Header Ads



ஆசாத்சாலி: நசுக்கப்பட்ட குரல்..!



(தம்பி)

கைது செய்தார்கள். தடுத்து வைத்தார்கள். இப்போது விடுவித்து விட்டார்கள். ஆசாத்சாலி பற்றித்தான் பேசுகிறேன். காரணமில்லாமல் கைது செய்யப்பட்டு – காரணமில்லாமலேயே அவர் விடுவிடுக்கப்பட்டுள்ளார். இங்கு 'காரணம்' என்று நாம் கூறுவது – கைதுக்குரிய சட்பூர்வமான காரணமாகும். ஆசாத்சாலி காரணமில்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்த நாட்டின் நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. ஆனாலும், ஆசாத்சாலி கைது செய்யப்பட்டமைக்கு 'காரணங்கள்' இல்லாமலில்லை. இங்கு 'காரணம்' என்று நாம் கூறுவதன் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள உங்களுக்குக் கடினமாக இருக்காது என நம்புகின்றோம். 

ஆசாத்சாலி - தனது சமூகத்துக்காக உரத்துக் குரல் கொடுத்தார். முஸ்லிம்கள் மீது பொதுபலசேனா உள்ளிட்ட பேரினவாத அமைப்புக்களின் நெருக்குவாரங்கள் அதிகரித்தபோது, முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் எனக் கூறப்பட்டவர்கள் எல்லோரும் மௌனித்துப்போக, ஆசாத்சாலி தனித்து நின்று பேரினவாதிகளுக்கு எதிராகப் பேசினார். பேரினவாத அமைப்புக்களின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருந்த ஆட்சியாளர்களை ஆசாத்சாலி அம்பலப்படுத்தினார். இவை தவிர, அவர் வேறெதுவும் செய்ததாகத் தெரியவில்லை. 

ஆசாத்சாலியின் உரைகளும், அறிக்கைகளும் ஆவேசம் கொண்டவையாக இருந்தன. பொதுவெளியில் தனது உணர்வுகளை - அவர் 'அப்படியே' அள்ளிக் கொட்டியதை அவதானிக்க முடிந்தது. 'அடக்கி வாசித்தல்' என்பதை கோழைத்தனம் என்று அவர் கருதியிருக்கக் கூடும். அதனால், அரசியல் குறித்த அவரின் பேச்சுக்களெல்லாம் கட்டுக்கடங்காதவையாக இருந்தன. ஆசாத்சாலியின் இந்தக் குணாம்சம்தான் அவரின் எதிராளிகளுக்கு இறுதியில் வாசியாகிப் போயிற்று. 

ஆசாத்சாலி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதே ஆச்சரியமான செய்தியாக இருந்தது. 'இந்த நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும்' என்கிற இலக்கோடு, இலங்கை ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திச் சண்டையிட்ட - புலி உறுப்பினர்களை 'பிடித்து வைத்து' விசாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் - ஆசாத்சாலி கைது செய்யப்பட்டமையை உலகமே விநோதமாகப் பார்த்தது. ஒரு குருவியைச் சுடுவதற்கு பீரங்கியைக் கொண்டு வந்ததைப் போல் - இவ் விவகாரம் நோக்கப்பட்டது. 

பொதுபலசேனா போன்ற அமைப்புக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எதிராக ஆசாத்சாலி பேசியதோடு மட்டும் நின்று விடவில்லை. பேரினவாதிகளுக்கு எதிராகப் பேசாமல் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அவர் விமர்சித்தார். இதனால், முஸ்லிம்களிடையே ஆசாத்சாலி திடீர் ஹீரோவாகத் தொடங்கினார். இந்த நிலைவரமானது முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆசாத் சாலி கைது செய்யப்பட்டமைக்கு ஆட்சியாளர்கள் தரப்பில் ஆயிரத்தெட்டுக் காரணங்கள் கூறப்பட்டாலும், தான் எதற்காகக் கைது செய்யப்பட்டார் என்பதை ஆசாத்சாலி மிக நன்கு அறிவார். இந்தக் கைது மூலம் - ஆட்சியாளர்கள் உணர்த்துவதற்கு முயற்சித்த விடயம் என்ன என்பதை உலகமும் மிக நன்கு அறியும். 'ஆட்சியாளர்களுக்கு எதிராகத் துள்ளினால் - இதுதான் கதி' என்பதை, ஆசாத்சாலியின் கைது புரியவைத்திருக்கிறது. அவ்வளவுதான்.

ஆசாத்சாலி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தார். பின்னர் தற்போதைய ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார். அதன் பிறகு – கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ் - முஸ்லிம் கூட்டணி என்கிற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார். அதற்குப் பிறகு - மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்டு பின்னர் அவருடைய மனைவி பேரியல் அஷ்பினால் இல்லாமலாக்கப்பட்ட 'நுஆ' எனும் தேசிய ஐக்கிய முன்னணி என்கிற கட்சியின் பெயரில் ஆசாத்சாலி இயங்கத் தொடங்கினார். 

சரியாகச் சொன்னால், தனக்கென்றொரு அரசில் தளத்தினைத் தேர்வு செய்வதில் அண்மைக் காலமாக - ஆசாத்சாலி மிகவும் தடுமாற்றத்துக்கு உள்ளாகி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. மு.காங்கிரசினூடாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அவர் களமிறங்கியமைதான் அவருடைய அரசியல் தடுமாற்றத்தின் உச்சமாகும். பலமான ஓர் அரசியல் கட்சியில் ஆசாத்சாலி இருந்திருந்தால், அவரைத் 'தொடுவதற்கு' முன்பாக, ஒன்றுக் இரண்டு தடவை ஆட்சியாளர்கள் யோசித்திருப்பார்கள். 

ஆசாத்சாலி கைது செய்யப்பட்டமைக்கு எதிராக - முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் இதுவரை வாயைத் திறக்கவேயில்லை. சிலர் - மிக நீண்ட மௌனத்தின் பின் பேசினார்கள். வெகு ஒரு சிலர்தான் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்தார்கள். ஆசாத்சாலியின் கைது நடவடிக்கையினைக் கண்டித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டதை விடவும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ண போன்ற தமிழ் - சிங்களத் தலைவர்கள் உறுதியோடு களத்தில் இறங்கிச் செயற்பட்டிருந்தார்கள். 

ஆசாத்சாலி கைது செய்யப்பட்டு 08 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தான் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து 05 நாட்கள் நீர், உணவு எதுவுமின்றி அவர் உண்ணா நோன்பிருந்தார். பின்னர் அவருடைய குடும்பத்தவர்களின் வற்புறுத்தல் காரணமாக நீர் ஆகாரத்தினை மட்டும் உட்கொண்டு வந்தார் எனத் தெரியவருகிறது. இதனால், 10 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசாத்சாலி திடீர் உடல் நலக் குறைவுக்குள்ளானமையும் - தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியிலேயே அவர் சிசிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் நீங்கள் அறிந்ததே. 

ஆசாத்சாலியின் விடுதலைக்காக அவருடைய குடும்பத்தினர் அதீத முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அந்த முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அதேவேளை, சமய வழிபாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். பள்ளிவாசல்களுக்குச் சென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர். பௌத்த விகாரைகளில் ஆசாத்சாலியின் விடுதலைக்காக நடத்தப்பட்ட சமய வழிபாடுகளில் - பார்வையாளர்களாகக் கலந்து கெண்டனர். ஆசாத்சாலியை விடுவிக்க வேண்டுமெனும் தவிப்பிலிருந்த குடும்பத்தினரை - அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வழிநடத்தினர் என்பதுதான் உண்மையாகும். 

பௌத்த விகாரைகளில் இடம்பெற்ற சமய வழிபாடொன்றின் போது, ஆசாத்சாலியின் குடும்பத்தினர் மலர் தட்டு ஏந்தியவாறு சென்ற காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதை வைத்துக் கொண்டு, ஆசாத்சாலி மீதும் அவரின் குடும்பத்தவர்கள் மீதும் ஒரு சிலர் மிகக் கடுமையான விமர்சனங்களை வெளியிடத் தொடங்கினர். இந்தக் காட்சியை வைத்துக் கொண்டு இன்னுமொரு சாரார் ஆசாத்சாலி மீது சேறடிக்கும் முயற்சிகளில் இறங்கியிருந்தனர். இவ்வாறு செயற்பட்டவர்கள் யார் என்பதையும், அவர்களின் அரசியல் பின்னணி என்ன என்பதையும் 'பேஷ்புக்' தளத்தில் உலவுகின்றவர்கள் மிக எளிதாக அடையாளம் காண முடியும். 

விகாரையொன்றில் மலர்த்தட்டுடன் ஒருவரைக் கண்டுவிட்டால் - குறித்த நபர் இஸ்லாத்துக்கு மாறு செய்து விட்டார் என்கிற முடிவுக்கு வருவதும், அவர் இனி முஸ்லிம் அல்ல என்று தீர்ப்பளிப்பதும் கோமாளித்தனமான எத்தனங்களாகும். என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே – தீர்ப்புகளை வழங்கி விடுவதென்பது புத்திசாதுரியமானவர்களின் செயற்படாக இருக்க முடியாது.  

உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆசாத்சாலியின் புதல்வி ஆமீனா - ஊடகங்களுக்கு விளக்கியிருந்தார். ஆசாத்சாலியின் விடுதலைக்காக பௌத்த விகாரையொன்றில் சமய வழிபாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு நாகரீகம் கருதி அந்த இடத்துக்கு ஆசாத்சாலியின் குடும்பத்தினர் சமூகமளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர்கள் விகாரைக்குச் சென்றபோது, அங்கு நின்றவர்கள் இவர்களிடம் மலர் தட்டுக்களை நீட்டியிருக்கின்றார்கள். அது சங்கடமானதொரு நிலைவரமாகும். அதை எவ்வாறு சமாளிப்பதென யோசிப்பதற்கிடையில் இவர்களின் கைகளில் மலர்த்தட்டு வந்து விட்டது. அதைத்தான் தொலைக்காட்சிக்காரர்கள் படமெடுத்திருந்தனர். ஆனால், அந்த மலர்த்தட்டுக்களை உடனடியாகவே அங்கிருந்த பௌத்தர்களிடம் ஆசாத்சாலியின் குடும்பத்தவர்கள் ஒப்படைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

இது தற்செயலாக இடம்பெற்ற ஒரு விவகாரமாகும். ஆனால், இதை வைத்துக் கொண்டு சிலர் ஆசாத்சாலிக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியினை வெளிப்படுத்தினர். உண்மையில், ஆசாத்சாலியின் குடும்பத்தாருடைய செயல் தவறானது என்றால் கூட, அதை அவர்களிடம் பொருத்தமான நேரத்தில் - தனிப்பட்ட ரீதியில் கூறியிருக்கலாம். ஆனால், 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச'ப் பழகியவர்களிடம் இந்த நாகரீகத்தினை எதிர்பார்க்க முடியாது. ஆசாத்சாலியைக் கைது செய்து தடுத்து வைத்திருந்தவர்களுக்கும் - ஆசாத்சாலியின் குடும்பத்தவர்கள் துயரம் நிறைந்ததொரு சூழ்நிலையில் இருந்தபோது, அவர்கள் மீது சேறடித்து மகிழ்ந்தவர்களுக்கும் இடையில் - பெருத்த வித்தியாசங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

'உரத்துக் குரல் கொடுப்போருக்கு என்னாகும்' என்பதை ஆசாத்சாலியின் கைது நடவடிக்கை உணர்த்தியிருக்கிறது. சும்மாவே பேசுவதற்கு அச்சப்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் - இனி, 'காத்து' விடுவதற்கே யோசிப்பார்கள். இதேவேளை, இன்னுமொரு தடவை ஆசாத்சாலியை இப்படியானதொரு நிலைக்குப் பலிகொடுக்க அவரின் குடும்பம் துணியாது. ஆக, முஸ்லிம் சமூகத்தின் முகத்தில் - இனி, பொதுபலசேனாவினர் 'மூத்திரம் அடித்தாலும்' கேட்பதற்கு ஆளிருக்கப் போவதில்லை.

முஸ்லிம் தலைவர்கள் சரணாகதி அரசியல் செய்வதற்குத் தீர்மானித்த பின்னர் ஏற்பட்ட இழிநிலைதான் இதுவாகும். 'விருப்பமற்ற மனைவியுடன் காலங்கடத்தும்' சொரணை கெட்ட மனநிலையுடன், இந்த அரசாங்கத்தோடு ஒட்டியிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் இவ்வாறானதொரு நிலைவரம் உருவாகுவதற்குக் காரணமானவர்கள். பேரினவாதிகளுக்கு எதிராக ஆசாத்சாலி பேசிக் கொண்டிருந்த போது - அரச தரப்பிலிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அசௌகரியப்பட்டார்கள். பேரினவாதத்துக்கு எதிராக ஆசாத்சாலி பேசியபோது – தமக்காகப் பேசாமலிருப்பவர்கள் குறித்து முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். இனி, அவ்வாறானதொரு சங்கடம் - ஆட்சியிலிருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இல்லை.

ஆசாத்சாலி குறித்து – முஸ்லிம் அரசியல் தலைமைகள் அலட்சியமாக இருந்தபோதும், முஸ்லிம் மக்கள் தமது அன்பினையும், அக்கறையினையும் வெளிப்படுத்தியிருந்தனர். ஆசாத்சாலியின் கைது நடவடிக்கையினைக் கண்டித்து நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும், அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டமையானது இதற்கு உதாரணங்களாகும். மக்களைப் பற்றிச் சிந்திக்கும் தலைவர்கள்தான், மக்களால் நேசிக்கப்படுகின்றவர்களாக இருப்பர். மக்களைப் பற்றி பேசாதவர்கள் குறித்து – மக்கள் அக்கறைப்பட மாட்டார்கள்.

காலச் சக்கரம் சுழன்று வரும் ஒரு நாளில் - இப்போது மௌனித்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் - மக்களின் கோபத்தினை புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள்!
·

7 comments:

  1. This is the True Information of the present situation...
    Thank you Brother and Jaffna Muslim...
    "Will See what will happen next...!!!"
    We are praying and waiting for Azaath Saly that he will join with us soon to protect our muslim community...
    - Jaazy Hamaam (Qatar) -

    ReplyDelete
  2. இனி மலர்தட்டு ஏந்துவதும் நமது கலாசாரம் ஆகலாம், ஏன் அந்நிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதையே முன் உதாரணமாக கொண்டு மலர்தட்டு ஏந்த நிர்பந்திக்க படின் அதட்கு எதிராக நம்மால் குரல் கொடுக்க முடியாது ? இனி இன்னொறு அரசிய்ல்வாதி செய்ய போகும் ஒரு விடயதிகு இது முன் உதாரணமாக காட்டபடுவதும் தவிர்க முடியாதது. குரல் கொடுத எலோருமே மீடியாவில்தன் குரல் கொடுத்தனர் சட்டபடி எதுவுமே செய்ய யாறுக்குமே தோன்றவில்லை அது ஏன்? சட்டபடி அன்றி வேரெந்த குரல் உறுப்படியான குரல் ஆக இருக்கும்

    இனி பொதுபலசேனை நமக்கெதிராக செயல்பட ஒன்றுமே இல்லை எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளின் குடும்பங்கள் போல் எமது பாட்சாலை மாணவிகள் பர்தா இல்லாமல் கல்வி பயில்வதிலோ பல்கலைகழகம் செவதிலோ அரச சேவையில் ஈடுபடுவதிலோ நமகென்ன ஆட்சேபனை? எல்லாமே பொது பலசேன விரும்பும் பாரபரிய முஸ்லிம்களின் நடத்தையாக மாறிவிட்டால் இனி இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை?

    ReplyDelete
  3. விடுதலையான பின்னர் அஸாத் சாலியின் அறிக்கைகளைப் பார்க்கும் போது, அவர் அமைதியாக இருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  4. jaffna muslim சில ஆரோகியமான கருதுகலை போடாமல் விடுவது வேதனையாக உள்ளது சிர்கான விடயங்களை சுட்டிகாடும்போது போடுவது முக்கியம் commence போடுபவர்கள் அவர்களின் கருத்துகளை போடுவதுக்கு செலவிடும் நேரத்தை jaffna Muslim மதிக்க வேண்டும் வேலை வெட்டி இல்லாதவர்கள் மட்டும் commence போடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. I will not comment any more. Bcoz lot of my comments against to our muslim mp s was not publishedi
      I support AsadSally as well as against to shirk. But i didnt comment to harm them. I want them to realise mistakes

      Delete
  5. தம்பி,
    அஸாத் ஸாலி அவர்கள் யாரும் களத்தில் குதிக்காது கைகட்டி நின்றபோது எதிர் விளைவுகளைப் பற்றி சிந்திக்காது துணிச்சலுடன் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்த ஓர் இஸ்லாமிய சகோதரர் என்பதில் சந்தேகமே இல்லை. பொது பல செனாவின் அட்டகாசங்களை போட்டாக்களை எடுத்துக் காட்டி நேர்காணல் ஒன்றில் தைரியமாக அள்ளிக் கொட்டிய வீரர். இயக்கங்களைக் காட்டிக் கொடுத்து சுயநலம் பார்க்காது முஸ்லிம்கள் அனைவரையும் ஒரே குடும்பமாகவே கருதியவர். இவ்வாறு இந்நாட்டு முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் சார்பாக குரல்கொடுத்த ஓர் மாமனிதரின் மனைவியும், மகளும் விகாரையில் மலர் தட்டேந்தி நிற்பது எவ்வளவு மோசமான செயல் என்பதைத் தாங்க முடியாமலே பலரும் பல விதமாக எழுதத் தலைப்பட்டனர்.
    தம்பி, நீங்கள் அஸாத் சாலி எமக்காகச் செய்த ஏராளமான சேவைகளைப் பட்டியலிட்டுள்ள அதே சமயம் ''பள்ளிவாசல்களுக்குச் சென்று அவர்கள் பிரார்த்தனை செய்தனர், பௌத்த விகாரைகளில் அஸாத் சாலியின் விடுதலைக்காக நடாத்தப்பட்ட சமய வழிபாடுகளில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்'' என மிக சிம்பலாக எழுதியுள்ளீர்கள்.
    தம்பி உங்கள் கவனத்திற்கு:
    1. அஸாத் சாலி மீதும், அவரின் குடும்பம் மீதும் இருந்த ஈமானிய இரக்க உணர்விலே சிலர் விமர்சனங்களை எழுதியிருப்பர்.
    2. பௌத்த விகாரையில் நடைபெறும் சமய நிகழ்ச்சிகளில் பார்வையாளராகக் கலந்து கொள்வதும் தவறு என்பதை சிலவேளை சகோதரிகள் அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் அதனை சாதாரணமாக எழுதியுள்ளீர்கள்.
    3. சிர்க் (இணை வைத்தல்) அல்லாஹ்விடம் மன்னிக்கப்படாத குற்றம் என்பதாலே உண்மையை எத்தி வைக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து சிலர் எழுதியிருக்கலாம்.
    4. தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்திருந்தால் அது தனிப்பட்ட சிலரின் தவறுதான்.
    5. பெண்கள் பிரார்த்தனைகள் செய்வதற்காகக் கூட பள்ளிவாசல்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. வீட்டிலேயே பிரார்த்திக்கலாம்.
    6. முறையான விமர்சனங்கள், மார்க்கத் தீர்ப்புக்களைப் பகிர்ந்துகொள்வது புத்திசாதுரியமானவர்களின் செயற்பாடே.
    வல்லவன் அல்லாஹ் அஸாத் சாலியின் குடும்பம் தவறிழைத்திருந்தால் மன்னிப்பானாக. உண்மை முஸ்லிம்களாக வாழ வழிகாட்டுவானாக.
    அஸாத் சாலிக்கு உடலாரோக்கியத்தையும, மன உறுதியையும் வழங்குவானாக.

    ReplyDelete
  6. தம்பி
    bbs முஸ்லிம்களின் முகத்தில் சிறுநீர் கழித்தாலும் ஆசாத் sally ய் விட்டால் வேற ஆள் இல்லை என்று சொல்வதும் சிர்கே அல்லாஹ் மீது உங்களுக்கு உறுதியான நம்பிக்கை வராவிட்டால் உங்கள் தியாகத்துக்கு அல்லாஹ் வின் கூலி கிடைக்காது ஆசாத் சாலி முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததில் no 1 அசாத் சாலி இல்லா விட்டால் அல்லாஹ் பல ஆசாத் சாலி களை உருவாக்கி இஸ்லாதியும் முஸ்லிம்களை யு ம் காபாதுவன்

    ReplyDelete

Powered by Blogger.