் நல்ல தொடர்புகளை பேணி வருகின்றோம். புதிய இளம் சந்ததியினருக்கு ஒவ்வொரு சமூகங்களினதும் சமய சமூக கலாச்சாரங்களை விளங்கிக் கொள்ளக் கூடிய கருத்து பரிமாற்றங்களையும் கலாச்சார நிகழ்ச்சி பரிமாற்றங்களையும் மேற் கொண்டு வருகின்றோம். இதன் மூலம் சமய சமூக கலாச்சாரங்களை விளங்கிக் கொள்ளக்கூடிய கருத்து பரிமாற்றங்களையும் கலாச்சார நிகழ்ச்சி பரிமாற்றங்களையும் மேற் கொண்டு வருகின்றோம். இதன் மூலம் சமய சமூக கலாச்சார புரிந்துனர்வுகள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. எனவே எவ்வித தடைகளையும் இது வரையில் நாங்கள் எதிர்நோக்கவில்லை.

7 யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றி?

யாழ்ப்பாணத்தில் தற்போது மீள் குடியேற்றத்திற்காக பதிந்துள்ளவர்களில் 437 குடும்பத்தினருக்கே காணியுள்ளது. ஏனையவர்களுக்கு காணி இல்லை. யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் காணிகள் 25 & த்திற்கும் அதிகமானவைகள் ஏனைய சமூகத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மிகுதியுள்ள காணிகளில் பெரும்பாலானவை ஏனைய இடத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடையது. அவர்களில் வசதியுள்ள  ஒரு சிலர் தங்களது வீடுகளை தங்களது சொந்த செலவிலேயே திருத்தி வாடகைக்கு கொடுத்துள்ளனர். ஏனையவர்கள் வசதிகளை எதிர்பார்த்து திருத்துவதற்காக உள்ளனர். எனவே உண்மையில் மீள் குடியேற வேண்டும் என நினைக்கும் மக்களுக்கு இங்கு காணிகள் இல்லை. இந்திய அரசாங்கத்தின் வீடுகள் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு 1000 தருவதாக கூறப்பட்டிருக்கின்ற பொழுதும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுக்கு இது வரையில் 247 குடும்பமே விண்ணப்பித்துள்ளனர். இதில் யாழ் மாநகர சபையில் வீடு கட்டுவதற்குரிய அனுமதியைப் பெற்று பிரதேச செயலகத்தில் ஒப்படைத்துள்ளவர் குறைவானவர்களே. இவர்களில் எத்தனை குடும்பத்திற்கு வீட்டுத்திட்டம் கிடைக்கும் என்பது திட்ட பரிசீலணைக் குழுவின் புள்ளிகளின் முடிவிலேயே தெரிய வரும். யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறி வாழ விரும்பும் மக்களின் காணியில்லாதவர்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுத்து இந்திய வீட்டுத் திட்டத்தின் மூலம் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தி ஊக்கப்படுத்த முடியும். உட்கட்டுமான வேலைகளை நாம் துரிதமாக நடைமுறைப்படுத்தி வருகின்ற பொழுதிலும் காணிகள் இல்லாமல் வீடுகளில்லை. வீடுகளில்லாமல் குடிகள் இல்லை. குடிகள் இல்லாமல் சமூகமில்லை. இதுதான் தற்போதுள்ள சவாலாகும். 

8. மீள் குடியேற்றத்திற்காக அரச காணிகள் வழங்கப்படுமா?

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக அரச காணிகள் யாழ் பிரதேச செயலகப் பிரிவில் இல்லாததினால் வழங்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள்ளேயே  முஸ்லிம் வட்டாரத்தை அன்மித்தே மீள் குடியேற வேண்டும். என மக்களும் விரும்புகின்றதனால் காணிகள் விலை கொடுத்து வாங்கியே மீள் குடியேற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. காணிகள் இப் பகுதியில் 10 பேர்ஜஸ் (வயல் காணிகள்) ரூபா இரண்டு இலட்சம் வரை தற்போது விலை போகின்றது. இப் பகுதிகளில் காணி வாங்கி மீள்குடியேறி வரும் காணி இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுமானால் இந்திய வீட்டுத்திட்டத்தின் உதவியை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இன்ஷ அல்லாஹ் நாம் மேற்கொள்ள முடியும். பயனாளிகள் தெரிவுகள் முடிவதற்கு முதல் இப் பணிகள் நடை பெற வேண்டும். எனவே இதற்கு நல்ல இதயம் கொண்ட கொடையாளிகள் முன் வரவேண்டும். இவர்களுக்கு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பாரம்பரியத்தையும் அல்லாஹ்வின் மஸ்ஜித்துக்களையும் பாதுகாத்து நற்கூழி நிச்சயமாக கிடைக்கும். 

9. யாழ்ப்பாண முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பாக?

யாழ்ப்பாணத்தில்  பூர்வீகமாக கொண்ட முஸ்லிம் மக்கள் மீளவும் குடியேற வேண்டும். தற்போது குடியிருப்போர் நாளாந்தம் தொழில் செய்பவர்கள், கூடுதலாக இரும்பு வியாபாரத்தையும் நம்பி மீள்குடியேறியவர்கள்; தற்போது தொழில் குறைவடைந்து போவதாக கூறுகின்றனர். தொழில் வாய்ப்பில்லை, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவித் திட்டங்களில்லை. என்ற நிலையில் இவர்களும் பழைய இடத்திற்கே திரும்ப முயற்சிப்பர். நாளடைவில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதி ஏனைய சமூகங்களினால் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கப்பட்டு ஈற்றில் முஸ்லிம் வட்டாரத்தையே ஒரு காலகட்டத்தில் இழக்க வேண்டி வரும் என்ற அச்சம் எனக்குள் இருக்கின்றது. வரலாற்று ரீதியாக யாழ்ப்பாண முஸ்லிம் வட்டாரம் தற்போது வாழும் (நாவாந்துறை) முஸ்லிம்களில் ஐந்தாவது இடம்பெயர்வின் இறுதிக் குடியிருப்பாகும். இதற்கு  முன் வாழ்ந்த பறங்கித் தெருவில் முஸ்லிம்களின்  பள்ளிவாசல் கிருஸ்தவக் கோயில்களாகவும் நல்லூரில் ஒரு பகுதி ஜும்ஆப் பள்ளிவாசலாக இருந்து இந்துக் கோயிலாகவும் வரலாற்றில் நாம் இழந்து நிற்கின்றோம். ஆல்லாஹுத்த அலா பாதுகாக்க வேண்டும். 

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் யாழ் முஸ்லிம் வட்டாரத்திலுள்ள பள்ளி வாசல்கள் இந்து, கிறிஸ்தவ கோயில்களாக தேவாலயங்களாக மாறி விடக் கூடாது. இதற்காக இறைவனால் குற்றவாளியாக உலமாக்களும் சமூக அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல சமூதாய உறுப்பினர்களாலும் உள்ளனர். என்பதனை உணர்ந்து மீள் குடியேற்றத்திற்காக எல்லோரும் ஆக்க பூர்வமான பங்களிப்பைச் செய்ய முன் வர வேண்டும். 


10. தற்போது மாகாணசபைத் தேர்தல் நடைபெறுமானால் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமா?

தேர்தலில் வாக்களிப்பு தொடர்பாக அரசாங்கத்தினால் சில ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக அறிகின்றோம். அவ்வாறு இடம் பெற்றால் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு அரசியல் அதிகாரத்துடன் சேவை செய்ய விரும்புகின்றார்கள். யாரேனும் விரும்பினால் அவர்கள் அனைவரும் தாங்கள் ஆதரிக்கும் கட்சி நிலைப்பாட்டிலிருந்து கொண்டு ஒரே அணியில் சுயேட்சைக்குழுவாக களம் இறங்கினால் குறைந்த பட்சம் ஒரு பிரதியாவது பெற்றுக் கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கையாகும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். தெரிவு செய்யப்படும் பிரதிநிதி மாகாணசபையில் தனது ஆதரவை தான் விரும்பும் கட்சிக்கு ஆதரவளித்து தனது சமூக அரசியல் பணியை மேற் கொள்ள முடியும் 

11. யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கான அரபு நாடுகள் முஸ்லிம் நாடுகளின் உதவிகள் பற்றி?

எமது மக்களின் தேவைகள் தொடர்பாக ஏற்கனவே இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசாங்கத்தின் மூலம் வரும் போதே தங்களால் பாரிய அபிவிருத்தி தொடர்பாக பரிசீலிக்க முடியும். என பெரும்பாலானோர் கூறினர். அரசாங்கத்தில் உயர் மட்டத்துடனும் இவ்விடயம் தொடர்பாக உரையாடியுள்ளோம். உண்மையில் சில அரபு நாடுகளின் உதவிகள் எமது யாழ்ப்பாண மக்களின் புத்தளத்தில் அமைந்துள்ள முகாம்களைக் காண்பித்து அரபு நாடுகளின் உதவிகளைப் பெற்று வீட்டுத் திட்டங்களை அமைத்து தனது சொந்த ஊரார்களுக்கே வீட்டுத் திட்டத்தினை பகிர்ந்தளித்து அரசியல் செய்த அரசியல் வாதிகள் இன்றும் யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளின் அழிந்து காணப்படும் பிரதேசங்களைக் படம் பிடித்துக் காண்பித்து வெளிநாட்டு உதவிகளைப் பெற முயற்சிப்பதை நாம் அறிவோம். அவர்களுக்கு நாம் கூறுவதாவது  ' தங்கள் அரசியல் பலத்தின் மூலம் இவ்வுதவிகள் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளது. நீங்கள் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் பங்கை சரியாகப் பகிர்ந்தளித்து நீதியாக நடந்து கொள்ளுங்கள் என்பதாகும்.

2 comments:

  1. சுபியான் (யாழ், மாநகர சபை உறுப்பினர்) அவர்களை பேச வைத்தமைக்கு யாழ் முஸ்லிம் இணையத்திற்கு முதற்கண் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

    தனது இரண்டாவது வினாவிற்கு விடையளிக்கும்போது, முஸ்லிம் வட்டாரத்துக்கு முதலில் திரும்பிய தம்மை பொறுப்புள்ள மனிதர்களாக காட்டிக்கொள்ளும் சிலரே யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் அழிவிற்கு காரணம் என அடையாளப்படுத்துகின்றார். இதனை இவ்வளவு காலமும் மறைத்து வைத்திருந்து இப்போது வெளியிட்டமைக்கான காரணம் என்ன?

    இந்த பொறுப்புள்ள மனிதர்களுக்கு தாங்கள் 2008ம் ஆண்டு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தீர்களே அது என்ன பின்னணியில்

    இரண்டாவது கேள்விக்கான பதிலின் இறுதிப்பகுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ளதை நோக்கும்போது யாழ்,முஸ்லிம்களை கொஞ்சம்,கொஞ்சமாக, கட்டகமாக குடியேற்றுவது என்ற அர்த்தம் புலப்படுகின்றது. அதாவது முதலில் 100 பேருக்கு, பின்னர் 100 பேருக்கு என்று உங்களிடம்ம் ஒரு திட்டம் இருந்ததைப்போலவும், பின்னர் அது சடுதியாக குழப்பப்பட்டதாகவும் கூறுகின்றீர்கள். உண்மையில் அப்படி ஒரு திட்டம் உங்களிடம் இருந்ததா? ஏன் அதனை வெளிப்படுத்தவில்லை. யாழ் முஸ்லிம்களின் கூட்டமைப்பாக உருவாகிய சம்மேளனத்தின் நீங்கள் ஏன் அங்கத்துவம் வகிக்கவில்லை. முஸ்லிம்கள் அதிகளவில் மீளக்குடியேறியதால் பல நன்மைகள் நடக்கின்றனவே. அதுபற்றி ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை

    நன்மைகள்
    • முஸ்லிம்களின் வரவு ஓரளவிற்கு கணிக்கத்தக்கதாக இருக்கின்றது.
    • நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன
    • காணிகள் வழங்கிவைப்பதற்கான முயற்சிகள் அரச மட்டத்தில் நடந்திருக்கின்றது
    • வீட்டுத்திட்டத்திற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன
    இவை நன்மைகளல்லவா?

    முஸ்லிம்களின் பூமி அந்நியரின் பூமியாக மாறக்கூடாது என்ற விடயத்தில் தாங்கள் விடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றோம், அந்த அடிப்படையில் தாங்கள் ஒரு அரசியல் உகிதியையும் முன்வைக்கின்றீர்கள். இருப்பினும் இதுவே யாழ் முஸ்லிம் சமூகத்தை நிரந்தரமான அழிவை நோக்கி நகர்த்தும் என்பதை ஏன் மறைக்கின்றீகள், வழமைப்போல தங்களின் அரசியல் அபிலாசை மறைக்கின்றதா?

    இவற்றுக்கும் பதில் தருவது சிறப்பானதாக இருக்கும்

    அபூ அப்துல்லாஹ்- ஹாதி அபூபக்கர் வீதி, யாழ்ப்பாணம்

    ReplyDelete
  2. Hi friends,

    பிற மதத்தவர்கள் நமது வணக்கத்தலத்தை தவறாக கையாளும்போது நமக்கு உண்டாகும் இதே ஆதங்கம் கிழக்கு மாகாணத்திலே காலம் காலமாக இருந்து வந்த சில சிறிய சிறிய இந்து ஆலயங்களை அழித்து நாம் அந்த இடங்களை வேறுதேவைகளுக்கு பயன்படுத்தியபோது அவர்களுக்கும் ஏற்பட்டிருக்குமல்லவா..?

    இந்த இடத்தில் அதையும் நினைத்துப் பார்த்தால், காக்கைகளுக்கு தன்குஞ்சுகள் ஏன் பொன் குஞ்சுகளாகத் தோன்றுகின்றன என்பதையும் புரிந்துகொள்ளலாம் அல்லவா?

    தவறை யார் செய்தாலும் தவறுதான்.

    ReplyDelete

Powered by Blogger.