Header Ads



பெற்றோர்களே உங்களுடன்…!


(ஐ.எல்.எம். அஸ்வர். இஸ்லாமிய பல்கலைக்கழகம் - மதீனா)

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டு அறிவியற்கலைகள் வெடித்துச் சிதறும் யுகமாக வர்ணிக்கப்படுகின்றது.

சிங்கத்தின் குகையில் சிக்கித்தவிக்கும் மந்தைகள் போல் நாம் இந்த நவநாகரீக உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நூற்றாண்டு நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியின் காரணமாக உலகம் ஒரு பூகோள கிராமமாக மாறியிருக்கின்றது. இந்த அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக நாம் பல பயன்களைப் பெற்றுக்கொண்ட போதிலும் மறுபுறம் அதன் தாக்கம் எங்கள் வீடுகளுக்குள் விபரீதமாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளாவீர். ஒவ்வொருவரும் தமது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அதாவது தலைவர் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பொறுப்புதாரியாவார். அவர் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஓர் ஆண் தனது குடும்பத்தினருக்குப் பொறுப்புதாரியாவார். அவர் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தனது கணவனின் இல்லத்திற்குப் பொறுப்புதாரியாவாள். அவள் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு பணியாளர் தனது எஜமானின் பொருளாதாரத்திற்குப் பொறுப்புதாரியாவான். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளாவீர். ஒவ்வொருவரும் தமது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.  (புகாரி- முஸ்லிம்)

பேற்றோர்கள், பாதுகாவலர்கள் என்ற அடிப்படையில் உங்கள் பிள்ளைகள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. இதனையே மேற்சொன்ன நபி மொழியும் தெளிவுபடுத்துகின்றது.

இன்று தொலைத்தொடர்பு சாதனங்களான தொலைபேசி இன்டர்நெட் போன்றவை தமது வீடுகளுக்குள் சர்வசாதாரனமாக உபயோகிக்கப்படுகின்றன. இதன் மூலம் அதிகளவு அணுகூலங்கள் உள்ளது போல பிரதிகூலங்களும் உள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. 

பெற்றோர்களே! தமது இல்லங்களில் இவைகளின் பாவனை குறித்து மீள் பரிசீலனை செய்வது கட்டாய கடமையாகும். பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் ஆண், பெண் பிள்ளைகள் இதனை எவ்வாறு பயன் படுத்துகின்றனர்? அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகள் விடயத்தில மிக அவதானமாக செயற்படுங்கள்.

பாடசாலையில் கல்வி பயிலும் உங்கள் பிள்ளைகளுக்கு கைத்தொலைபேசி வாங்கிக் கொடுப்பதன் தேவை என்ன? அவ்வாறு கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்க வேண்டிய அத்தியவசியத்தேவை ஏற்படின் அதனை உங்கள் கண்காணிப்பின கீழ் வைத்திருப்பது உங்கள் கடமையல்லவா? அதன் மூலம் எமது பெண் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம். ஒரு மனிதனின் மானம் உயிரை விட மதிக்கத்தக்கது. உங்களது குடும்ப மானம், கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் குறிப்பாக உங்கள் பெண் பிள்ளைகள் விடயத்தில் கண்டிப்பாகவும் அவதானமாகவும் செயற்படுங்கள். 
தொலைபேசியினூடாக ஏற்படும் விபரீதங்கள் பற்றி நாளுக்கு நாள் ஊடகங்கள் வாயிலாக நாம் கேள்விப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம். எமது பிள்ளைகளும் அவ்வாறான விபரீதங்களில் சிக்கிக் கொள்ளாதிருக்க நம் பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக செயற்படவேண்டிய தேவையும் கடப்பாடும் எமக்கிருக்கின்றதல்லவா?  அல்லாஹுத்தஆலா அந்நிய  ஆண், பெண் உரையாடலின் விபரீதம் பற்றி பின் வருமாறு கூறுகின்றான்.

நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடப்பீர்களானால், குழைந்து பேசாதீர்கள் ஏனெனில் எவனது உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ அவன் ஆசை கொள்வான் இன்னும் நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். (அல்அஹ்ஸாப் 32)

தொலைபேசிக்கு அடுத்தபடியக எமது வீடுகளில் கணினியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றது. நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பாரிய பங்கு செலுத்தும் என்ற நற்பாசையில் பல பெற்றோர்கள் விலையுயர்ந்த கணினிகளை தங்கள் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு செய்கின்றனர். வாங்கிக் கொடுப்பது தவறு என நான் கூறமுற்படவில்லை. இதில் சாதகங்களுமிருக்கின்றன. பாதகங்களுமிருக்கின்றன.

உங்களது வீடுகளில் உங்கள் பிள்ளைகளின் பாவனையிலுள்ள கணினிகள் உங்கள் பார்வைக்கு எட்டிய தூரத்தில் உபயோகிக்கப்படுகின்றனவா என்பதை அவதானியுங்கள். கணினியறிவுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கணினிகளை சோதனை செய்து பாருங்கள். தயவுசெய்து உங்களது பிள்ளைகளை தனியறைகளில் கணினிப் பாவனைக்கு அனுமதியளிக்காதீர்கள். அது பெரும் பாதகங்களை ஏற்படுத்தலாம். 

ஒழுக்கமான பிள்ளைகளை  உருவாக்க வேண்டியது பெற்றோர்களாகிய எங்களின் கடமையல்லவா?  நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் விசாரணை செய்யப்படுவோம் என்பதை ஒரு முறை ஞாபகமூட்டுகின்றேன். 

இதனையே அல்குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகின்றது.
 (நபியே ) இன்னும் நீர் ஞாபகமூட்டுவீராக. ஏனெனில் நிச்சயமாக ஞாபக மூட்டுதல் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். (அத்தாரியாத் 55)

குறிப்பாக உங்களது பெண்பிள்ளைகள் மேற்படிப்பை தொடர வாய்புக்கள் கிடைத்தால் அவர்களை உங்கள் கண்காணிப்பின் கீழ் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள். ஒரு பெண் ஒரு மஹ்ரம் இல்லாமல் பிரயாணம் மேற்கொள்வதும், தனித்திருப்பதும் இஸ்லாத்தில் ஹராமாகும். இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. தெரிந்துகொண்டு ஹராத்தை செய்யத் துணிய வேண்டாம். இதனை பின்வரும் நபி மொழி தெளிவு படுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "உங்களில் ஒரு பெண் மஹ்ரமில்லாமல் பிரயாணம் மேற்கொள்ளவோ தனித்திருக்கவோ வேண்டாம். (புஹாரி, முஸ்லிம்)

கல்வி என்பது ஒழுக்கமான,  நாகரீகமான சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒழுக்கமில்லாக் கல்வி சுவரில்லா சித்திரம் போன்றதாகும். 

ஒழுக்கமான நாகரீகமான எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டியது பெற்றேர்களாகிய நமது கடமையல்லவா? இஸ்லாத்தின் நிழலில் நமது பிள்ளைகளை வழி நடத்த வேண்டும். பாடசாலைக் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்று மார்க்க விடயங்களை கற்பதற்கும் நாம் முக்கியத்துவமளிக்க வேண்டும். நாம் நமது பிள்ளைகள் விடயங்களில் பொடுபோக்காக இருப்போமெனில் அது நமது பிள்ளைகளுக்கு செய்யும் துரோகம் மாத்திரமல்ல. எதிர்கால சந்ததியினருக்கு செய்யும்  துரோகம் என்பது நினைவில் பதியட்டும்.

தொலைபேசி கணினி மற்றும் ஏனைய தொலைத்தொடர்பு சாதனங்களை இஸ்லாத்தின் வரையறைக்குள் பயன் படுத்துவதற்கான வழிகாட்டல்களை  தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும். அவர்கள் தவறிச்செல்லும் பட்சத்தில் அவர்களை நாம் நெறிப்படுத்த வேண்டும்.  

எனவே, இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைகளில் உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்யுங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உபதேசம் செய்ய வேண்டும் என்பதற்கு சிறந்த முன்மாதிரியாக  லுக்மான் என்ற இறைநேசர் தனது மகனுக்கு செய்த நல்லுபதேசத்தை அல்குர்ஆன் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றது.

 "இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு, ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே, நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும். என்று நல்லுபதேசம் செய்து கூறியதை நினைவுபடுத்துவீராக."

 "நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி போதித்துள்ளோம். அவனுடைய தாய் பலயீனத்தின் மேல் பலயீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்.  இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்தலில் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே, நீ அல்லாஹ்வுக்கும்  உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக." 

"ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்.  ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்."

"லுஃக்மான் தம் புதல்வருக்கு என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளதாயினும், அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்.  நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; நன்கறிபவன்."

"என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக. உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக. நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்."

"பெருமையோடு உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! புமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்."

"உன் நடையில் நடுத்தரத்தை மேற்கொள். உன் குரலையும் தாழ்த்திக் கொள். குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்." (லுக்மான் 13-19)

எனவே, இஸ்லாத்தின் வழிகாட்டலில் உங்கள் பிள்ளைகளை பயிற்றுவித்து இஸ்லாத்தின் நிழலில் வார்த்தெடுக்கப்பட்ட உன்னத பிரஜைகளாக வளர்த்தெடுப்பது ஒவ்வொரு பெற்றோர்கள் மீதும் கடமையாகும்.
  

No comments

Powered by Blogger.