Header Ads



பங்களாதேஷ் கட்டட விபத்தில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்



(TN) பங்களாதேஷில் இடிந்து விழுந்த 8 மாடி கட்டட இடிபாடுகளில் நான்கு தினங்கள் சிக்கியிருந்த 21 வயதான மரினா கதுன் என்ற பெண், “தாம் மரணத்தை எதிர்பார்த்திருந்ததாக” குறிப்பிட்டுள்ளார். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அனுபவம் குறித்து கதுன், பி.பி.சி. பங்காளி மொழி சேவைக்கு நேற்று புதன்கிழமை பேட்டியளித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே அவர் பேட்டி அளித்தார்.

“கட்டடம் இடிந்து விழும் போது நான் மூன்றாவது மாடியில் இருந்தேன். அனைத்தும் திடீரென நிகழ்ந்தது. கூரை இடிந்து விழா ஆரம்பித்தது. நான் தப்புவதற்காக மாடிப் படியை நோக்கி ஓடினேன். ஆனால் கூரை வேகமாக வந்து விழுந்தது. நான் உடனடியாக பாரிய இயந்தரம் ஒன்றுக்கு அருகில் படுத்துக் கொண்டேன். அந்த இயந்திரம் என்னை உயிருடன் காப்பாற்றியது” என்று கதுன் விவரித்தார்.

“எனது சகோதரியும் அந்த கட்டடத்தில் பணிபுரிந்தார். ஆனால் அவர் விரைவாக மீட்கப்பட்டார். ஆனால் நான் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டேன். எனக்கு அருகில் ஒரு பெண் இறந்து கிடந்தாள். ஒரு சிலர் அங்கு தப்பியிருந்தனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த கதுனிடம் ஒரு தண்ணீர் போத்தல் மாத்திரமே இருந்துள்ளது. அதுவும் விரைவில் தீர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். ஒருசிலர் தனது சிறுநீரை குடிக்க ஆரம்பித்துவிட்டதாக கூறிய கதுன், தான் அவ்வாறு செய்யவில்லை என தெரிவித்தார்.

“என்னுடன் சிக்கியிருந்த ஒருவர் சுயநினைவை இழந்துவிட்டார். ஒரு தருணத்தில் அவர் என்னை கடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர், எனது மகனை கொண்டுவா என கத்த ஆரம்பித்தார்” என்றும் கதுன் விபரித்தார்.

“நான் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒவ்வொரு தருணமும் எனது மரணத்தை எதிர்பார்த்திருந்தேன். ஏனென்றால் அங்கு உயிர் தப்புவதற்கு போராட வாய்ப்பு இல்லாத நிலையில் பெரும் பயங்கரமாக இருந்தது. நம்பிக்கைக்கும், நம்பிக்கை இன்மைக்கும் இடையில் போராடிக் கொண்டிருந்தேன். ஒரு சில வேளைகளில் மூச்சு விடக்கூட கடினமாக இருந்தது. என்னிடம் கையடக்க தொலைபேசி இருந்த போதும் அது வேலை செய்யவில்லை. மூன்று நாட்கள் படுத்தவண்ணம் உணர்ச்சியுடன் இருந்தேன். நான்காவது நாளாகும் போது உணர்ச்சியின்றி இருந்தேன்” என்று அவர் அழுதவண்ணம் குறிப்பிட்டார்.

கட்டடத்திற்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் கட்டடம் இடிந்த புதன்கிழமை ஏன் அங்கு சென்aர்கள் என மரினா கதுனிடம் கேட்ட போது, அன்றைய தினத்தில் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடைக்காது என தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் எச்சரித்ததாக குறிப்பிட்டார்.

“பலருக்கு கட்டடத்திற்குள் செல்ல விருப்பம் இருக்கவில்லை. அது குறித்து மேற்பார்வையாளரிடம் விவாதித்தோம்” என்றும் கதுன் குறிப்பிட்டார். கட்டடம் பாதுகாப்பானது என கட்டட உரிமையாளர் வலியுறுத்தியதாக கதுன் உட்பட மீட்கப்பட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 24ம் திகதி புதன்கிழமை இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து மீட்பு பணியாளர்களால் கதுன் கடந்த சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டார்.

“நான் சுயநினைவை பெற்ற போது மருத்துவமனை கட்டிலில் இருந்தேன். சுயநினைவை பெற்றதும் எனது பெற்றோரை பார்க்க வேண்டும் என கோரினேன். எனது தலை மற்றும் இடுப்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. எல்லாம் சரியாகிவிடும் என மருத்துவர்கள் குறிப்பிட்டனர்” என்று கதுன் குறிப்பிட்டார். இன்னும் திருமணம் முடிக்காத கதுன் ஆறுபேர் கொண்ட குடும்பத்தில் ஒருவராவார். 

அவரும், அவரது சகோதரியுமே வீட்டில் அடுப்பு எரிவதற்கு சம்பாதித்து வந்துள்ளனர்.

தமது எதிர்கால திட்டம் குறித்து மரினா கதுனிடம் கேட்ட போது, “இனியும் ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்க மாட்டேன். எனது ஊருக்கு போகப் போகிறேன். ஒரு தையல் இயந்திரத்தை வாங்கி தனியாக தைக்கப்போகிறேன்” என்றார்.



1 comment:

  1. dont say saved by machine , say allah only saw ur live be-course still have water and food

    ReplyDelete

Powered by Blogger.